scorecardresearch

சண்டிகர் மீது பார்வையை திருப்பும் அமித் ஷா; பஞ்சாபிற்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன?

2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு சண்டிகர் அரசு ஊழியர்களை கவரும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இந்த அறிவிப்பின் மூலம் அரசு பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்

சண்டிகர் மீது பார்வையை திருப்பும் அமித் ஷா; பஞ்சாபிற்கு ஏற்படும் சிக்கல்கள் என்ன?

Hina Rohtaki

பஞ்சாபில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முழுமையாக 10 நாட்கள் ஆகாத நிலையில் மத்திய அரசுடன் சவால்களை சந்திக்க ஆரம்பித்துள்ளது ஆம் ஆத்மி அரசு. மார்ச் 28ம் தேதி முதல் மத்திய அரசு சேவை விதிகள் சண்டிகரில் செயல்பாட்டிற்கு வரும் என்று உள்த்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிக்க, எங்கள் வீதிகளில் இருந்து நாடாளுமன்றம் வரை இதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் என்று பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் அறிவித்துள்ளார்.

இது பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது என்று ட்வீட் செய்த மான், தன்னுடைய ட்விட்டரில், “நாட்டில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து அதிகாரிகளை கொஞம் கொஞ்சமாக சண்டிகர் நிர்வாகத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது மத்திய அரசு” என்று ட்வீட் செய்திருந்தார்.

இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் கருத்தையே காங்கிரஸ் மற்றும் அகலி தளம் பிரதிபலிக்கிறது. பஞ்சாபின் உரிமைகளுக்கு மேலும் ஒரு அடி என்று குறிப்பிட்டுள்ளனர். அகலி தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ப்ரகாஷ் சிங் பாதல், சண்டிகர் மீதான பஞ்சாபின் உரிமைகளை மத்திய அரசு பறிக்க விரும்புகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

அறிவிப்பு

யூனியன் பிரதேசமான சண்டிகரில் தற்போது அரசு பணியாளர்கள் அனைவரும் பஞ்சாப் சேவை விதிகளின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசின் விதிகள் கொண்டு வரப்பட்டால் ஊழியர்களுக்கு பெரிய அளவிலான பலன்கள் கிடைக்கும் என்று அவர் அறிவித்துள்ளார். உதாரணமாக ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும். அதே போன்று தற்போது குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஓராண்டு விடுப்பு மட்டுமே இந்த பணியாளர்கள் பெறுகின்றனர். மத்திய அரசின் விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டுகள் விடுமுறை கிடைக்கும். சண்டிகர் அரசு ஊழியர்களின் இந்த வேண்டுகோள்கள் 20 -25 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்றும் ஷா சுட்டிக் காட்டினார்.

இதில் இருக்கும் அரசியல் என்ன?

டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் பாஜகவை ஸ்தம்பிக்க வைத்து வெற்றியை உறுதி செய்தது ஆம் ஆத்மி கட்சி. இந்த சூழலில் அமித் ஷாவின் அறிவிப்பை எந்த கட்சிகளும் எதிர்பார்க்கவில்லை. ஆம் ஆத்மி மொத்தமாக 14 இடங்களை கைப்பற்றியது. பாஜக மேயர் பதவியை தக்க வைக்க நினைத்தது. ஆனாலும் ஒரு வாக்கு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு சண்டிகர் அரசு ஊழியர்களை கவரும் முயற்சியில் பாஜக இடுபட்டு வருகிறது.

பாஜகவின் வாதம்

மூத்த தலைவரும் சண்டிகரின் முன்னாள் எம்.பியுமான சத்யபால் ஜெய் , பஞ்சாப் அரசு தனது ஊழியர்களுக்கான பல்வேறு ஊதியக் குழுவின் பரிந்துரைகளை ஏற்கவில்லை என்றும், அதேசமயம் சண்டிகர் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையை ஒரேயடியாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டது என்றும் கூறினார். பஞ்சாப் ”பேட்டர்னில்” சம்பளம் மற்றும் இதர சலுகைகளை ஊழியர்கள் பெற்றாலும் மத்திய அரசின் கீழ் பெறப்படும் சம்பளம் மற்றும் இதர சலுகைகள் ஊழியர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு பஞ்சாப் மாநிலத்தை எந்த வகையிலும் பாதிக்காது. சண்டிகரில் இருக்கும் ஊழியர்கள் எங்கள் ஊழியர்கள். அவர்களுக்கான இந்த அறிவிப்பு எப்படி பஞ்சாப் மாநிலத்தை பாதிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் சமீப காலங்களில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்து பேசி வருகின்றோம். இந்த முடிவு எந்த மாநிலத்தின் நலனுக்கு எதிரானது அல்ல என்று குறிப்பிட்டார்.

பஞ்சாப் மறுசீரமைப்பு சட்டமும் சண்டிகரின் நிலையும்

1966ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம், பஞ்சாப் மற்றும் ஹரியானா என்று பிரிந்தது. மேலும் சில பகுதிகள் ஹிமாச்சல் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது. பஞ்சாப் மற்றும் ஹரியானா என்று இரண்டு மாநிலங்களும் சண்டிகர் தங்களின் தலைநகரம் என்று உரிமை கோரின. தீர்மானம் நிலுவையில் இருந்த நிலையில் சண்டிகரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் இந்த மறுசீரமைப்பு சட்டத்தின் படி சண்டிகர் மத்திய அரசால் நிர்வகிக்கப் பட்டாலும், பிரிக்கப்படாத பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் விதிகள் ஆகியவை சண்டிகரில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் அதன் உயர் அதிகாரியாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்த தலைமை ஆணையராக இருந்தபோதும், பின்னாட்களில் அதிகாரிகள் அருணாச்சலப் பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்டனர் (AGMUT) . மாநிலம் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய நேரத்தில், 1984ம் ஆண்டு பஞ்சாப் ஆளுநர் சண்டிகரின் நிர்வாகியாக பணியில் அமர்த்தப்பட்டார். இப்போது, ‘நிர்வாகியின் ஆலோசகர்’ பதவி AGMUT-கேடர் ஐஏஎஸ்-க்கு வழங்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து முறையே 60:40 என்ற விகிதத்தில் சண்டிகருக்கான அதிகாரிகள் பெறப்படுவார்கள். மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பஞ்சாப் எதிர்வினையாற்றியுள்ள நிலையில் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் இருந்து எந்த விதமான கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை.

முந்தைய சர்ச்சைகள்

2018ம் ஆண்டு மத்திய அரசு டெல்லி, அந்தமான் நிக்கோபர், லட்சத்தீவு, டாமன், டையூ மற்றும் தாத்ரா, நாகர் ஹவேலி கேடர்களில் டி.எஸ்.பி பதவிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியை, இதே போன்று எதிர்ப்புகள் பதிவாக, மத்திய அரசு கைவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Why amit shahs chandigarh move is a red zone for punjab