/tamil-ie/media/media_files/uploads/2020/10/Covid-18.jpg)
Herd immunity corona virus tracker
Corona Tracker Tamil News: இந்த பேண்டமிக் நிலை எப்படி முடிவுக்கு வரக்கூடும்? உலகளாவிய தடுப்பூசி மூலமாகவா அல்லது போதுமான மக்கள் தொகை வைரஸால் பாதிக்கப்பட்டு, நோய்க்கு எதிராக இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் 'ஹேர்டடு இம்யூனிட்டி (herd immunity)' மூலமாகவா?
இந்தத் தொற்றுநோய் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என்று விஞ்ஞானிகள் பலர் நம்புகிறார்கள். மேலும், மக்கள்தொகையில் வேகமாகப் பரவும் இந்த நோய் வயதானவர்களையும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களையும் பாதுகாக்குமானால், குறைந்த பொருளாதார விளைவுகளுடன் இந்த பேண்டமிக் காலகட்டம் ஓர் முடிவுக்கு வரும் என்றும் நம்புகின்றனர். இவர்கள் மந்தை-நோய் எதிர்ப்புச் சக்தி அதாவது 'ஹேர்டு இம்யூனிட்டி' அணுகுமுறையை ஆதரிப்பவர்கள். மேலும், லாக்டவுன் போன்ற சில கட்டுப்பாடுகள் தொற்றுநோய் பரவுதலைக் குறைக்குமே தவிர அதற்கு முற்றுப்புள்ளி வைக்காது. அதே நேரத்தில், மக்களின் கஷ்டங்களையும் பொருளாதார துயரங்களையும் இது நீட்டிக்கச் செய்யும் என்றும் வாதாடுகின்றனர். இத்தகைய தலையீடுகளின் எதிர்பாராத விளைவுகள், அவர்கள் குணப்படுத்த முயற்சி செய்யும் நோயை விட மிகவும் தீங்கு விளைவிப்பதாக இருக்கலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சுனேத்ரா குப்தா, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் ஜெய் பட்டாச்சார்யா மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர் மார்ட்டின் குல்டோர்ஃப் ஆகிய மூன்று பிரபல விஞ்ஞானிகள் சமீபத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டனர். அதில், “உலகெங்கிலும் நடைமுறையில் உள்ள அரசாங்கங்களின் கோவிட் 19 தடுப்பு கொள்கைகள் ஏற்படுத்தும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளை மனதில் கொண்டு, மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்ட “கவனம் செலுத்தும் பாதுகாப்பு (Focussed Protection)” அணுகுமுறை சிறந்தது" என்று பரிந்துரைத்திருந்தனர்.
இதுவரை 9,000 மருத்துவ மற்றும் பொதுச் சுகாதார விஞ்ஞானிகள் மற்றும் 22,000-க்கும் மேற்பட்ட மருத்துவ பயிற்சியாளர்களின் கையொப்பங்களைப் பெற்றிருக்கிறது இந்த அறிவிப்பு. மனித தொடர்பு மற்றும் செயல்பாட்டின் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் உள்ள தற்போதைய இந்த கொள்கைகள் தொடர்ந்தால், "ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும். குறிப்பாகப் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்" என்றும் பதிவு செய்திருக்கின்றனர்.
அதற்குப் பதிலாக, பாதிக்கப்படாதவர்கள் உடனடியாக தங்கள் இயல்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்க அனுமதிக்க வேண்டும், உடல் ரீதியான தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும், இளம் மற்றும் எதிர்ப்புச் சக்தி உடையவர்கள் அலுவலகம், உணவகங்களிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும், பிற வணிகங்கள் திறக்கப்பட வேண்டும், கலை, இசை, விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. மக்கள்தொகையில் வயதான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளை மட்டுமே பாதுகாக்க வேண்டும், தனிமைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி மூலம் தோற்று ஏற்படும் அபாயம் குறைந்து இருப்பவர்கள் இயற்கை தொற்று மூலம் வைரஸுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்ப்பதற்கும் எளிதில் தொற்றுநோய் பரவும் அபாயம் உடையவர்களைப் பாதுகாக்கவும் அனுமதிக்கிறது. இந்த அணுகுமுறையை நாங்கள் மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு (Focused Protection) என்று அழைக்கிறோம்” என வெளியிடப்பட்ட அறிக்கையில் விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
மேலும், "அனைத்து மக்களும் இறுதியில் மந்தை நோய் எதிர்ப்புச் சக்தியை அடைவார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இது தடுப்பூசி மூலம் உதவலாம் (ஆனால் சார்ந்து இல்லை). ஆகவே, மந்தை நோய் எதிர்ப்புச் சக்தியை அடையும் வரை இறப்பு மற்றும் சமூகத் தீங்கைக் குறைப்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்”என்று கூறுகிறார்கள்.
இந்த அறிவிப்பு குறித்த சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஓர் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். தொற்றுநோய்க்கு, “மந்தை நோய் எதிர்ப்புச் சக்தி யுத்தியை” நாங்கள் பரிந்துரைக்கிறோம் என்று சொல்வது தவறு என்று பட்டாச்சார்யா குறிப்பிட்டார்.
