சசிகலா அரசியலுக்கு திரும்புவது அதிமுக வில் எதை உணர்த்துகிறது?

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகாக, முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு உயர்மட்ட தலைவர்களுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சசிகலா இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, கட்சியில் இணைவதற்கான திட்டங்களை இயக்கி வருகிறார்.

தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகலா அறிவித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்கான சமிஞ்சைகளை அதிமுக மற்றும் அமமுக வட்டாரங்களுக்கு அனுப்பி வருகிறார்.

சசிகலாவின் இந்த செயலுக்கு பின்னால் மறைந்துள்ள காரணம் என்ன..?

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், தண்டனைப் பெற்றதை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. 4 ஆண்டுகள் தண்டனை காலம் முடிந்து, கடந்த ஜனவரியில் சசிகலா விடுதலையானார். சசிகலா விடுதலையின் போது, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகி, அரசியல் களம் சூடுபிடித்த நிலையில், சசிகலா பெரும் பேசுபொருளானார். விடுதலைக்கு பின்னர், சசிகலா தன்னை அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்ள கடும் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், மத்திய அரசின் அழுத்தங்களினால் அவரின் முயற்சி தோல்வியடைந்தது. அந்த நிலையில், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்க்கு ஒரு மாதத்திற்கு முன்பாக தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இது, தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகாக, முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு உயர்மட்ட தலைவர்களுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், சசிகலா இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு, கட்சியில் இணைவதற்கான திட்டங்களை இயக்கி வருகிறார். ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் பிளவே, சசிகலா தமிழக அரசியல் களத்தில் மீண்டும் கால் பதிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக வெற்றி பெறுவது தெளிவாக இருந்தது. அப்படியிருந்தும், பாஜக தலைமை சசிகலாவுக்கும், அதிமுக முகாமிற்கும் இடையே தேர்தலுக்கான பேச்சுவார்த்தைளை நடத்தியதாக, சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. சசிகலா விடுதலையான பின், அரசியல் மறுபிரவேசத்தை தொடங்குவதற்கு ஓபிஎஸ் ஆதரவளித்த நிலையில், அதை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக எதிர்த்தார். சசிகலாவையும், தினகரனையும் மீண்டும் கட்சிக்குள் இணைத்தால், சசிகலா கட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடுவார் என, பழனிச்சாமி பயந்தார். இந்த நிலையில், வருகின்ற ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில், மாநில அளவிலான சுற்றுப்பயணத்துடன் சசிகலா அரசியல் பணியைத் தொடங்க வாய்ப்புள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சசிகலாவின் வருகை அதிமுக வில் எவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும்..?

அதிமுக வில் வரும் வாரங்களில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் முகாம்களுக்கு இடையிலான மோதல் அதிகரிக்கும் என்று சசிகலா தரப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவர்கள் இருவரும் அதிமுக வின் ஒற்றை தலைமைக்கு மோதிக்கொள்ளும் சமயத்தில், சசிகலாவின் இலக்கு எடப்பாடி பழனிசாமி தான் என தெரிய வருகிறது. அதிமுக வின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்றால், சசிகலாவிற்கு பன்னிர்செல்வம் ஆதரவளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சசிகலா தரப்புடன் தொடர்பு கொண்ட அதிமுக தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பன்னீர்செல்வத்தை ஒரு எம்.எல்.ஏ மற்றும் ஒரு எம்.பி. மட்டுமே ஆதரிக்கிறார், மற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் பழனிசாமியை ஆதரிக்கின்றனர். கொங்கு மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த இன்னும் சில எம்.எல்.ஏ.க்களும் சசிகலா முகாமில் சேரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய வாரங்களில் பல செயல்பாடுகளில், தி.மு.க அரசு பன்னீர்செல்வத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சூழலில், திமுக வின் இந்த நடவடிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சசிகலா ஏன் பன்னீர்செல்வத்தை அல்லாமல் பழனிச்சாமியை குறி வைக்கிறார்..?

சசிகலா, ஓபிஎஸ் – ஈபிஎஸ் என இருவருடனும் தனித்தனி அதிகார மோதலில் ஈடுபட்டுள்ளார். 2016 டிசம்பரில் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, சசிகலாவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி, கட்சியில் கிளர்ச்சியை நடத்தியது பன்னீர்செல்வம் தான். மறுபுறம், பழனிசாமி, 2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெங்களூரு சிறைக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, சசிகலாவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர்.

