ஆஸ்திரேலியா – சீனா உறவில் விரிசல் விழ காரணம் என்ன?

மே மாதத்தில், சீன அதிகாரிகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பார்லி இறக்குமதிக்கு 80 சதவீதம் சுங்கக் கட்டணத்தை விதிப்பதாக அறிவித்தனர்.

By: Updated: October 8, 2020, 04:54:29 PM

Aashi Sadana

Why Australia-China ties have gone down under : ஆஸ்திரேலியா மற்றும் சீனாவுக்கு இடையே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பொருளாதார நல்லுறவில் இந்த ஆண்டு சில விரிசல்கள் விழுந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, உய்குர் இஸ்லாமியர்களை நடத்தும் விதம் மற்றும் ஹாங்காங் போராட்டங்கள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருவதால் சீனா அதிருப்தி அடைந்துள்ளது. கொரோனாவின் ஆரம்பம் மற்றும் தோற்றம் குறித்த உலகளாவிய விசாரணைக்கு வேண்டுகோள் வைத்தது கேன்பரா தான். அதனால் தற்போது பெய்ஜிங் அதிருப்தியில் உள்ளது.

அரசியல் முதல் கல்வி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் வரை ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து ஏற்பட்ட அச்சத்தின் விளைவு தான் தற்போதைய ஆஸ்திரேலியாவின் கடுமையான நிலைப்பாட்டிற்கு காரணமாக அமைந்துள்ளது. கொரோனா காலக்கட்டத்திலும் கூட, இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவின் வளர்ச்சி இந்த அவநம்பிக்கைக்கு கூடுதல் காரணமாக அமைந்துள்ளது. பொருளாதார இழப்புகள் இருப்பினும் கூட, ஆஸ்திரேலியா அது அதன் “மதிப்புகளுக்கு” துணை நிற்கும் என்ற ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டிலும் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சீனா உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஏற்றுமதியில் சீனாவின் பங்கு, வேறு எந்த நாட்டைக் காட்டிலும் 2019 ஆம் ஆண்டில், 117 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அல்லது 38%-த்தை எட்டியுள்ளது. சுரங்கம், சுற்றுலா, கல்வி போன்ற ஆஸ்திரேலிய துறைகள் பலவும் சீனாவுடனான வர்த்தகத்தால் பயனடைகின்றன. பால், சீஸ், ஒயின் மற்றும் இறைச்சி போன்ற பொருட்களை சீனா அங்கிருந்து இறக்குமதி செய்கிறது.

ஆசியாவின் இந்த மிகப்பெரிய வல்லரசின் சுரங்கம் மற்றும் விவசாயத்துறை முதலீடும் இதில் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் சீனாவின் முதலீடு பல ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டவர்களில் அதிகம் நபர்கள் சீனாவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியின் மீதான சுங்கவரி என்ற வகையிலேயே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் பொருளாதார உறவுக்கு பெரிதும் பங்களிக்கும் ஒரு தொழிற்துறையை அவர்கள் தொடவில்லை. கன உலோகங்கள். இந்த பிரிவுக்கு செல்வது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இரு தரப்பினரும் அறிந்திருக்கலாம், இதனை தலைகீழாக மாற்றுவது நிச்சயம் கடினம்.

உராய்வுகளுக்கான காரணம் என்ன?

இந்த ஆண்டு, ஏற்கனவே மோசமடைந்து வரும் இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது இந்த இரண்டு காரணங்கள் மட்டுமே.

ஆஸ்திரேலியாவின் கோவிட்19 விசாரணை :

ஏப்ரல் 2020இல், ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், கொரோனாவின் தோற்றம் மற்றும் ஆரம்ப கால கையாளுதல் குறித்த விசாரணையைத் தொடங்க பரிந்துரைத்தார். இதற்கு ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர்மற்றும் பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆதரவு தெரிவித்தனர். மோரிசன் இந்த ஆலோசனையை “முற்றிலும் விவேகமானது மற்றும் நியாயமானது” என்று அழைத்தார். மேலும் உலகம் முழுவதும் பல உயிர்களைக் கொன்ற ஒரு வைரஸைப் பற்றி உலகம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு சீனாவின் பதில் பன்முகத்தன்மை கொண்டது. முதல் எதிர்வினை ஆஸ்திரேலியாவிற்கான சீன தூதர் செங்க் ஜிங்யே கூறினார். ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் இணைந்து கொண்டு சீனாவுக்கு எதிராக அலைகளை உருவாக்குவதாக குற்றம் சுமத்தினார். மேலும் ஆஸ்திரேலியாவை உயர் கல்விக் கற்கவும், சுற்றுலாவுக்காகவும் தேர்வு செய்ய தடை விதிக்கவும் , ஒய்ன் மற்றும் மாட்டிறைச்சி இறக்குமதிக்கும் தடை விதிக்கவும் கேட்டுக் கொண்டார்.

மே மாதத்தில், சீன அதிகாரிகள் ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் பார்லி இறக்குமதிக்கு 80 சதவீதம் சுங்கக் கட்டணத்தை விதிப்பதாக அறிவித்தனர். ஆஸ்திரேலியா பார்லிக்கு சீனாவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு சில நாட்களுக்குப் பிறகு சீனா சுங்க கட்டணத்தை 80.5% விதித்தனர். சீனாவும் ஆஸ்திரேலிய ஒயின் குறித்து வர்த்தக விசாரணையைத் தொடங்கியது மற்றும் நான்கு பெரிய மாட்டிறைச்சி பதப்படுத்தும் ஆலைகளுக்கான இறக்குமதி அனுமதிகளை நிறுத்தியது.

