தனியார் சிறைகளை மூட ஏன் அமெரிக்க அரசு விரும்புகிறது?

இந்த உத்தரவு கூட்டாட்சி தண்டனைகளை அனுபவித்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் தவிர மாகாண மற்றும் உள்ளூர் தனியார் சிறைகளில் இருக்கும் நபர்களுக்கு பொருந்தாது.

Why does the US want to put an end to private prisons

Om Marathe

Why does the US want to put an end to private prisons? :  இன ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காணும் உத்தரவுகளில் செவ்வாய்க் கிழமை கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதில், நீதித்துறையினர் தனியார் சிறைகளை நம்பியிருப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவு அடங்கும். இது இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ட்ரெம்பின் கொள்கையில் இருந்து முற்றிலும் வேறுபட்டு உள்ளது.

இன சமத்துவம் தொடர்பான தன்னுடைய அணுகுமுறையில் அமெரிக்க அரசு மாற வேண்டும் என்று பைடன் கூறினார். மே மாதம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதன் மூலம் ஏற்பட்ட இனவெறிக்கு எதிரான பல மாத போராட்டங்களுக்கு பிறகு நவம்பர் மாதத்தில் ஜோபைடன் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றார்.

கார்ப்பரேசன்கள் சிறைவாசத்தின் மூலம் லாபம் ஈட்டுவதை தடுக்கும் முதல் முயற்சி இது என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் சிறைவாசம் மற்றும் இனசார்பு

தனிநபர் சிறைவாசம் மற்றும் சிறையில் அடைக்கப்படும் மக்களின் எண்ணிக்கை என்று இரு கூறுகளிலும் அமெரிக்கா மற்ற நாடுகளைக் காட்டிலும் அதிக அளவு நபர்களை சிறைக்கு அனுப்புகிறது.

2019ம் ஆண்டு பி.பி.எஸ். ஆவணத்தின் படி, உலகம் முழுவதும் 1 கோடி மக்கள் சிறையில் உள்ளனர். அதில் 20 லட்சம் நபர்கள் அமெரிக்காவில் சிறை வைக்கப்படுகின்றனர். சராசரியாக ஒரு லட்சத்திற்கு 655 நபர்கள் சிறை செல்கிறார்கள். இது எல் சால்வடார் (590), துர்க்மேனிஸ்தான் (552) மற்றும் தாய்லாந்து (541) நாடுகளைக் காட்டிலும் அதிகம்.

சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் வர்த்தகம் நடைபெறுவதை தடுக்கும் முயற்சியான “வார்ஸ் ஆன் ட்ரக்ஸ்” கால கட்டத்தின் போது அதிக அளவு மக்களை, 1980களில் சிறையில் அடைத்தது அமெரிக்க அரசு. அந்த கொள்கைகள் ஜனநாயக மற்றும் குடியரசு ஆட்சிகளால் மாற்றம் ஏதும் இன்றி தொடரப்பட்டது. அதனால் போதைப்பொருள் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கப்பட்டன, மேலும் ஆப்பிரிக்க அமெரிக்க சமூகங்களையே இது குறிவைத்தது.

சிறையில் இருக்கும் மக்களின் எண்ணிக்கை 1980 வரை வெறும் 5 லட்சம் என்ற அளவிலேயே இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 2000ம் ஆண்டுகளில் 20 லட்சமாக உயர்ந்தது. தி செண்டன்சிங் ப்ரோஜெக்ட் படி, அமெரிக்க சிறைகளில் இருக்கும் 60%க்கும் மேற்பட்ட கைதிகள் வெள்ளையின மக்கள் அல்லாதோர் (People of Color). வெள்ளையின ஆண்களைக் காட்டிலும் 6 மடங்கு அதிக அளவு கறுப்பின ஆண்களும், 2.7% ஹிஸ்பானிக் இன ஆண்களும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

தனியார் சிறைகள் – நிறைகளும் குறைகளும்

1980களில் சிறை செல்லும் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்ததால், உள்ளூர், மாகாண மற்றும் கூட்டாட்சி அரசினால் சிறை வசதிகளின் சுமையை நிர்வகிக்க இயலவீல்லை. புதிய கோரிக்கைகளை நிறைவேற்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்தது அரசு. அது இன்று சிறை தொழிற்த்துறை வளாகமாக மாறியுள்ளது.

இதில் முக்கிய பயனாளிகள் பலரும் சிறைச்சாலைகளை சொந்தமாக அல்லது நிர்வகிக்கும் தனியார் நிர்வாகிகள் தான். 1984ம் ஆண்டு லாபகர நோக்கமற்ற சிறைச்சாலை டென்னிசியில் துவங்கப்பட்டது. அரசுடன் ஒப்பிடும் போது குறைந்த சிறை ஊழியர்களுடன் பெரிய சிறைச்சாலைகளை புதிய கட்டிட வடிவமைப்பு மூலம் கட்டி கண்காணிப்பு தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்று தனியார் நிறுவனங்கள் வாதிட்டன. இதனால் வரி செலுத்துவோர் மணம் மிச்சப்படும் என்றும் கூறினர்.

2018ம் ஆண்டு தி வீக் வெளியிட்ட செய்தியின் படி, தனியார் சிறைகள் 5 பில்லியன் டாலர்கள் புழங்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளது. அமெரிக்க சிறைக்கைதிகளில் வெறும் 9%த்தினர் மட்டுமே தனியார் சிறைகள் உள்ளன. கோர்சிவிக் மற்றும் ஜியோ க்ரூப் என இரண்டும் இந்த துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்களாகும். இவை முன்னாள் குடியரசு தலைவர் டொனால்ட் ட்ரெம்பிற்கு தேவையான நிதி உதவிகளை வழங்கியது.

இருப்பினும் தனியார் நிறுவனங்கள் மூலம் சிறைச்சாலைகள் இயக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்ற விமர்சனம் எழுந்தது. ஏன் என்றால் இந்த சிறைச்சாலைகளின் நோக்கம் சிறைக்கதிகளை மறுவாழ்விற்கு தயார்செய்வதல்ல. மாறாக அதிக லாபங்களை உறுதி செய்வது. பங்குதாரர்களுக்கு மட்டுமே பதில் அளிக்க கூடியவர்களே தவிர அவர்கள் மக்களுக்கு பதில் அளிப்பதில்லை. இது போன்ற நிறுவனங்களுக்கு நிறைய ஊக்கத்தொகை கிடைப்பதால், தொடர்ந்து அரசிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற நிறைய நபர்களை சிறையிலிட விரும்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான அரசியல்

2016ம் ஆண்டு அமெரிக்காவின் நீதித்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் தனியார் சிறைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், தனியார் சிறைச்சாலைகளில் பாதுகாப்பு மீறல்கள், அரசு சிறைச்சாலைகளைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சிறைக் கைதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது 2 மடங்கு அதிகமாகவும், சிறைக்கைதிகள் அதிகாரிகளை தாக்குவது 28% அதிகமாகவும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரின் ஆதரவைப் பெற்ற தண்டனை-சீர்திருத்தக் கொள்கைகளுக்கு ஏற்ப, மத்திய அரசு தனியார் சிறைகளை அகற்றுவதாக ஒபாமாவின் நிர்வாகம் அறிவித்தது. “சட்ட ஒழுங்கு” வேட்பாளராக தன்னை பிரதிநிதித்துவப்படுத்திய டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இது மாறியது. பதவியேற்ற பின்னர், அவரது நிர்வாகம் ஒபாமா காலக் கொள்கைகளை மாற்றியது.

பைடன் என்ன செய்தார்?

செவ்வாய் கிழமை அன்று, பைடன், தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் சிறைகளுக்கும் நீதித்துறைக்கும் இடையே இருக்கும் ஒப்பந்தங்களை மீண்டும் புதுப்பிக்க வேண்டாம் என்று அட்டார்னி ஜெனரலுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஒபாமாவின் நிர்வாகத்தின் முடிவில் 2016ம் ஆண்டு இருந்த அதே நிலைக்கு மாறியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் 1.52 லட்சம் மக்கள் கூட்டாட்சி தண்டனைகளை அனுபவித்து வருகின்றனர். அதில் 14 ஆயிரம் நபர்கள் தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் சிறைகளில் உள்ளனர் என்கிறது அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை. இந்த உத்தரவு கூட்டாட்சி தண்டனைகளை அனுபவித்து வரும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் தவிர மாகாண மற்றும் உள்ளூர் தனியார் சிறைகளில் இருக்கும் நபர்களுக்கு பொருந்தாது. இந்த உத்தரவு சிறைகளுக்கு மட்டுமே பொருந்துமே தவிர போதுமான ஆவணங்கள் இன்றி புலம்பெயர்ந்த ஆயிரக் கணக்கானோர் தங்கி இருக்கும் டிடென்சன் மையங்களுக்கு பொருந்தாது.

இலாப நோக்கற்ற புலம்பெயர்ந்தோர் மையங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது பைடன் உள்ளார். இந்த வசதிகள் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் ( Immigration and Customs Enforcement’s ICE) தடுப்புக்காவல் அமைப்பின் பெரும்பகுதியைக் கொண்டிருப்பதால், இதை நடைமுறைப்படுத்துவது கடினமான முடிவாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Why does the us want to put an end to private prisons

Next Story
விஞ்ஞானிகள் ஆய்வு: ராமர் பாலம் வயதை எப்படி கணிக்க இருக்கிறார்கள்?Ram Setu underwater archaeology would it reveal structures of history and myth -விஞ்ஞானிகள் ஆய்வு: ராமர் பாலம் வயதை எப்படி கணிக்க இருக்கிறார்கள்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com