பிரியாணி உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக்கு விலக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
பிரியாணி திருவிழாவில் சிக்கன், மட்டன், மீன், இறால் பிரியாணி மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் கூறியதால், ஆம்பூரில் பரபரப்பு நிலவியது.
ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சியை விலக்குவது என்பது பாகுபாட்டுக்கு இணையானது என்றும் அரசு நிதியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கான ஆணையம் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 1) தெரிவித்துள்ளது.
ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022-இல் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி பிரியாணி கடைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா 2 மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இருப்பினும், கனமழை முன்னறிவிப்பு என்று கூறி மே மாத நிகழ்வை காலவரையின்றி மாவட்ட ஆட்சியர் ஒத்திவைத்தார்.
அதே நேரத்தில், மே 12 ஆம் தேதி பிரியாணி திருவிழாவில் சாதி மற்றும் மத அடிப்படையில் பாகுபாடு நிலவுகிறதா என்று கேள்வி எழுப்பி கலெக்டருக்கு தமிழ்நாடு பட்டியல் சாதிகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
மே மாதம், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம், ஆம்பூர் நகரில் மே 13 முதல் மே 15 வரை மூன்று நாள் பிரியாணி திருவிழாவை அறிவித்தது. ஆம்பூர் பிரியாணி மணம் மிக்க சீரக சாம்பா அரிசியால் செய்யப்படுகிற மசாலா பிரியாணிக்கு பெயர் பெற்றது.
2019 ஆம் ஆண்டில் வேலூர் 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட பின்னர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு மாவட்டமான திருப்பத்தூரில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த திருவிழா திட்டமிடப்பட்டது.
திருவிழாவில் 30 க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் 20 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகளை அளித்து கொண்டாடுவது, ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு அளிப்பது திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உதவும் என்று நம்பப்பட்டது.
இருப்பினும், பிரியாணி திருவிழாவில் சிக்கன், மட்டன், மீன், இறால் பிரியாணி மட்டுமே விற்பனை செய்யப்படும் என ஆட்சியர் கூறியதால், ஆம்பூரில் பரபரப்பு நிலவியது.
மே மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய கலெக்டர் குஷ்வாஹா, பல இந்துக்கள் இந்த ஊரில் வசிப்பதால், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை அமைப்பாளர்கள் தவிர்க்கிறார்கள் என்று கூறினார்.
திட்டமிடப்பட்ட இந்த பிரியாணி திருவிழாவில் இருந்து பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பிரியாணி கடைகளை விலக்கிய அறிவிப்பு, இஸ்லாமிய மற்றும் தலித் அமைப்புகளிடமிருந்தும், ஆளும் திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்த தடையை எதிர்த்து, மே 12 ஆம் தேதி ட்வீட் செய்த விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை திமுகவின் திராவிட மாடலுக்கு எதிரானது என்றும், 75% மக்கள் உட்கொள்ளும் மாட்டிறைச்சியை திருவிழாவில் சேர்க்க வேண்டும் என்றும் கோரினார். மாவட்ட அதிகாரிகள் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால், விழா நடைபெறும் ஆம்பூர் வர்த்தக மையம் எதிரே இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணியை விசிக வழங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த சர்ச்சையை அடுத்து, கனமழை பெய்யும் என்று கூறி காலவரையின்றி பிரியாணி திருவிழா நிகழ்ச்சியை ஒத்திவைக்க மாவட்ட ஆட்சியர் முடிவு செய்தார். குஷ்வாஹா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பிரியாணி திருவிழா பின்னர் நடைபெறும் என்று கூறினார்.
பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சிக்கு விலக்கு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், மாட்டிறைச்சி பிரியாணி விற்க அனுமதிக்காதது தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு வகையான பாகுபாடு என்று கூறியது.
“தமிழ்நாடு பட்டியல் சாதிகள் ஆணையம், மனுவை பரிசீலித்து, எஸ்சி, எஸ்டி மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள்தொகைக்கு எதிரான பாகுபாடு வடிவிலான தீண்டாமை நடைமுறையாக இந்த விஷயத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதை ஏன் வகுப்புவாத அடிப்படையில் பாரபட்சமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்கான உங்கள் கருத்துக்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.
பிரியாணி திருவிழா நிகழ்ச்சியை ஒத்திவைத்த மாவட்ட ஆட்சியர், பிரியாணி திருவிழா ரத்து செய்யப்பட்டதால் ஆணையத்தின் நடவடிக்கை தனக்கு பொருந்தாது என்று கூறியதாக கூறப்படுகிறது. அரசு ஆணையத்தை ஆட்சியர் அவமரியாதை செய்கிறார் என்றும், அதற்காக தனி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆணையம் பதிலளித்துள்ளது. இருப்பினும், பிடிஐ செய்திப்படி, அவரது பதவிக்கு பொதுமக்கள் அளிக்கும் மரியாதைக்காக நடவடிக்கையைத் தவிர்க்க முடிவு செய்துள்ளது.
ஆணையத்தின் சமீபத்திய உத்தரவு
சாதி அடிப்படையிலான பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் அவர் எதையும் செய்யவில்லை என்ற மாவட்ட நிர்வாகத்தின் பதிலை தமிழ்நாடு பட்டியல் சாதிகள் ஆணையம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அரசு நடத்தும் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாது, அவ்வாறு செய்தால் அது பாகுபாட்டிற்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியது.
இந்த உத்தரவு தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் அனைத்து மாவட்டங்களின் உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது.
இது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதால், எதிர்காலத்தில் அரசு நடத்தும் நிகழ்வுகளில் இருந்து இதுபோன்ற விலக்குகள் மற்றும் மாறுபட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்திற்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.