ஊடகவியலாளர்கள்

இது இரண்டாவது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த செய்தியாளர் செங்க் லெய் பெய்ஜிஙில் சீன அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையிலான குற்ற செயல்களில் ஈடுபட்டதாகி கூறி கைது செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அரசு, அந்த பத்திரிக்கையாளர், அறியப்படாத இடம் ஒன்றில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

இதன் பின்னர், சீனாவில் பணிபுரியும் மேலும் இரண்டு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்கள் விசாரிக்கப்பட்டு செங் லீ தடுப்புக்காவல் வழக்கில் ஆர்வமுள்ள நபர்களாக அறிவிக்கப்பட்டனர். இரு ஊடகவியலாளர்களும் நள்ளிரவுக்குப் பிறகு சீன காவல்துறையினரால் பார்வையிடப்பட்டனர், மேலும் மாநில பாதுகாப்பு அமைச்சகத்திடம் விசாரணைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அவர்களின் வீடுகளில் சோதனை நடத்திய பிறகு, அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு செல்ல அனுமதி மறுத்தது சீன அரசு. அவர்கள் பிறகு ஆஸ்திரேலியா அரசு அதிகாரிகளிடம் தஞ்சம் புகுந்தனர். ஐந்து நாட்கள் தொடர் கண்காணிப்பிற்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் சென்ற பிறகு, ஆஸ்திரேலிய ஊடங்களால் பணிக்கு அமர்த்தப்பட்ட ஊடகவியலாளர்கள் யாரும் அந்நாட்டில் இல்லை.

அவர்கள் அங்கிருந்து சென்ற பிறகு, சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஷின்ஹூவா செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. ஆஸ்திரேலிய உளவுத்துறை ஆஸ்திரேலியாவில் உள்ள சீன ஊடகவியலாளர்கள் பலர் மீதும் சோதனை நடத்தியதாகவும் இது அவர்களின் உரிமைகளை “கடுமையாக மீறியதாகவும்” கூறியது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் பதில் ஏதும் தரவில்லை.

கருத்தியல் சிக்கல்கள் : இரண்டு நாடுகளும் இதற்கு முன்பும் கருத்து ரீதியாக முரண்பட்டுள்ளனர். சீன அரசால் நடத்தப்படும் வதை முகாம்களில் உய்குர் இஸ்லாமியர்கள் வைக்கப்பட்டிருப்பது செய்தியாக வெளியானதில் இருந்து ஆஸ்திரேலியா தன்னுடைய கருத்தை அறிவித்ததுடன், மனித உரிமைகளில் நிலை குறித்து அதிக அளவு கவலை கொண்டுள்ளதாகவும் அந்நாடு கூறியது.

இதேபோல், சீனா ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதித்த பின்னர், ஆஸ்திரேலியா ஹாங்காங்குடனான நாடு கடத்தும் ஒப்பந்தத்தை நிறுத்தியது. இந்த சட்டம் ஹாங்காங்கின் சுயாட்சியைக் குறைமதிப்பிற்கு ஆளாக்குவதாகவும், சீனாவுக்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதாகவும் கூறியது. ஆஸ்திரேலியாவும் ஹாங்காங் குடியிருப்பாளர்களுக்கு விசா நீட்டிக்க முடிவு செய்தது. இரண்டு நிகழ்வுகளிலும் சீனா கடுமையாக பதிலளித்ததுடன், ஆஸ்திரேலியாவை அதன் “நாட்டின் உள்விவகார விஷயங்களில்” தலையிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.

ஒருமித்த கருத்துகளை கொண்ட கூட்டாளிகளை தேடுதல்

கான்பெர்ரா ஆஸ்திரேலியாவின் சார்பில் இருந்து விலகிச் செல்வதற்கான வழியை தேட துவங்கியுள்ளது. மேலும் அதன் கருத்துகளுடன் ஒருமித்த இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக யோசித்து வருகிறது. பிரதமர் மோரிசன் கூட சீனாவின் ஆக்கிரமிப்பு மற்றும் விரிவாக்கத்தை எதிர்கொள்ள ஒருமித்த கருத்துகளை உடைய ஜனநாயக நாடுகள் இணைய வேண்டும் என்று அவர் கூறினார்.

குவாட்ரிலேட்டரல் இனிசியேட்டிவ் நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பேசிய ஆஸி வெளியுறவுத்துறை அமைச்சர், திறந்த, நம்பிக்கை கொண்ட, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் தேவையை எடுத்துரைத்தார், இவை விதிகளால் ஆளப்பட வேண்டுமே தவிர அதிகாரங்களால் அல்ல என்றும் கூறினார். ஆஸ்திரேலியா கனிமம் உள்ளிட்ட துறைகளில் பொருளாதாரத்திற்கான வாய்ப்புகளை தேட துவங்கியுள்ளது. 2007ம் ஆண்டு துவங்கப்பட்டதில் இருந்து, இந்த குவாட் அமைப்பு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ச்சியை சீர்குலைக்கவே உருவாக்கப்பட்டது என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டம், பங்கேற்பாளர்களில் நால்வரில் மூவர் சீனாவுடன் முரண்பட்டிருக்கின்ற நேரத்தில் நடைபெற்றுள்ளது.

இப்போது ஐந்து மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் சீனாவுடனான எல்லை மோதலில் இந்தியா ஈடுபட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் இடையில் பல சுற்றுகள் பேச்சு வார்த்தை நடைபெற்ற போதிலும், மோதல்கள் குறையவில்லை. இதேபோல், டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க-சீனா உறவுகள் மோசமான நிலையில் உள்ளன. குவாட் கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவின் ஆளும் கட்சி “சுரண்டல், ஊழல் மற்றும் வற்புறுத்தல்” என்று குற்றம் சாட்டினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Why australia china ties have gone down under

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X