பாஜகவின் முந்தைய செயல்திறனை ஒப்பிடுகையில், இந்த மாதம் அஸ்ஸாமில் நடந்த 2 உள்ளாட்சி தேர்தல்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுள்ளது. போடோலாந்து பிராந்திய கவுன்சில் (பி.டி.சி) மற்றும் திவா தன்னாட்சி கவுன்சில் (டி.ஏ.சி) ஆகிய தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறும் அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் போக்குகளைத் தூண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இரண்டு கவுன்சில்கள்
அரசியலமைப்பின் 6வது அட்டவணையின் கீழ் தன்னாட்சி, சுயாட்சி அமைப்பான பி.டி.சி, கோக்ராஜர், பக்ஸா, உதல்குரி மற்றும் சிராங் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. பி.டி.சி-யின் 40 இடங்களுக்கான தேர்தல் டிசம்பர் 7 மற்றும் டிசம்பர் 10 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
டி.ஏ.சி என்பது மாநில சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சட்டரீதியான தன்னாட்சி கவுன்சில் ஆகும். இது கம்ருப் (மெட்ரோ), மோரிகான், நாகான் மற்றும் ஹோஜாய் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கியது. 36 உறுப்பினர்களைக் கொண்ட டி.ஏ.சி-க்கான தேர்தல் டிசம்பர் 17ம் தேதி நடைபெற்றது.
இத்தகைய கவுன்சில்கள் தங்கள் அதிகார வரம்புகளில் பல்வேறு விவகாரங்களில் சட்டங்களை உருவாக்கும் அதிகாரங்களைக் கொண்டுள்ளன. மேலும், அம்மாநிலத்தில் உள்ள பழங்குடி சமூகங்களின் நலன்களுக்காக வளர்ச்சி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த ஆண்டின் தேர்தல் முடிவுகள் முந்தைய தேர்தலுடன் எவ்வாறு ஒப்பிடப்படுகிறது?
2015ம் ஆண்டு பி.டி.சி தேர்தலில், போடோ மக்கள் முன்னணி (பி.பி.எஃப்) 20 இடங்களை வென்று ஆட்சிக்கு வந்தது. பாஜகவுக்கு ஒரே ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. பி.பி.எஃப் மாநில அரசில் பாஜகவின் கூட்டணி கட்சியாகும். இந்த ஆண்டு, பி.பி.எஃப் 17 இடங்களை வென்றது. இது ஒரு கட்சி தனியாக வென்ற அதிகபட்ச இடங்கள் ஆகும். ஆனால், பாஜக இந்த தேர்தலில் பி.பி.எஃப் உடன் கூட்டணி வைக்கவில்லை. அதற்கு எதிராக அது உறக்க பிரச்சாரம் செய்தது. மேலும், ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (யு.பி.பி.எல்) உடன் ஆளும் கூட்டணியை உருவாக்க முன்வந்தது.
2015ம் ஆண்டில் டி.ஏ.சி-யில் காங்கிரஸ் 15 இடங்களை வென்றது. பாஜக 3 இடங்களையும் ஏ.ஜி.பி 2 இடங்களையும் மட்டுமே வென்றது. இந்த முறை, டி.ஏ.சி தேர்தலில் பாஜக 33 இடங்களை வென்றது. காங்கிரஸ் 1 இடத்தை வென்றது. அம்மாநில அரசில் பாஜகவின் கூட்டணி கட்சியான ஏ.ஜி.பி 2 இடங்களை வென்றது.
இரண்டு தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவம் என்ன?
பி.டி.சி தேர்தல் முடிவுகள் போடோலாந்து பிராந்திய மண்டலத்தில் (பி.டி.ஆர்) பாஜகவின் வருகையை அடையாளம் காட்டுகின்றன - கடந்த முறை ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை 9 இடங்கள் வரை வென்றுள்ளது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், மோதல்களால் பாதிக்கப்பட்ட போடோலாந்து பிராந்திய மண்டலத்தில் (பி.டி.ஆர்) அமைதி மற்றும் வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை முன்னெடுப்பதற்கான போடோ ஒப்பந்தம் பாஜகவுக்கு அரசியல் லாபத்தை பெற்றுத் தந்ததாகத் தெரிகிறது.
போடோ அரசியல்வாதியாக இருக்கும் பி.பி.எஃப் தலைவர் ஹக்ரமா மொஹிலாரியின் அரசியல் முடிவின் தொடக்கத்தை பி.டி.சி தேர்தல் முடிவுகள் குறிப்பிடுகிறதா? அடுத்த ஆண்டு நடைபெறும் அம்மாநிலத் தேர்தலில் யு.பி.பி.எல் - பாஜக கூட்டணி எவ்வாறு பொருத்தமானதாக இருக்கிறது என்பதைக் காணலாம்.
டி.ஏ.சி-க்கான தேர்தலும் பாஜகவுக்கு முக்கியமானது - கடந்த முறை 3 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக இந்த ஆண்டு 33 இடங்கள் வரை வென்றுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் ரஞ்சித் தாஸ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் இது ஒரு முக்கியமான வெற்றி என்று கூறினார். பாஜக கடந்த முறை 3 இடங்களில் மட்டுமே வென்ற போதிலும், அது கவுன்சில் மீது செல்வாக்கு செலுத்தியது: முன்னாள் தலைமை நிர்வாக உறுப்பினர் (சி.இ.எம்) பபன் மந்தா இப்போது பாஜக உறுப்பினராக உள்ளார். மந்தாவுக்கு முன் இருந்த சி.இ.எம், ராமகாந்தா தேரி, இப்போது பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
2020ம் ஆண்டின் தொடக்கத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதற்காக பாஜக அசாமில் கடுமையான பின்னடைவை சந்தித்தது. அம்மாநிலத்தில் பல செல்வாக்குமிக்க குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்தச் சட்டம் அசாமின் பழங்குடி சமூகங்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதுகின்றன. இத்தகைய எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இந்த பகுதிகளில் வாக்காளர்களை பாஜக எவ்வாறு திசைதிருப்ப முடிந்தது என்பதை இந்த இரண்டு வெற்றிகளும் குறிப்பிடுகின்றன.
இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு என்ன கூறுகிறது?
இரண்டு கவுன்சில் தேர்தல் முடிவுகளும் காங்கிரசுக்கு ஒரு கடினமான கட்டத்தைக் குறிப்பிடுகின்றன. பி.டி.சி தேர்தலில் தனியாக வெற்றி பெற்ற காங்கிரஸ் உறுப்பினர் சஜால் குமார் சின்ஹா பாஜகவில் இணைந்துள்ளார். டி.ஏ.சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடத்தை மட்டுமே பெற்றது.
மூத்த அசாம் காங்கிரஸ் தலைவரும், 3 முறை முதல்வராக இருந்த தருண் கோகாய் மறைவின் பின்னணியில் இந்த முடிவுகள் வந்துள்ளன. வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒரு பெரிய கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அது எம்.பி பரோன் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான ஏ.ஐ.யுடி.எஃப் உடன் கூட்டணி அமைத்துள்ளது.
ஆனால், பல காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவுக்கு செல்லக்கூடும் என்ற ஊகமும் உள்ளது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் பேசப்படும் பெயர்களில் ஒன்று கோலாகாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ அஜந்தா நியோக் ஆவார். காங்கிரஸ் கட்சி முன்னாள் அமைச்சர் நியோக்கை கட்சியின் முக்கிய பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.