Advertisment

புராதன சின்னங்களில் வழிபாட்டு அனுமதி; தொல்பொருள் துறை விதிகள் கூறுவது என்ன?

ஜம்மு காஷ்மீரில் புராதன சின்னங்களில் வழிபாடு நடத்தப்பட்ட சர்ச்சை; வழிபாட்டு அனுமதி குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை விதிகள் கூறுவது என்ன?

author-image
WebDesk
New Update
புராதன சின்னங்களில் வழிபாட்டு அனுமதி; தொல்பொருள் துறை விதிகள் கூறுவது என்ன?

Divya A

Advertisment

Explained: When prayers are allowed, not allowed at protected archaeological sites: கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் உள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்டண்ட் சூரியன் கோயிலின் இடிபாடுகளில் பூஜைகள் நடைபெற்ற நிலையில், இது குறித்து இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) முறையான புகார் அளிக்கவில்லை என்றாலும், மாவட்ட நிர்வாகத்திடம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.

கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ASI, பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பாதுகாவலராக உள்ளது. இந்த சம்பவம் ASIன் விதிகளை மீறிய செயல் என்று ASI கருதியது. அதன் வரம்புக்கு உட்பட்ட சில நினைவுச்சின்னங்களில் வழிபாடுகளை அனுமதிக்காத ASI விதிகள் குறித்தும், மற்றும் வேறு சில இடங்களில் மத சடங்குகள் ஏன் அனுமதிக்கப்படுகின்றன என்பது குறித்தும் இப்போது பார்ப்போம்.

ASI அதிகாரிகளின் கூற்றுப்படி, அதன் பாதுகாக்கப்பட்ட தளங்களில் பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படும், ஆனால் அந்த நினைவுச் சின்ன தளங்களை ASI எடுத்துக் கொள்வதற்கு முன்னர், அவை "செயல்படும் வழிபாட்டுத் தலங்களாக" இருந்தால் மட்டுமே வழிபாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். " ASI -பாதுகாக்கப்பட்ட தளமாக மாறிய பின்னர், வழிபாடுகள் அதுவரை நடந்திராத நினைவுச்சின்னங்களில் எந்த மத சடங்குகளையும் நடத்த முடியாது" என்று ASI அதிகாரி ஒருவர் கூறினார்.

ASI ஆல் பராமரிக்கப்படும் 3,691 மையப் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களில், நான்கு மடங்கிற்கும் (820) சற்று குறைவான தளங்களில் மட்டுமே வழிபாட்டுத் தலங்கள் உள்ளன, மீதமுள்ள தளங்கள் புதிய மத சடங்குகளைத் தொடங்கவோ அல்லது நடத்தவோ முடியாத செயல்பாடற்ற நினைவுச்சின்னங்களாகக் கருதப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட இடங்களில் கோயில்கள், மசூதிகள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்கள் ஆகியவை அடங்கும்; இத்தகைய நினைவுச்சின்னங்களில் அதிக எண்ணிக்கையில் வதோதராவில் (77), சென்னை (75), தார்வாட் (73) மற்றும் பெங்களூரு (69) ஆகிய இடங்களில் உள்ளன.

எட்டாம் நூற்றாண்டில் லலிதாதித்ய முக்தாபிதாவால் உருவாக்கப்பட்ட மார்டண்ட் சூரியன் கோயில் ஒரு காலத்தில் செழிப்பான வழிபாட்டுத் தலமாக இருந்த போதிலும், இது 14 ஆம் நூற்றாண்டில் சிக்கந்தர் ஷா மிரி என்பவரால் அழிக்கப்பட்டது. எனவே, 20 ஆம் நூற்றாண்டில் ASI கோவில் இடிபாடுகளைப் பாதுகாப்பதற்காக கையகப்படுத்திய பின்னர், அங்கு பூஜையோ அல்லது இந்து சடங்குகளோ நடைபெறவில்லை. ஆனால், கடந்த வாரம் இரண்டு முறை கோவில் வளாகத்தில் பூஜை நடத்தப்பட்டது. முதலில் ஒரு பக்தர்கள் குழு பூஜை நடத்தியது. இரண்டாவதாக ஐம்மு & காஷ்மீர் துணை நிலை ஆளுனர் மனோஜ் சின்ஹா ​​முன்னிலையில் ஒரு பூஜை நடைபெற்றது. கோவில் வழிபாடு அனுமதிக்கப்படாத நினைவுச்சின்னமாக கருதப்படுவதால், இந்த பூஜைகள் ASI விதிமுறைகளை மீறுவதாகும். என ASI அதிகாரிகள் தெரிவித்தனர்.

