வரும் கல்வி அமர்வு (ஜூலை/ ஆகஸ்ட் 2025) முதல், "நுண்கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும்" விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு இளங்கலைப் படிப்பிலும் சென்னை ஐ.ஐ.டி (IIT Madras) இரண்டு சூப்பர்நியூமரரி - அல்லது கூடுதல் - இடங்களை வழங்கும். ஐ.ஐ.டி.,களில் இந்த அடிப்படையில் சேர்க்கை வழங்குவது இதுவே முதல் முறை.
ஆங்கிலத்தில் படிக்க: Who can avail of the new fine arts quota in B.Tech programs at IIT Madras?
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்காக இந்த ஆண்டு தொடங்கிய கல்வி அமர்வில் ஒவ்வொரு இளங்கலைப் படிப்பிலும் இரண்டு இடங்களை சென்னை ஐ.ஐ.டி உருவாக்கியது. இந்த "விளையாட்டு சிறப்பு சேர்க்கையும்" ஐ.ஐ.டி.,களில் முதல் முறையாகும், மேலும் சென்னை ஐ.ஐ.டி இப்போது விளையாட்டு பிரிவின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஐந்து மாணவர்களைக் கொண்டுள்ளது.
சென்னை ஐ.ஐ.டி ஏன் இந்த சூப்பர்நியூமரரி ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது, அத்தகைய இடங்களுக்கான சேர்க்கைக்கு யார் தகுதி பெறுகிறார்கள்?
சென்னை ஐ.ஐ.டி.,யில் புதிய "நுண்கலை மற்றும் கலாச்சார சிறப்பு" ஒதுக்கீடு என்பது என்ன?
2025-26 கல்வி அமர்வில் இருந்து, சென்னை ஐ.ஐ.டி.,யின் ஒவ்வொரு இளங்கலை படிப்பிலும் நுண்கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு சூப்பர்நியூமரரி இடங்கள் இருக்கும்.
இந்த இடங்களில் ஒன்று பெண் விண்ணப்பதாரருக்கு இருக்கும்; மற்ற இடங்கள் அனைத்து பாலினருக்கும் திறந்திருக்கும்.
ஐ.ஐ.டி சென்னையின் இயக்குனர் பேராசிரியர் வி.காமகோடி கருத்துப்படி, படைப்பாற்றலின் அம்சங்களை முன்னணியில் கொண்டு வருவதே இதன் நோக்கம். இந்தத் துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தாங்கள் கற்றுக் கொள்வதில் புதிய அம்சங்களையும் கருத்துகளையும் கொண்டு வர முடியும். இந்த மாணவர்கள் வளாகத்தில் பன்முகத்தன்மையை அதிகரிப்பார்கள், என்று கூறினார்.
இந்த பிரிவின் கீழ் சேர்க்கைக்கு தகுதியானவர் யார்?
விண்ணப்பதாரர் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் தகுதி பெற பொதுத் திறன் மற்றும் நுண்கலைகளில் விதிவிலக்கான திறமை ஆகிய இரண்டையும் கொண்டிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும், மேலும் பொதுவான தரவரிசைப் பட்டியலில் அல்லது பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் (SC/ST/OBC/PWD) ஒன்றில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் ஐ.ஐ.டி.,களுக்கான தகுதி அளவுகோலின்படி 12 ஆம் வகுப்பில் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதலாக, விண்ணப்பதாரர் கீழ்கண்ட ஒன்பது வகைகளில் குறைந்தது ஒன்றில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார், தேசிய பால் ஸ்ரீ கௌரவம், தேசிய இளைஞர் விருது, உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் ஆகியவற்றில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்;
கலாசார அமைச்சகத்திலிருந்து இளம் கலைஞர்களுக்கான புலமைப்பரிசில்; அல்லது கலாச்சார திறமை தேடல் உதவித்தொகை பெற்றிருக்க வேண்டும்;
கடந்த ஆறு ஆண்டுகளில் ஆல் இந்தியா ரேடியோ அல்லது தூர்தர்ஷன் வழங்கும் பி-கிரேடு அல்லது அதற்கு மேற்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்;
கடந்த ஆறு ஆண்டுகளில் வெளிநாட்டில் நடைபெறும் இந்திய விழாக்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும்;
தேசிய இளையோர் விழா போட்டியின் நான்காம் கட்டத்தில் விருதுகள் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
இந்த விண்ணப்பதாரர்களுக்கான சேர்க்கை செயல்முறை என்ன?
