Advertisment

வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு; ஏன்?

வாக்களிக்கும் உரிமை என்பது "மிகப் புனிதமான உரிமைகளில் ஒன்றாகும்" என்றும் ஆதார் அட்டை இல்லை என்றால் அதை மறுக்க முடியாது; வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

author-image
WebDesk
New Update
வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு; ஏன்?

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் தரவுத்தளத்தை இணைக்கும் தேர்தல் ஆணையத்தின் (EC) அதிகாரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (அக்டோபர் 31) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisment

நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் அபய் எஸ்.ஓகா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) எஸ்.ஜி.வோம்பட்கெரே தாக்கல் செய்த, தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2021 இன் அரசியலமைப்பு அதிகாரங்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 23 மற்றும் பிரிவு 28, வாக்காளர்கள் பதிவு (திருத்தம்) விதிகள், 2022 மற்றும் ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பான இரண்டு அறிவிப்புகள் ஆகியவற்றை சவால் செய்த மனுவை விசாரித்தது என Livelaw தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரிடம்  கன்னித்தன்மை பரிசோதனையா ? இரு விரல் பரிசோதனை கடந்த வந்த வரலாறு

"ஆதார் இல்லாத ஒருவருக்கு வாக்களிப்பது மறுக்கப்படக்கூடாது அல்லது அதை வைத்திருந்தாலும் கூட, கட்டாயமாக இருக்கக்கூடாது என்பது உங்கள் வாதம்" என்று நீதிபதி கவுல் மனுதாரரிடம் கூறினார்.

மனு என்ன சவாலாக இருந்தது?

டிசம்பர் 2021 இல், சில தேர்தல் சீர்திருத்தங்களைச் செயல்படுத்த, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 மற்றும் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 ஆகியவற்றைத் திருத்திய தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 ஐ மத்திய அரசு நிறைவேற்றியது.

1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட பிரிவு 23(4), "ஒரு நபரின் அடையாளத்தை நிறுவுவதற்கான" நோக்கங்களுக்காக அல்லது "வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை அங்கீகரித்தல் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் ஒரே நபரின் பெயரை அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்திருப்பதை அடையாளம் காண" ஒரு நபர் தனது ஆதார் எண்ணை வழங்க வேண்டும் என்று ஒரு தேர்தல் பதிவு அதிகாரி கோரலாம்” என்று கூறுகிறது.

"பரிந்துரைக்கப்படக்கூடிய போதுமான காரணத்தால்" எந்தவொரு தனிநபரும் அவர்களின் ஆதார் எண்ணை வழங்க முடியாவிட்டால் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை மறுக்கவோ அல்லது அவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவோ கூடாது என்று புதுப்பிக்கப்பட்ட சட்டம் கூறுகிறது. அத்தகைய நபர்கள் அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட மாற்று ஆவணங்களை வழங்க அனுமதிக்கப்படலாம்.

இந்தச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன, மேலும் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது “விருப்பமானது,” இது அவசியமோ கட்டாயமோ அல்ல” என்று கூறியிருந்தார்.

மனுதாரரின் வாதம் என்ன?

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், வாக்களிக்கும் உரிமை என்பது "மிகப் புனிதமான உரிமைகளில் ஒன்றாகும்" என்றும், ஆதார் அட்டை இல்லாத நபருக்கு வாக்குரிமை மறுக்கப்பட முடியாது என்றும் வாதிட்டார். "போதுமான காரணத்தின்" அடிப்படையில் மக்கள் மாற்று ஆவணங்களை வழங்க சட்டம் அனுமதிக்கும் அதே வேளையில், ஜூன் 2022 இல் வாக்காளர்கள் பதிவு விதிகள் 1960 இல் மாற்றங்களை அரசாங்கம் அறிவித்தபோது சேர்க்கப்பட்ட படிவம் 6B ஐ மனுதாரர் சுட்டிக்காட்டினார்.

படிவம் 6 மற்றும் படிவம் 6B படி, வாக்காளர்களிடம் ஆதார் எண் இல்லையென்றால் மட்டுமே மற்றொரு அடையாளச் சான்றிதழைக் காண்பிக்கும் விருப்பம் அவர்களுக்கு இருக்கும் என்று ஷியாம் திவான் வாதிட்டார். "மாற்று வழிகள் இருந்தால் ஆதார் எண்ணை வழங்க விரும்பாத ஒரு விருப்பம் அனுமதிக்கப்படாது" என்ற நீதிமன்ற உத்தரவையும் தனது வாதத்தில் வைத்தார்.

ஆதார் அட்டையின் செல்லுபடியை கையாண்ட நீதிபதி கே.எஸ்.புட்டசாமி எதிர் இந்திய யூனியன் மற்றும் பலர் தீர்ப்பை கவனத்தில் கொண்டு, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மானியத்தில் ஏதேனும் பலன் இருந்தால் மட்டுமே ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடியும். வாக்களிக்கும் உரிமை போன்ற உள்ளார்ந்த உரிமை இருந்தால் அல்ல என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையத்தின் (EC) சுதந்திரத்திற்கு இந்த இணைப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, ஏனெனில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது ஆதார் செயல்முறையை சார்ந்துள்ளது, அந்தச் செயல்முறையில் தேர்தல் ஆணையத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று மனுவில் வாதிடப்பட்டது. இந்த இணைப்பு மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதற்கான திறனில் தீங்கு விளைவிக்கும் என்றும், மேலும் வாக்குகளின் ரகசியத்தன்மையை சமரசம் செய்யக்கூடும் என்றும் மனு கூறியது, என Livelaw தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலை ஆதாருடன் இணைக்க அரசாங்கம் ஏன் விரும்புகிறது?