செயல்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள்

செயல்பாட்டில் உள்ள ASI நினைவுச்சின்னத்திற்கு சிறந்த உதாரணம் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் ஆகும், இங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அங்கு நமாஸ் நடைபெறும். தாஜ்மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் நமாஸ் நடைபெறுவதாக ASI இன் ஆக்ரா வட்ட அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் இது அடையாள அட்டை கொண்ட உள்ளூர் முஸ்லீம்களால் மட்டுமே நமாஸ் செய்யப்படுகிறது, மேலும் எந்த புதிய சடங்கு அல்லது பாரம்பரியத்தையும் தொடங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. "கடந்த 400 ஆண்டுகளாக இங்கு நமாஸ் நடைபெறுகிறது, இது ஒரு புதிய பாரம்பரியம் அல்ல" என்று ஒரு அதிகாரி கூறினார்.

மற்ற குறிப்பிடத்தக்க செயல்பாட்டில் உள்ள நினைவுச்சின்னங்களில் ஹத்ராஸில் உள்ள தயாராம் கோட்டைக்குள் உள்ள ஒரு பழைய இந்து கோவில், கன்னோஜில் மூன்று மசூதிகள், மீரட்டில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயம், டெல்லியின் ஹவுஸ் காஸ் கிராமத்தில் உள்ள நிலா மசூதி, ஹிமாச்சல பிரதேசத்தின் சம்பாவில் உள்ள பஜ்ரேஸ்வரி தேவி கோவில் மற்றும் லடாக்கில் உள்ள பல புத்த மடாலயங்கள் ஆகியவை அடங்கும்.

ASIன் ஸ்ரீநகர் வட்டத்தின்படி, மார்ட்ண்ட் கோவில் அடங்கிய இப்பகுதியின் நினைவுச்சின்னங்களில் ஒன்பது நினைவுச்சின்னங்களில் மட்டுமே வழிபாடுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. அவை கதுவாவின் பில்லவர் கோயில், சங்கராச்சாரியார் கோயில், ஸ்ரீநகரில் உள்ள பத்தர் மசூதி போன்றவை.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத நினைவுச்சின்னங்கள்

பல பாதுகாக்கப்பட்ட கோவில்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு சந்தர்ப்பங்களில் வழிபாடுகள் அனுமதிக்கப்படுகிறது என்று ASI அதிகாரிகள் தெரிவித்தனர். உதாரணமாக, கான்பூரின் நிபியா கெராவில் உள்ள பழமையான செங்கல் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரி மேளாவின் போது அதிகபட்சமாக 100-150 பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதேநேரம், ASI பதிவுகளின்படி, பல பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஏற்கனவே "அங்கீகரிக்கப்படாத வழிபாடுகள்" நடந்து வருகின்றன. டெல்லியில் உள்ள லால் கும்பத், சுல்தான் காரியின் கல்லறை மற்றும் ஃபெரோஸ்ஷா கோட்லா ஆகியவை இதில் அடங்கும்.

அவ்வப்போது, ​​பிற பல நினைவுச் சின்னங்களுக்குள்ளும் பிரார்த்தனைகளை நடத்தும் முயற்சிகளும் நடந்துள்ளன. கடந்த வாரம், தாஜ்மஹாலுக்குச் சென்று மந்திரங்களுடன் சுத்திகரணம் செய்ய விரும்பிய அயோத்தியைச் சேர்ந்த ஒரு பார்ப்பனரை ஆக்ரா போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படியுங்கள்: சூப்பர் புயல்களால் இந்தியா, வங்கதேசத்தில் பெரும் பாதிப்பு? லேட்டஸ்ட் ஆய்வு எச்சரிக்கை

மேலும் 2018 ஆம் ஆண்டில், நினைவுச்சின்னத்தின் வளாகத்தில் நமாஸ் நடைபெறுவது தொடர்பான பிரச்சனையில், தாஜ்மஹாலில் பிரார்த்தனை செய்யும் வீடியோவில் மூன்று பெண்கள் சிக்கிய பின்னர் ஒரு சர்ச்சை வெடித்தது.

அனுமதிப்பட்டவை மற்றும் அனுமதி மறுக்கப்பட்டவை

புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் விதிகள் 1959ஐ மேற்கோள் காட்டி, மார்டண்ட் சூரியன் கோயிலில் நடந்த பூஜையில் ஜம்மு & காஷ்மீர் துணை நிலை ஆளுனர் பங்கேற்றதைக் காக்க பலர் முயன்றனர். ஆனால், விதி 7(1) "மத்திய அரசால் எழுத்துப்பூர்வமாக வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் மற்றும் அதற்கு இணங்குவது தவிர, கூட்டம், வரவேற்பு, விருந்து, மாநாடு அல்லது பொழுதுபோக்குகளை நடத்த பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் எதுவும் பயன்படுத்தப்பட கூடாது” என்று கூறுகிறது

எவ்வாறாயினும், பூஜைக்கு மாவட்ட நிர்வாகத்தால் எழுத்துப்பூர்வ அனுமதி எதுவும் கோரப்படவில்லை என்று ASI தெளிவுபடுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் கோவிலின் கருவறையாக இருந்த பகுதிக்குள் இல்லாமல், வளாகத்தில் திறந்த மேடையில் பூஜை நடத்தப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu And Kashmir Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment