நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த முயன்றதாகக் கூறி இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சிக்கு தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் அரசு திங்கள்கிழமை (ஜூலை 15) அறிவித்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான், 2018-24 வரை பாகிஸ்தான் அதிபராக பணியாற்றிய பி.டி.ஐ கட்சியின் நிறுவன உறுப்பினர் அரிஃப் ஆல்வி மற்றும் 2018-22 ஆம் ஆண்டுகளில் தேசிய சட்டமன்றத்தின் துணை சபாநாயகராக இருந்த பி.டி.ஐ உறுப்பினர் காசிம் சூரி ஆகியோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
"வெளிநாட்டு நிதியுதவி வழக்கு, மே 9 கலவரம் மற்றும் சைபர் விவகாரம் மற்றும் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவற்றின் பார்வையில், பி.டி.ஐ கட்சி தடை செய்யப்பட்டதற்கு மிகவும் நம்பகமான ஆதாரங்கள் உள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தகவல் அமைச்சர் அட்டா தரார் கூறினார். இந்த வழக்குகள் என்ன, மற்றும் "மே 9 கலவரம்" என்பது என்ன?
வெளிநாட்டு நிதியுதவி வழக்கு
2011 ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பி.டி.ஐ கட்சியின் நிறுவன உறுப்பினர் அக்பர் எஸ் பாபர், 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பி.டி.ஐ கட்சி சட்டவிரோதமாக மில்லியன் கணக்கான ரூபாய் வெளிநாட்டு நிதியைப் பெற்றதாகக் கூறி 2014 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் (ECP) மனு தாக்கல் செய்தார்.
2018 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஒரு ஆய்வுக் குழுவை அமைத்தது, ஜனவரி 2022 இல் வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், பி.டி.ஐ கட்சி வெளிநாட்டினர் மற்றும் நிறுவனங்களிடமிருந்து (பாகிஸ்தானில் சட்டவிரோதமானது) நிதியைப் பெற்றுள்ளது, மறைமுக நிதி மற்றும் அதன் டஜன் கணக்கான வங்கிக் கணக்குகளை மறைத்தது என்று கூறப்பட்டிருந்தது.
“அறிக்கையின்படி, 2009-10 நிதியாண்டு மற்றும் 2012-13 நிதியாண்டுக்கு இடைப்பட்ட நான்காண்டு காலப்பகுதியில் கட்சி ரூ.312 மில்லியன் அளவிற்கு மறைமுகமாக நிதி பெற்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. 2012-13 நிதியாண்டில் மட்டும் ரூ. 145 மில்லியனுக்கும் அதிகமான தொகையை நிதியாக பெற்றிருப்பதாக ஆண்டு வாரியான விவரங்கள் காட்டுகின்றன,” என்று டான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 2022 இல் பைனான்சியல் டைம்ஸ் நடத்திய விசாரணையில், துபாயை தளமாகக் கொண்ட அபிராஜ் குழுமத்தின் நிறுவனர் ஆரிஃப் நக்வி மற்றும் அபுதாபியின் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல்-நஹ்யான் ஆகியோரிடமிருந்து பி.டி.ஐ கட்சி நிதி பெற்றதாகக் குறிப்பிடப்பட்டது.
அடுத்த மாதம், வெளிநாட்டு பாகிஸ்தானியர்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொண்டதற்காக பி.டி.ஐ கட்சியை குற்றவாளி என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் கண்டறிந்தது. ஆனால் ஏப்ரல் 2023 இல், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இம்ரான் கானை அவரது கட்சி பெற்றதாகக் கூறப்படும் தடைசெய்யப்பட்ட நிதியுடன் தொடர்புபடுத்த போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறியது.
மறைக்குறியீடு வழக்கு
2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரால் இஸ்லாமாபாத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு வகைப்படுத்தப்பட்ட கேபிளை (அல்லது மறைக்குறியீடு) இம்ரான் கான் வெளிப்படுத்தியது தொடர்பான வழக்கு. அமெரிக்காவிடமிருந்து "அச்சுறுத்தும் செய்தி" இருப்பதாகக் கூறப்படும் கேபிள், தான் பிரதம மந்திரி பதவியிலிருந்து நீக்கியதில் அமெரிக்கர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரம் என்று இம்ரான் கூறினார். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததால், ஏப்ரல் 2022 இல் இம்ரான் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 2023 இல், அமெரிக்க செய்தி நிறுவனமான தி இன்டர்செப்ட், கூறப்பட்ட கேபிளின் ஒரு பகுதியை மீண்டும் உருவாக்கியது. மார்ச் 7, 2022 அன்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் தூதருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் சந்திப்பின் விவரம் அதில் இருந்தது, அதில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறித்து இம்ரான் எடுத்த நடுநிலை நிலைப்பாட்டில் அமெரிக்கர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த அறிக்கை வெளியான உடனேயே, பாகிஸ்தானின் ஃபெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (எஃப்.ஐ.ஏ) இம்ரானுக்கு எதிராக 1923 ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டம் பிரிவு 5 இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட கேபிளின் உள்ளடக்கங்களை பகிரங்கப்படுத்தியதற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.
இந்த ஆண்டு ஜனவரியில், இம்ரான் தேசத்துரோக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, சைபர் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், ஜூன் 3 அன்று, மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை ரத்து செய்து, இந்த வழக்கில் அவரை விடுவித்தது.
மே 9, 2023 கலவரம்
மே 9, 2023 அன்று, சுமார் 24 மணி நேரத்திற்குள் தொடர்ச்சியான கலவரங்கள் நாட்டை உலுக்கியது. இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊழல் வழக்கில் இம்ரான் கைது செய்யப்பட்ட உடனேயே வன்முறை தொடங்கியது.
இம்ரானை உடனடியாக விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான பி.டி.ஐ கட்சி தொண்டர்கள் பல நகரங்களில் வீதிகளில் இறங்கி போராடினர். லாகூரில் உள்ள ஒரு உயர்மட்ட இராணுவத் தளபதியின் குடியிருப்பு மற்றும் ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் உட்பட சுமார் 40 பொது கட்டிடங்கள் மற்றும் இராணுவ நிறுவல்களை வெறித்தனமான கும்பல் சேதப்படுத்தியது.
"மொத்தத்தில், 62 வன்முறை வெடிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன, இது நாட்டிற்கு ரூ. 2.5 பில்லியன் இழப்பை ஏற்படுத்தியது, இதில், அரசு மதிப்பீட்டின் படி, இராணுவத்திற்கு மட்டும் ரூ. 1.98 பில்லியன் இழப்புகள் ஏற்பட்டது" என்று டான் தெரிவித்துள்ளது. குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இம்ரானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட பதற்றத்தின் உச்சக்கட்டமாக இந்த கலவரம் பார்க்கப்பட்டது, குறிப்பாக முன்னாள் பிரதமர் இம்ரான் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு பதற்றம் தீவிரமடைந்தது. இராணுவம் பி.டி.ஐ கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தது. அடுத்த வாரங்களில், 100க்கும் மேற்பட்ட பி.டி.ஐ தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர்.
பொதுமக்களை தூண்டிவிட்டதாக இம்ரான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திங்களன்று, கலவரம் தொடர்பான ஒரு டஜன் வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே சிறையில் இருக்கும் இம்ரானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.