ஒரே நபரின் வெவ்வேறு இடங்களில் உள்ள பல பதிவுகளின் சிக்கலை இந்த இணைப்பு தீர்க்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆதார் இணைப்பு கிடைத்தவுடன், வாக்காளர் பட்டியல் தரவு அமைப்பு, ஒரு நபர் புதிய பதிவுக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம், முந்தைய பதிவு(கள்) இருப்பதை உடனடியாக எச்சரிக்கும். இது வாக்காளர் பட்டியலை பெருமளவுக்கு சுத்தம் செய்யவும், அவர்கள் ‘சாதாரணமாக வசிக்கும்’ இடத்தில் வாக்காளர் பதிவை எளிதாக்கவும் உதவும் என்று அரசு அதிகாரி ஒருவர் முன்பு கூறியிருந்தார்.

மார்ச் 6, 2021 அன்று ராஜ்யசபாவில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட அமைச்சகத்தின் மானிய கோரிக்கைகள் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறியது: “தனிப்பட்ட ஆதார் அடையாள அட்டை எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்து வருகிறது. வாக்காளர்கள் சாதாரண குடியிருப்பை மாற்றும்போது EPIC <மின்னணு புகைப்பட அடையாள அட்டை> மாற்றங்களை ஒழுங்குப்படுத்தும். பங்கேற்பு ஜனநாயகத்தில் தேவைப்படும் பல பதிவு நிகழ்வுகளும் அகற்றப்படலாம்…”

இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் விவரங்களுடன் இணைக்கும் இயக்கத்தை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இப்பயிற்சியின் நோக்கம் வாக்காளர்களின் அடையாளத்தை நிறுவுதல் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ளீடுகளை அங்கீகரிப்பது மற்றும் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பதிவு செய்திருந்தால் அடையாளம் காண்பது என்று தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தியது.

இந்த ஐடியா ஏன் சிலரால் எதிர்க்கப்படுகிறது?

ஆதார் தரவுத் தளத்துடன் வாக்காளர் பட்டியல் தரவை இணைக்க உதவும் தேர்தல் சட்டங்கள் (திருத்தம்) சட்டம், 2021ஐ எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் மணீஷ் திவாரி முன்பு கூறியது: “வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதாரை இணைப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பில் வரையறுத்துள்ள தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது.”

மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு அதை எதிர்த்த அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் எம்.பி., அசாதுதீன் ஒவைசி, “சிலரின் வாக்குரிமையை மறுப்பதற்கும் குடிமக்களின் விவரக்குறிப்புக்கும்” அரசாங்கம் வாக்காளர் அடையாள விவரங்களைப் பயன்படுத்த முடியும் என்று கூறினார். “இந்த மசோதா இந்த அவையின் சட்டமியற்றும் தகுதிக்கு புறம்பானது… வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது புட்டசாமி (வழக்கு) வரையறுக்கப்பட்ட தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுகிறது” என்று ஓவைசி முன்பு கூறியிருந்தார்.

இந்த இணைப்பு வாக்கு ரகசியத்தை மீறுவதாகவும், வாக்காளரின் தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் சி.பி.ஐ(எம்) முன்பு ஒரு அறிக்கையில் கூறியிருந்தது.

சட்டக் கொள்கைக்கான விதி மையத்தின் நிறுவனரும் ஆராய்ச்சி இயக்குநருமான அர்க்யா சென்குப்தா, கடந்த ஆண்டு மசோதா நிறைவேற்றப்படுவதற்கு முன்பு கவலைகளை எழுப்பி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்: “ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்களிக்கும் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதுதான் முதல் நியாயம். …நீங்கள் வாக்களிக்கச் செல்லும் போதெல்லாம் உங்கள் வாக்காளர் அடையாளத்துடன் அதை வழங்க வேண்டும் என்று நீங்கள் கூறினால்... ஆதாரை வழங்குவது கட்டாயமாக இருந்தால் மட்டுமே இது செயல்படும். இருப்பினும், சட்டத்தில் உள்ள இந்தப் பிரிவு சற்று சிக்கலானது, ஏனெனில் இது தன்னார்வமாகத் தோன்றினாலும், எனது ஆதாரை இணைக்க வேண்டாம் என்று நான் தேர்வுசெய்யும் காரணங்கள் 'போதுமான காரணத்திற்காக' என்ற அரசாங்க நிபந்தனைகளால் பரிந்துரைக்கப்பட வேண்டும். இப்போது அதற்கான போதுமான காரணம் என்னவாக இருக்கும் என்று மசோதாவில் குறிப்பிடப்படவில்லையா?... இது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment