பாம்புக்கடியை 'அறிவிக்கத் தக்க நோயாக' கருதுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, இது தொடர்பான தகவலை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாம்புக்கடி, நாட்டில் மிகப்பெரிய சுகாதார பிரச்சனையாக கருதப்படுகிறது. சுமார் மூன்று முதல் நான்கு மில்லியன் பாம்புக்கடி வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் பதிவாவதாக கூறப்படுகிறது. இதனால், ஏறத்தாழ 58 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகவும் கடந்த 2020-ஆம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 2030 ஆம் ஆண்டுக்குள் பாம்புக்கடி இறப்பை பாதியாகக் குறைக்கும் நோக்கத்துடன், பாம்புக்கடி நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயல் திட்டத்தை (NAPSE) அரசு அறிமுகப்படுத்தியது.
எந்த வகையான நோய்கள் 'அறிவிக்கத் தக்க நோயாக' கருதப்படுகின்றன?
இறப்பை ஏற்படுத்தக் கூடிய நோய்கள், உடனடி மருத்துவ உதவி அளிக்க வேண்டிய நோய்கள், உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நோய்கள் அனைத்தும் 'அறிவிக்கத் தக்க நோயாக' கருதப்படுகிறது.
இதற்கான பட்டியல் ஒவ்வொரு மாநிலத்திற்கு வேறுபடும். இதற்கான அறிவிப்பை வெளியிடுவது மாநில அரசின் பொறுப்பாகும். காசநோய், எச்.ஐ.வி, காலரா, மலேரியா, டெங்கு மற்றும் ஹெபடைடிஸ் போன்றவை இந்த பட்டியலில் அடங்கும்.
பாம்புக்கடியை ஏன் 'அறிவிக்கத் தக்க நோயாக' கருதுகிறார்கள்?
பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இவை பக்கவாதம், சுவாசப் பிரச்சனை, கடும் இரத்தப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்துகிறது. மேலும், திசுக்களையும் பாதிப்படையச் செய்கிறது.
எந்த பாம்பு கடித்தால் மரணம் ஏற்படும்?
இந்தியாவில் 310-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன. அவற்றில் 66 வகையான விஷம் கொண்ட பாம்புகளும், 42 வகையான லேசான விஷம் கொண்ட பாம்புகளும் அடங்கும். 23 பாம்பு இனங்கள் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் அவற்றின் விஷம் கொல்லும் தன்மை கொண்டவை. எனினும், இந்தியாவில் 90 சதவீத பாம்புக்கடி மரணங்கள் குறிப்பிட்ட 4 வகை பாம்புகளால் ஏற்படுகின்றன. அவை, இந்திய நாகப்பாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் பாம்புகள்.
ஏன் பாம்புக்கடியை 'அறிவிக்கத் தக்க நோயாக' மாற்ற மத்திய அரசு விரும்புகிறது?
பாம்புக்கடியை 'அறிவிக்கத் தக்க நோயாக' மாற்றுவதன் மூலம் முறையான கண்காணிப்புக்கு வழிவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாம்புக்கடியை கட்டுப்படுத்த முடியும் எனக் கருதப்படுகிறது. மேலும், பாம்புக்கடிக்கான மருந்துகள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு வழங்கவும், இதற்கான பயிற்சி அளிக்கவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநில சுகாதார செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் பாம்புக்கடி அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாம்புக்கடிக்கு சிகிச்சையளிப்பதில் உள்ள சவால்கள் என்ன?
சிகிச்சை: பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் சரியான நேரத்தில் ஒரு சுகாதார மையத்தை சென்றடைவதில்லை. நம்பிக்கை அடிப்படையில் குணப்படுத்துவதாக கூறுபவர்களிடம் அவர்கள் செல்கின்றனர்.
பல சமயங்களில், சுகாதார மையங்களில் உள்ள ஊழியர்களுக்கு பாம்புக்கடிக்கு சிகிச்சை அளிப்பதில் போதுமான பயிற்சி இல்லை.
விஷமுறிவு மருந்துகள்: நாட்டில் விஷமுறிவு மருந்துகள் உருவாக்க பயன்படுத்தப்படும் அனைத்து விஷங்களும் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் வசிக்கும் இருளர் பழங்குடியினரால் பிடிக்கப்படும் பாம்புகளிலிருந்து கிடைக்கப்படுகிறது. புவியியலின் அடிப்படையில் ஒரே பாம்பு இனத்தின் உயிர்வேதியியல் கூறுகளும், விஷத்தின் விளைவும் வேறுபடலாம் என்பதால் இது ஒரு பெரிய சவாலாகும்.
வயதுக்கு ஏற்ப விஷத்தின் வீரியம் மாறுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, விஷமுறிவு மருந்துகள் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன.
விஷமுறிவு மருந்துகளின் இந்த வரம்புகள் காரணமாக, ஆராய்ச்சியாளர்கள் இப்போது செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஆன்டிபாடிகளை உருவாக்கி வருகின்றனர்.
விஷம் சேகரிப்பு: பிராந்திய வேறுபாடுகளை கடந்து விஷமுறிவு மருந்துகளை உருவாக்க நாடு முழுவதும் மண்டல விஷ சேகரிப்பு வங்கிகளை அமைக்க நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். எனினும், வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972, பாம்புகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துகிறது. இது அத்தகைய வங்கிகளை அமைப்பதை கடினமாக்குகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.