கோவாக்சின் தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த, உலக சுகாதார அமைப்பு நேற்று ஒப்புதல் அளித்தது. பல மாத இழுபறிக்குப் பிறகு, கோவாக்சினுக்கு அனுமதி கிடைத்துள்ளது. இந்தாண்டின் ஆரம்பத்தில் ஜனவரி மாதத்தில் கோவாக்சினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் கொடுக்காததால், பல நாடுகளில் கோவாக்சினை பரிந்துரைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
கோவாக்சின் தடுப்பூசி தான், முதன்முதலாக இந்தியாவில் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதே போல, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தடுப்பூசியும் கோவாக்சின் தான். அடுத்ததாக, 2 முதல் 18 வரையிலான குழந்தைகள், சிறுவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனை முயற்சியில் கோவாக்சின் முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும், தடுப்பூசி தயாரிக்கும் பணியில் களமிறங்கிய இரண்டு நிறுவனங்களில் ஹைதராபாத் சேர்ந்த பாரத் பயோடேக் நிறுவனம் ஒன்றாகும். மற்றொன்று, அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ் நிறுவனம் ஆகும்.ஐசிஎம்ஆருடன் இணைந்து தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பாரத் பயோடேக் மும்முரமாக இருந்தது.
தொற்றுக்கு தடுப்பூசி தயாரிப்பது பாரத் பயோடேக் நிறுவனத்துக்கு புதுசு கிடையாது. ஏற்கனவே , பல விதமான நோய்களுக்கு 15 தடுப்பூசிகள் தயாரித்துள்ளது. அதில், பல ஆண்டுகள் வெற்றிகரமாக ஆய்வு மேற்கொண்டு, டைபாய்டு நோய்க்கு ரோட்டா வைரஸ் தடுப்பூசி தயாரித்தது தான்.
இந்த நோய்க்கு எதிராக நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இந்த தடுப்பூசி, உலகளாவிய பயன்பாட்டிற்காக உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியமான தொழில்நுட்பம்
கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் புதுமையான தொழில்நுட்பத்தைக் கையாண்ட போது, பாரத் பயோடேக் பாரம்பரியமான தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்தது. நோயெதிர்ப்பு சக்தியைத் உருவாக்குவதற்கு இறந்த நோய்க்கிருமியைப் பயன்படுத்தியது.
செயலிழந்த நோய்க்கிருமிகள் அல்லது அவற்றின் புரதங்கள் அல்லது மரபணுப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, தடுப்பூசிகளுடன் செயல்திறன் சிறப்பாக இருந்தது தெரியவந்தது. பக்கவிளைவுகள் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளும் குறைவாகத் தான் இருந்தது.
சர்ச்சைகள்
தடுப்பூசியை அங்கீகரிக்கப் பல வருடங்கள் ஆகும் போது, இந்த தடுப்பூசிக்கு ஒன்றரை மாதத்தில் ஒப்புதல் கிடைத்துள்ளது. போதிய பாதுகாப்பு சோதனைகள் இல்லாமல், மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அரசின் இந்த ஒப்புதல் முடிவு அமைந்துள்ளதாகப் பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து, அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சரியாக 6 மாதங்களுக்குப் பிறகு மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பே, கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசரக்கால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பும் குறைவாகத் தான் இருந்தது. ஒரிரு வாரத்தில் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் வரும் என இருந்த நிலையில், அவசர அவசரமாக அனுமதி வழங்கப்பட்டது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தடுப்பூசி செயல்திறன்
பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி திறன் சிறப்பாக இருந்தது.சீரம் இன்ஸ்ட்டீயூட் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியுடன் இணைந்து, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக இருந்தது. ஆனால், கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைக்காததால், தயாரிப்பை அதிகப்படுத்துவதில் பாரத் பயோடேக் நிறுவனத்துக்குச் சிக்கல் ஏற்பட்டது. தற்போது வரை, இந்தியாவில் 10 கோடி கோவாக்சின் டோஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
WHO ஒப்புதல்
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல், இந்தியர்கள் வெளிநாட்டிற்குப் பயணம் செய்வதற்கு அனுமதி கிடைப்பது மட்டுமின்றி மற்ற நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்துவதற்கும் அவசியமாக இருந்தது. ஆனால், 3 ஆம் கட்ட ஆய்வு முடிவுகள் இல்லை என கோவாக்சினுக்கு உலக சுகாதார அமைப்பு மறுப்பு தெரிவித்தது. அமெரிக்காவும் கோவாக்சினுக்கு அனுமதியளிக்க கூடுதல் தரவுகள் தேவை என கூறியது.
இதையடுத்து, பல ஆய்வு முடிவுகள் உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதுகுறித்து பல ஆய்வு கூட்டங்களை நடத்திய உலக சுகாதார அமைப்பு, இறுதியாக நேற்று அவசரக் கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியது. இதன் மூலம், தடுப்பூசி குறைவாக உள்ள பல வளரும் நாடுகளுக்கும், கோவாக்சின் தடுப்பூசி அனுப்பப்படும். கோவாக்ஸ் திட்டம் மூலம், தடுப்பூசிகள் பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த ஒப்புதல் தடுப்பூசி செலுத்திகொள்வரின் ஆர்வத்தை இளைய தலைமுறையினரிடையே அதிகரிக்கும். அண்மையில், குழந்தைகளுக்கு கோவாக்சின் செலுத்தியதில் நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதால், விரைவில் இந்தியாவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த அங்கீகாரம் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பயோடேக் நிறுவனத்துக்கு உதவியாக அமையும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.