அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மற்றொரு ராஜந்திர நடவடிக்கையாக, ஜெர்மனி ரஷ்யாவுக்கு உதவி செய்கிறது என்ற ஒரு புதிய குற்றச்சாட்டின் பேரில், ஜெர்மனியில் நிறுத்தப்பட்டுள்ள கிட்டத்தட்ட 12,000 அமெரிக்க வீரர்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளார்.
டிரம்ப் ஏன் ஜெர்மனியிலிருந்து துருப்புக்களை வெளியேற்றுகிறார்?
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல சந்தர்ப்பங்களில், வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் ஐரோப்பிய பங்காளிகள் கூட்டமைப்பு கூட்டணியை ஆதரிக்க போதுமான செலவு செய்யவில்லை என்று விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு முதல், டிரம்ப் ஜெர்மனியில் இருந்து துருப்புக்களை வெளியேற்றுவதாக அச்சுறுத்திவந்தார். மேலும், ஜெர்மனி அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவு செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
இருப்பினும், பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் கூறுகையில், “தற்போதைய EUCOM (அமெரிக்க ஐரோப்பிய ராணுவம்) திட்டம் ஜெர்மனியில் இருந்து சுமார் 36,000 முதல் 24,000 வரை இராணுவ வீரர்களை இடமாற்றம் செய்யும், இது நேட்டோவை வலுப்படுத்தும். ரஷ்யாவின் தடுப்பை மேம்படுத்தும் மற்ற கொள்கைகள் சந்திப்பதை தடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் அமெரிக்கா ஏன் துருப்புக்களை வைத்துள்ளது?
நேட்டோவின் ஒரு பகுதி வடக்கு அட்லாண்டிக் கூட்டணி என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க துருப்புக்கள் ஐரோப்பா முழுவதும் உறுப்பு நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன. கூட்டணி உறுப்பினர்களின் இராணுவ அச்சுறுத்தலை எதிர்கொள்வதே இதன் நோக்கம். இந்த ஒப்பந்தம் கூட்டு ஒவ்வொரு உறுப்பினரையும் ஆபத்து, பொறுப்புகள், கூட்டு பாதுகாப்பின் நன்மைகளைப் பகிர்ந்துகொள்ளச் செய்கிறது.
2006 ஆம் ஆண்டில், நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட ஒப்புக்கொண்டனர். இருப்பினும், பெரும்பாலான உறுப்பு நாடுகள் இந்த உறுதிமொழியைக் கடைப்பிடிக்கத் தவறிவிடுகின்றன. நேட்டோவின் 2019 மதிப்பீடுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உட்பட ஒன்பது நாடுகள் மட்டுமே தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை பாதுகாப்புக்காக செலவிடுகின்றன என்பதைக் காட்டுகின்றன. ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய அதிகார மையங்கள் முறையே 1.38 சதவீதம் மற்றும் 1.84 சதவீதம் மட்டுமே பாதுகாப்புக்காக செலவிடுகின்றன.
இந்த துருப்புக்கள் எங்கே செல்வார்கள்?
இந்த திட்டத்தின் படி, சுமார் 6,400 வீரர்கள் மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்படுவார்கள். மீதமுள்ள 5,400 பேர் இத்தாலி, போலந்து உட்பட ஐரோப்பாவில் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். பாதுகாப்பு செயலாளர் எஸ்பர் கூறியபடி, இந்த திட்டத்திற்கு பென்டகன் பில்லியன் டாலர் செலவாகும்.
அமெரிக்க துருப்புகள் ஜெர்மனியில் இருந்து வேறு எங்கே செல்கிறது?
முக்கியமான ராணுவ மையங்களும் வெளியேற்றப்படும். EUCOM மற்றும் ஐரோப்பா சிறப்பு செயல்பாட்டுக்கான படை ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட்டிலிருந்து பெல்ஜியத்தில் உள்ள மோன்ஸுக்கு மாற்றப்படும்.
USCOM மற்றும் நேட்டோவின் சுப்ரிம் துணை தளபதி ஐரோப்பாவின் தலைமை தளபதியுமான டோட் வால்டர்ஸ் கூறுகையில், “நாங்கள் மூன்று படைப்பிரிவு அளவிலான தலைமையகங்களை மாற்றவும் விரும்புகிறோம். ஒரு வான் பாதுகாப்பு பீரங்கி பட்டாலியன் மற்றும் ஒரு பொறியியல் பட்டாலியன் இரண்டு சிறிய ஆதரவு ஒப்பந்த அமைப்புகளை இத்தாலிக்கு மாற்ற விரும்புகிறோம்” என்று கூறினார்.
துருப்புக்கள் திரும்பப் பெறுவதில் அமெரிக்காவின் எதிர்வினை என்ன?
இந்த முடிவை அமெரிக்க குடியரசுக் கட்சியினர் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் இருவரும் எதிர்க்கின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற ஆயுத சேவை குழுவில் உள்ள குறைந்தது 22 குடியரசுக் கட்சியினர் இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அதிபரை வலியுறுத்தி ஒரு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க எம்.பி.க்கள் எழுதியுள்ள கடிதத்தில், “"ஐரோப்பாவில், ரஷ்யாவால் முன்வைக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறையவில்லை, நேட்டோ மீதான பலவீனமான அமெரிக்க நிலைப்பாட்டின் சமிக்ஞைகள், ரஷ்ய ஆக்கிரமிப்பு மற்றும் சந்தர்ப்பவாதத்தை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.
எஸ்பரின் அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் வேட்பாளரான குடியரசுக் கட்சியின் செனட்டர் மிட் ரோம்னி இது குறித்து ட்விட் செய்துள்ளார். அதில், “ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களை ஜெர்மனியில் இருந்து அகற்றுவதற்கான நிர்வாகத்தின் திட்டம் மிகப்பெரிய தவறு. ரஷ்ய மற்றும் சீன ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கான நம்முடைய பரஸ்பர நிலைப்பாட்டில் இது, நம்மை நெருங்கி வரும் நண்பர் மற்றும் கூட்டாளியின் முகத்தில் ஒரு அறை விடுவதாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
செனட் ஆயுத சேவைகள் குழுவில் உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் ஜாக் ரீட், டிரம்பின் நடவடிக்கை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மற்றொரு சாதகமான நடவடிக்கை என்று கூறினார்.
இருப்பினும், ஜேர்மனியில் துருப்புக்களைக் குறைப்பதற்கான தனது முடிவைப் நியாயப்படுத்தி டிரம்ப் ட்வீட் செய்துள்ளார். அதில், “ஜெர்மனி ரஷ்யாவுக்கு ஆண்டுக்கு பல பில்லியன் டாலர்களை எரிசக்திக்காக செலுத்துகிறது. நாம் ஜெர்மனியை ரஷ்யாவிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதெல்லாம் என்ன? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.