சசிகலா பன்னீர்செல்வத்தின் பெயரை பரிந்துரைத்திருந்தார். அது ஜெயலலிதா தான் 2001 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அவரை முதல்வராக ஆக்கியது. ஆனால் பழனிசாமியைப் பொறுத்தவரையில், ஒரு முக்கியமான கட்டத்தில் முதல்வர் பதவிக்கு அவரைத் தேர்ந்தெடுத்தது சசிகலா தான் என, சசிகலாவுக்கு நெருக்கமான ஒரு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து பேசிய சசிகலா தரப்பு நிர்வாகி ஒருவர், ‘அதிமுகவின் வளங்களை கையாளும் பணி சசிகலாவுக்கு இருந்தது. ஆனால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அவர் கட்சிக்கு திரும்புவதற்கான முக்கிய தடையாக பழனிச்சாமி மாறினார். பன்னீர்செல்வம் பாஜக-ஆர்எஸ்எஸ் தலைமையில் சிக்கிய ஒரு பாதிப்பில்லாத தலைவராக பார்க்கப்படுகிறார். அவர் தவறை உணர்ந்ததும், தினகரனை சந்தித்தார். இருவருக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் ஏற்பட்டது. ஆனால் பழனிசாமி தனது சக்தியைப் பயன்படுத்தி சசிகலாவை வெளியேற்றுவது மட்டுமல்லாமல் கட்சியைக் கைப்பற்றவும் செய்தார். மேலும், பன்னீர்செல்வத்தையும் தற்போது ஓரங்கட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.

சசிகலா அதிமுக வில் இணைந்தால் தினகரனின் நிலை என்ன..?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தினகரன் தலைமை தாங்கி வருகிறார். தினகரன், சசிகலா முகாமின் அரசியல் முகமாக விளங்கி வருகிறார். சசிகலா மீண்டும் அரசியலுக்கு வர திட்டமிட்டால், அவர் ராஜ்மதாவாக இருப்பார் என தினகரனுக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டின் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றதன் மூலம், சசிகலா இல்லாத நிலையில் தினகரனின் தலைமை நன்றாக இருந்தது. ஆனால் சட்டமன்றத் தேர்தலில் வெறும் 2.35% வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரது ஆதரவு தளம் தற்போது சரிந்துள்ளது. தினகரன் உள்பட அனைத்து இடங்களிலும் அமமுக தோல்வியை தழுவியுள்ளது. ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்களிலும், சில தெற்கு மாவட்டங்களிலும் அதிமுக வின் வெற்றி வாய்ப்பை பாதித்துள்ளது. முந்தைய காலங்களில், கொங்கு மண்டலத்தில் உள்ள கரூரைச் சேர்ந்த சக்திவாய்ந்த அதிமுக தலைவரான செந்தில் பாலாஜி போன்ற, தினகரனின் நெருங்கிய உதவியாளர்கள் பின்னர் திமுகவில் சேர்ந்து இப்போது அரசாங்கத்தில் அமைச்சரவை இடத்தைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில், தினகரன் தன்னுடன் நின்ற பல நம்பிக்கைக்குரிய தலைவர்களை ஏமாற்றத் தொடங்கினார். எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் குறித்த சட்ட ரீதியிலான பிரச்னைகளில், அவர் தனது கட்சிக்கு குந்தகம் செய்து கொள்வதை நிரூபிக்கும் சில முடிவுகளை தானாகவே எடுத்தார். மேலும், அவரை நம்பிய எம்.எல்.ஏ.க்களின் அரசியல் வாழ்க்கையையும் மோசமாக பாதித்தார். அதிமுகவில் மீண்டும் அதிகாரத்தை பெற விரும்பினால், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கு முன்பாக அந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என, சசிகலாவுடன் தொடர்பு கொண்ட மூத்த அதிமுக தலைவர் ஒருவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What sasikalas return could mean for aiadmk and tamil nadu

Next Story
நோயாளிகளின் வயது நோய்த்தொற்று அளவை எவ்வாறு வேறுபடுத்துகிறது?How infectiousness levels vary with patients age Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com