தாலிபான்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் இன சிறுபான்மையினர்; யார் இந்த ஹசாராக்கள்?

அவர்கள் 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆக்கிரமித்த மங்கோலிய சாம்ராஜ்யத்தின் நிறுவனர் செங்கிஸ் கான் மற்றும் அவரது இராணுவத்தின் சந்ததியினர் என்று நம்பப்படுகிறது.

Hazaras of Afghanistan
Taliban fighters patrol in Kabul, Afghanistan, Thursday, August 19, 2021. (AP/PTI Photo)

Hazaras of Afghanistan : தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய சில நாட்களிலேயே, ஹசாரா இனக்குழுவின் அதிகாரப்பூர்வமற்ற தலைநகரான பாமியான் மாகாணத்தில் உள்ள ஷியா போராளிகளின் தலைவர் அப்துல் அலி மசாரியின் சிலையை தீவிரவாதிகள் அடித்து நொறுக்கினர். ஹசாராவின் சாம்பியன் என்று பரவலாக அறியப்படும் மசாரியை 1995ம் ஆண்டு தூக்கிலிட்டது தாலிபான் இயக்கம்.

பாமியானில் உள்ள, கொல்லப்பட்ட ஹசாரா தலைவர் அப்துல் அலி மசாரியின் சிலையை தாலிபான்கள் தகர்த்தனர். அவர் கொல்லப்பட்ட போது, பெரிய புத்த சிலைகளையும், வரலாற்று, தொல்லியல் தளங்களையும் சிதைத்தனர். அதிகப்படியான “பொது மன்னிப்பாக” இது இருக்கிறது என்று மனித உரிமை ஆர்வலர் சலீம் ஜாவேத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.

மேலும் படிக்க : ஆப்கானிஸ்தானின் புதிய ஆட்சியாளர்கள்; யார் இவர்கள்?

பொது மன்னிப்பு, அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த ஆட்சியின் போது வழங்குவோம் என்று தாலிபான்கள் வாக்குறுதி அளித்த போதும், அவர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு மிருகத்தனமான மற்றும் அடக்குமுறை ஆட்சியில் இருந்து தப்பிக்க சாதாரண பொதுமக்கள், குறிப்பாக ஹசாராக்கள் போன்ற இன சிறுபான்மையினர் முயற்சி செய்து வருகின்றன. ஹசாரக்களின் இனம் மற்றும் மத நம்பிக்கைகளுக்காக வெகு காலமாக தாலிபான் மற்றும் ஐ.எஸ். அமைப்பின் வன்முறைத் துன்புறுத்தலை எதிர்கொண்டனர்.

ஹசாராக்கள் என்பவர்கள் யார்?

ஹசாராக்கள் ஒரு இன மற்றும் மத சிறுபான்மை குழுவினர். இவர்கள் பெரும்பாலும் கரடுமுரடான மற்றும் மலைப்பாங்கான மத்திய ஆப்கானிஸ்தான் பிராந்தியமான ஹசராஜத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் 13 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆக்கிரமித்த மங்கோலிய சாம்ராஜ்யத்தின் நிறுவனர் செங்கிஸ் கான் மற்றும் அவரது இராணுவத்தின் சந்ததியினர் என்று நம்பப்படுகிறது.

1773 ஆம் ஆண்டில், நவீன மத்திய ஆப்கானிஸ்தானில் உள்ள ஹசராஜத் மலைப்பகுதி பஷ்துன் ஆட்சியாளர் அஹ்மத் ஷா துரானியின் கீழ் ஆப்கானியப் பேரரசின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது. பஷ்துன் ஆட்சியாளரின் கீழ், சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இப்பகுதியில் சியா ஹசாராக்கள் ஓரங்கட்டப்பட்டனர். 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில், அவர்கள் மத்திய ஆப்கானிஸ்தானில் வளமான தாழ்நிலங்களை விட்டு வெளியேறி, வறண்ட மலை நிலப்பரப்பை தங்கள் புதிய வீடாக மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தாலிபான்களால் அவர்கள் குறிவைக்கப்பட காரணமாக அமைந்தது, முதன்மையாக ஹசாராக்கள் ஷியா இஸ்லாமிய குழுவினர் என்பது தான். நாட்டின் பெரும்பான்மை ஆப்கானியர்கள் சன்னி இஸ்லாமியர்கள், மேலும் அவர்களின் தனித்துவமான ஆசிய அம்சங்கள் மற்றும் பாரசீக மொழியின் உட்பிரிவான ஹசராகி மொழி அவர்களை நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் இருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது.