விண்ணப்பதாரர்கள் https://jeeadv.iitm.ac.in/face என்ற போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம், மேலும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் 'எக்ஸலன்ஸ்' மதிப்பெண் ஒதுக்கப்படும்.
உதாரணமாக, பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார், தேசிய பால் ஸ்ரீ கௌரவம், தேசிய இளைஞர் விருது அல்லது உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் ஆகியவற்றைப் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு 100 புள்ளிகள் வழங்கப்படும்; வெளிநாட்டில் நடைபெறும் இந்திய விழாக்களில் பங்கேற்க எம்பேனல் செய்யப்பட்ட கலைஞர்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் ஆல் இந்தியா ரேடியோ அல்லது தூர்தர்ஷன் (AIR/DD) இலிருந்து பி-கிரேடு அல்லது அதற்கு மேற்பட்ட சான்றிதழ் பெற்றவர்கள், கலாச்சார அமைச்சகத்தின் உதவித்தொகையைப் பெற்றவர்கள் அல்லது தேசிய இளைஞர் விழாப் போட்டியின் 4 ஆம் கட்டத்தில் பரிசு பெற்றவர்கள், 75 புள்ளிகளைப் பெறுவார்கள்; மற்றும் கலாச்சார திறமை தேடல் புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு 50 புள்ளிகள் கிடைக்கும்.
அதன் அடிப்படையில், இவர்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட்டு, அதற்கேற்ப இடங்கள் ஒதுக்கப்படும்.
வரும் கல்வி அமர்வுக்கான சேர்க்கை எப்போது தொடங்கும்?
அப்ளிகேஷன் போர்ட்டல் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளை அடுத்து திறக்கப்படும். இது ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படலாம், மேலும் ஜூன் 8 அன்று மூடப்படும்.
ஜூன் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியானவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் பட்டியல், மதிப்பெண்களுடன் ஜூன் 13ம் தேதி வெளியிடப்படும் என தெரிகிறது.
ஜூன் 14-ஆம் தேதிக்குள் ஒரு தற்காலிக இருக்கை ஒதுக்கீடு செய்யப்படலாம். ஒரு இருக்கை ஒதுக்கப்பட்ட விண்ணப்பதாரர் இருக்கை ஏற்றுக்கொள்ளும் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் இருக்கையை நிராகரித்தால், அவர்கள் சேர்க்கை செயல்முறையிலிருந்து நீக்கப்படுவார்கள்.
இந்த ஆண்டு விளையாட்டுப் பிரிவில் சேர்க்கை எவ்வாறு செயல்படுத்தப்பட்டது?
ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வு பொது தரவரிசைப் பட்டியல் அல்லது பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் இருப்பதுடன், கடந்த நான்கு ஆண்டுகளில் தேசிய அல்லது சர்வதேச அளவிலான போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தையாவது பெற்றிருக்க வேண்டும்.
தேசிய அல்லது சர்வதேசப் போட்டியா, எந்தப் பதக்கம் வென்றார் என்பதன் அடிப்படையில் விண்ணப்பதாரருக்கு புள்ளிகள் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட விளையாட்டு தரவரிசைப் பட்டியலின்படி இடங்கள் ஒதுக்கப்பட்டன.
பேராசிரியர் காமகோடி கூறுகையில், நடப்பு கல்வி அமர்வுக்கு விளையாட்டு பிரிவின் கீழ் சென்னை ஐ.ஐ.டி சுமார் 120 விண்ணப்பங்களைப் பெற்றது, மேலும் ஐந்து மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். இந்த மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், மற்றும் அவர்கள் டென்னிஸ், ஸ்குவாஷ், நீச்சல், சதுரங்கம் விளையாடுகின்றனர், என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.