கடந்த வியாழக்கிழமை ஹமாஸ் படை தலைவரான யஹ்யா சின்வார் இஸ்ரேல் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், சின்வாரின் மரணம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: What the killing of Yahya Sinwar means for Hamas and the war in Gaza
கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஹமாஸின் தலைவராக யஹ்யா சின்வார் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது தொடங்கப்பட்ட ஆயுதப்படை தாக்குதலுக்கு யாஹ்யா சின்வார் முக்கிய பங்காற்றினார் . அதன்பேரில், யாஹ்யா சின்வாரை கொலை செய்வதை தங்கள் முதன்மை பணியாக இஸ்ரேல் கருதியது.
சின்வாரின் மரணம் காஸாவில் நடைபெறும் போரில் என்ன தாக்கத்தை உருவாக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு முன்பாக, ஹமாஸ் படையினருக்கு சின்வார் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஹமாஸ் படையில் ஆளுமை மிகுந்த நபராக யாஹ்யா சின்வார் கருதப்பட்டு வந்தார். முன்னதாக ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே, மிலிட்டரி கமாண்டர் முகம்மது டெயிஃப் ஆகியோரை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்தது. அதன் பின்னர், முக்கிய முடிவுகளை தனிச்சியாக எடுக்கும் அதிகாரமிக்க நபராக யாஹ்யா சின்வார் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதாக, டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் முதன்மை ஆராய்ச்சியாளாராக விளங்கும் ஹரெல் கோரெவ் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ராணுவத்தினரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த போதிலும், காஸாவிலேயே சின்வார் தங்கியிருந்தார். அங்கிருந்து ஹமாஸின் ராணுவ தளவாடங்களை அவர் மேற்பார்வையிட்டு வந்தார். மேலும், மற்ற ஹமாஸ் தலைவர்கள் தலைமறைவாக இருந்த போது படுகொலை செய்யப்பட்டனர். ஆனால், சின்வார் மட்டுமே போர்க்களத்தில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் சிறையில் இருந்த சின்வார், கடந்த 2011-ஆம் ஆண்டு கைதிகள் மாற்று ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார். இஸ்ரேல் ராணுவத்தினரை படுகொலை செய்த குற்றத்திற்காக 4 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சின்வார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு, ஹமாஸ் படையின் அரசியல் பிரிவு தலைவராக சின்வார் பொறுப்பேற்றார். காஸா முழுவதிலும் கடத்தலை விரிவுபடுத்தவும், எகிப்துடனான உறவை மேம்படுத்துவும் சின்வார் பங்காற்றினார். மேலும், இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸை வீரியமாக செயல்படுத்தியதில் சின்வாரின் பங்கு முக்கியமானது.
சின்வாரின் இழப்பு ஹமாஸின் வளர்ச்சிக்கு தடையாக அமையுமா?
இக்கேள்விக்கு உறுதியான பதிலை வழங்க முடியாத சூழல் நிலவுகிறது என்பதே நிதர்சனம். சின்வாரின் மரணம், ஹமாஸ் அமைப்பில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சின்வாருக்கு மாற்றாக கருதப்படும் காலித் மாஷலும் ஆளுமை கொண்டவர் தான். எனினும், சின்வார் அளவிற்கு களத்தில் பணியாற்றி ஹமாஸ் அமைப்பை முன்னேறச் செய்வதில் மிகப்பெரிய சவால்கள் அவருக்கு எதிராக உள்ளது.
எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்தபடி, ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழிக்கப்படவில்லை என்றும், இனி வரும் காலங்களில் காஸாவில் முன்னேறிச் செல்ல இஸ்ரேலுக்கு சவால் நிறைதிருக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சின்வாரின் மரணம் ஹமாஸின் முற்றுப்புள்ளியாக நிச்சயம் இருக்காது என ஆராய்ச்சியாளர் ஹூசைன் இப்லிஸ் தெரிவித்துள்ளார். ஹமாஸ் மேலும் தீவிரமாக போரிடும் எனத் தான் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கிளர்ச்சிக்கு விரிவான கட்டுப்பாடோ அல்லது கவர்ச்சிகரமான தலைமையோ தேவையில்லை எனவும் இப்லிஸ் தெரிவித்துள்ளார்.
சின்வாரின் மரணம் இஸ்ரேலின் வெற்றியை குறிக்கிறதா?
சின்வாரை அழிப்பதை தான் முதன்மையான காரணியாக கொண்டு இஸ்ரேல் களமாடியது. இஸ்ரேல் ராணுவம் அதில் வெற்றியும் கண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவர்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை உலகறியச் செய்துள்ளதாகவும், தர்மத்தின் மூலம் அநீதி தோற்கடிக்கப்பட்டதாகவும், நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
சின்வாரின் மரணம் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கும், இஸ்ரேல் பணையக் கைதிகளை திரும்பி பெறுவதற்கும் வழி வகுக்கும் எனக் கருதப்படுகிறது. ஹமாஸ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சின்வார் ஒரு தடையாக இருந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேல் பணையக் கைதிகளை திரும்பப் பெறுவது அரசியல் ரீதியாக நெதன்யாகுவுக்கு மிக முக்கியமான காரியம். பணையக் கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இஸ்ரேல் வீதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பணையக் கைதிகளை சிறைபிடித்திருப்போர் தங்கள் ஆயுதங்களை விடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும், அவ்வாறு செய்பவர்களை நிச்சயம் பிழைத்திருக்க அனுமதிப்போம் எனவும் நெதன்யாகு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணையக் கைதிகளை விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தைக்கு, சின்வாரின் வெற்றிடத்தை இஸ்ரேல் பயன்படுத்திக் கொள்ளும் என வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
போர் நிறுத்தம் எனக் கருதலாமா?
போர் இன்னும் முடிவடையவில்லை என கடந்த வியாழனன்று நெதன்யாகு தெரிவித்தார். பணையக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுதலை செய்தாலும், தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக நெதன்யாகு போர் தொடர்வதையே விரும்புவார் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர். முழுமையான வெற்றி என்ற தெளிவின்மையான குறிக்கோளை அவர் பிரகடனப்படுத்த முயசிப்பார் எனவும் ஒரு கூற்று இருந்து வருகிறது. அவரது வலதுசாரி கூட்டணியினரும் அதற்கு ஒத்துழைப்பார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.