“மந்தை நோய் எதிர்ப்பு சக்தி ஒரு உத்தி அல்ல. மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது பெரும்பாலான தொற்று நோய்களின் பற்றிய ஒரு உண்மை. நம்மிடம் ஓர் சக்திவாய்ந்த தடுப்பூசி இருந்தாலும், இறுதி புள்ளியாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தியைத்தான் சார்ந்திருப்போம்” என்கிறார் பட்டாச்சார்யா.
"எதுவும் செய்யக்கூடாது என்று சொல்வது எங்கள் நோக்கம் அல்ல. 'மந்தை நோய் எதிர்ப்பு சக்தி மூலோபாயம்' என்ற சொற்றொடரைக் கேட்கும்போது மக்களுக்கு இருக்கும் தவறான கருத்து இதுதான் என்று நான் நினைக்கிறேன். உண்மையில், இது முற்றிலும் நேர்மாறானது. எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதுதான் எங்களுடைய மூலோபாயம். கடந்த ஆறு முதல் எட்டு மாதங்களில் இந்த நோய் குறித்து நாங்கள் நிறையக் கற்றுக்கொண்டோம். குறிப்பாக, இந்த வைரஸுக்கு எந்தெந்த குழுக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம்… இந்த வைரஸைப் பற்றி நாங்கள் பெற்றுள்ள அறிவை எங்களுடைய மூலோபாயம் பயன்படுத்திக் கொள்கிறது. மேலும், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாக்க உறுதியான வழிகளையும் முன்மொழிகிறது”என்று அழுத்தமாகக் கூறுகிறார்.
ஆனால், இந்த அணுகுமுறைக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு, கடந்த திங்களன்று, மந்தை நோய் எதிர்ப்பு சக்தி “விஞ்ஞான ரீதியாகவும், நெறிமுறை ரீதியாகவும் சிக்கலானது” என்று குறிப்பிட்டிருக்கிறது. தொற்றுநோயைக் கையாள்வதற்கு அந்தந்த நாடுகள் இன்னும் திறம்படத் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் என்றும் WHO கூறியது. மூன்று விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்குத்தான் WHO குறிப்பாகப் பதிலளிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
"பொதுச் சுகாதார வரலாற்றில் ஒருபோதும் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி பேண்டமிக் காலகட்டத்திற்கு பதிலளிப்பதற்கான ஒரு மூலோபாயமாக பயன்படுத்தப்படவில்லை. இது விஞ்ஞான ரீதியாகவும் நெறிமுறை ரீதியாகவும் சிக்கலானது” என்று WHO இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
“முதலில், கோவிட் 19-ற்கான நோய் எதிர்ப்பு சக்தி பற்றி எங்களுக்குத் தெரியாது. கோவிட் 19-ஐ ஏற்படுத்தும் வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் முதல் சில வாரங்களுக்குள் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டோம். ஆனால், அந்த நோயெதிர்ப்பு எவ்வளவு வலிமையானது அல்லது நீடித்தது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. மேலும், வெவ்வேறு நபர்களுக்கு இது எவ்வாறு வேறுபடுகிறது என்பது பற்றியும் தெளிவில்லை. எங்களிடம் சில தடயங்கள் மட்டுமே உள்ளன. கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாவது முறையாகவும் நோய்த்தொற்றுக்கு ஆளாகின்றனர் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகளும் உள்ளன” என்று கெப்ரேயஸ் கூறினார்.
"இரண்டாவதாக, பெரும்பாலான நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஏராளமான நாடுகளில் மக்கள் தொகையில் 10 சதவிகிதத்துக்கும் குறைவானவர்கள் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக Sero-prevalence ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வைரஸை சரிபார்க்காமல் அனுமதிப்பது, தேவையற்ற நோய்த்தொற்றுகள், துன்பம் மற்றும் இறப்பை அனுமதிப்பதைப் போன்றது” என்று அவர் கூறினார்.
மேலும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதற்கான சரியான வழி, அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி போடுவதுதான் என்று கெப்ரேயஸ் கூறினார்.
“மந்தை நோய் எதிர்ப்பு சக்தி என்பது தடுப்பூசிக்குப் பயன்படுத்தப்படும் ஒரு கான்செப்ட். இதில், தடுப்பூசியின் வரம்பை அடைந்தால், ஓர் குறிப்பிட்ட வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும். உதாரணமாக, அம்மை நோய்க்கு எதிரான மந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கு மக்கள் தொகையில் 95 சதவிகிதம் பேருக்குத் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போட்டவர்களிடையே அம்மை நோய் பரவாது என்பதன் மூலம் மீதமுள்ள 5 சதவிகித மக்கள் பாதுகாக்கப்படுவார்கள். போலியோவைப் பொறுத்தவரை, 80 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி கொடுக்கப்படவேண்டும். மந்தை நோய் எதிர்ப்பு சக்தி, வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பதன் மூலம் அடையப்படுகிறதே தவிர வைரஸை வெளிப்படுத்துவதன் மூலம் அல்ல”என்று குறிப்பிட்டார்.
தடுப்பூசிகளின் வளர்ச்சியை WHO ஆதரித்து வருகிறது. மேலும், இந்த தடுப்பூசிகளின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் சமமான விநியோகத்தை விரைவுபடுத்துவதற்கான முயற்சியையும் தொடங்கியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.