ஆப்கானில் உள்ள மிகப்பெரிய இன சிறுபான்மையினர் ஹசாராக்கள். நாட்டின் மொத்தம் உள்ள 38 மில்லியன் மக்கள் தொகையில் இவர்களின் மக்கள் தொகை 12 முதல் 12% ஆக உள்ளது. ஆரம்ப காலங்களில் இவர்கள் 67% ஆக இருந்தனர். வன்முறை, அடக்குமுறை மற்றும் படுகொலைகள் காரணமாக, அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.

நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்ட பிரிவினர்

ஹசாரா மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இருந்து துவங்குகிறது. அன்றைய காலகட்டத்தில் பஷ்துன் அரசர் அமிர் அப்துல் ரஹ்மான், மத்திய ஆப்கான் பகுதிக்கு படையெடுத்து வந்த பின்னர் அங்கிருந்த ஷியா இஸ்லாமியர்கள் அனைவரையும் கொல்ல ஆணை பிறப்பித்தார். அதில் ஹசாராக்களின் மக்கள் தொகையில் பாதி பேர் கொல்லப்பட்டனர். பலர் நாடு கடத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து வந்த ஆண்டுகளிலும் தீண்டாமை தொடர்ந்து வந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அம்மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்.

1990களில் நாட்டின் உள்நாட்டுப் போர் மற்றும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் முதல் பயங்கரவாத ஆட்சியின் போது, ​​ஆயிரக்கணக்கான ஹசாரா மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1990களின் நடுப்பகுதியில், தாலிபான் தளபதி மௌலாவி முகமது ஹனிஃப், ஹசாராக்கள் இஸ்லாமியர்களே அல்ல. அவர்களை கொல்லலாம் என்று கூறியதாக நம்பப்படுகிறது. 1998ம் ஆண்டு ஆயிரக்கணக்கான ஹசாராக்கள் மசர் – ஐ – ஷரிஃப் நகரில் தூக்கிலிடப்பட்டனர்.

ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து 2001 ல் தாலிபான்களின் ஆட்சியை முடித்த பிறகும், சிறுபான்மை இனத்திற்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தன. அவர்கள் தாலிபான் போராளிகள் மற்றும் ISIS தீவிரவாதிகளால் அதிகரித்து வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள். ஹசாராக்களின் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மசூதிகள் தாலிபான்களால் தாக்குதல்களுக்கு ஆளானது. இந்த நாட்டின் சாலைகளில் பயணிக்கும் போது நூற்றுக்கணக்கான ஹசாராக்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.

இந்த ஆண்டு மே மாதம், ஹசாராக்கள் அதிகம் வாழும், காபூலுக்கு அருகே உள்ள தஷ்த் – இ- பர்ச்சி பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். சயீத் அல்-ஷுஹதா பள்ளியின் முன் ஒரு கார் வெடிகுண்டு வெடித்தது மற்றும் குழந்தைகள் பீதியுடன் வெளியேறும்போது மேலும் இரண்டு குண்டுகள் வெடித்தன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இளம் பெண்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

2004 ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பு அவர்களுக்கு சம உரிமைகளை வழங்கியது மற்றும் அவர்கள் ஆப்கான் நிர்வாகத்தில் கூட நன்கு பிரதிநிதித்துவம் செய்யப்பட்டனர். வரலாற்று ரீதியாக நாட்டின் பிற இனத்தவர்கள் அனுபவித்த சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் ஹசாராக்களுக்கு மறுக்கப்பட்டது. இந்த இனக்குழு முதன்மையாக ஆக்கிரமிக்கப்பட்ட பாமியன் போன்ற பகுதிகள் நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளாகும். குடி தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற எந்த அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு இல்லை.

இந்த முறை சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து தாலிபான்கள் என்ன கூறினார்கள்?

அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான உரிமைகளை உறுதிப்படுத்தும் ஒரு மிதமான போக்கினை கடைபிடித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் பழைய எதிரிகள் மற்றும் ஆர்வலர்களை பழி வாங்க மாட்டோம் என்று உறுதி கூறியுள்ளனர். ஆனால் ஆப்கானியர்கள் சந்தேகத்துடன் இருக்கிறார்கள், ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.

கத்தாரில் அமெரிக்காவின் என்.பி.ஆர். நடத்திய நேர்காணலில் கேட்கப்பட்ட மத சுதந்திரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த தாலிபான் செய்தி தொடர்பாளார் சுஹைல் ஷஹீன், “தற்போது ஷியா இஸ்லாமியர்களுக்கு எதிராக நாங்கள் எந்த விதமான பாகுபாடையும் பார்க்கவில்லை. அவர்களும் ஆப்கானியர்கள் தான். அவர்கள் இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும். மேலும் நாட்டின் மறுசீரமைப்பு, வளர்ச்சி மற்றும் செழிமைக்கு பங்காற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Who are hazaras of afghanistan and why are they vulnerable under taliban

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com