டெல்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு முன்பாக, எச்ஐவி மருந்துகள் தட்டுப்பாட்டை எதிர்த்து கடந்த 5 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏன் போராட்டம்?
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக எச்ஐவி மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 50,000 மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இதற்கு தீர்வு கிடைக்க போராட்டக்காரர்கள் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு முன்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஜூலை 21ம் தேதி போராட்டம் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் டொலுட்டிகிராவிர் -50 மில்லி கிராம் ( dolutegravir-50mg) என்ற எச்ஐவி நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துக்கு கடந்த மூன்று நாட்களாக தட்டுபாடு நிலவுகிறது.
போராட்டக்கரர்களின் ஒருவரான ஹரிசங்கர் கூறுகையில் “கடந்த 5 மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் , எச்ஐவி மருந்துக்கான தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகளை கொள்முதல் செய்வதில் தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர் அதிகாரிகளை சந்திப்பதால் பிரச்சனை தீரவில்லை. இதனால் தற்போது போராட்டத்தில் ஈடுபடுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள உயர் அதிகாரி ஒருவர் பேசுகையில், “ மருந்துகள் தட்டுபாட்டு ஏற்பட்டது உண்மைதான். ஆனால் 3 லட்சம் டோஸ் எச்ஐவி மருந்துகளை மார்ச் மாதத்தில் வாங்கி தட்டுபாட்டை சரி செய்துள்ளோம். மேலும் புதிய மருந்துகள் இன்னும் 15 அல்லது 20 நாட்களில் வந்துவிடும். ஆகஸ்டு முதல் வாரத்திற்குள் நிலை சரியாகிவிடும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டக்காரர்களில் ஒருவரான ஜெய் பிரகாஷ் கூறுகையில், “ நாட்டில் உள்ள அனைவருக்கும் எச்ஐவி மருந்துகள் முறையாக கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளியால் 5 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவமனைக்கு வந்து மருந்துகள் பெற இயலாது” என்று அவர் தெரிவித்தார்.
எச்ஐவி நோய்க்கு தற்போது உள்ள மருந்துகள்
6 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை டொலுட்டிகிராவிர் (dolutegravir) என்ற மருந்தை எடுத்துகொள்வது சிறந்தது என்று தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
போராட்டக்கார்களில் ஒருவர் கூறிகையில், ஆர்எம்எல் என்ற மருத்துவமனையில் எச்ஐவி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் நீவைரப்பின் சிரப் nevirapine syrup தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் 4 நாட்களில் காலாவதியாகும் சிரப்பைத்தான் குழந்தைகளுக்கு கொடுத்து வருகின்றனர். புதிய சிரப் வந்ததால்தான் அதை குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். அதுவரை இதைத்தான் கொடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளதாக” அவர் கூறினார்.
இந்த தட்டுபாட்டால் என்ன ஆகும்?
இந்தியாவில் எச்ஐவி பாதிகப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சரியான சிகிச்சை வழங்கப்படுவதால் நோய் தன்மை கட்டுக்குள் உள்ளது. இதனால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்த தட்டுபாட்டால் நோய் மேலும் மோசமடையும் என்றும் கூடுதல் நபர்கள் மரணமடையவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.