Advertisment

இந்தியாவில் தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்… என்ன காரணம்?

லித்தியம் அயன் பேட்டரிகளால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் நான்கு நிகழ்வுகள் பதிவாகியுள்ளது. Li-ion பேட்டரிகள் என்றால் என்ன? அவை எப்படி வேலை செய்கிறது? எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்க என்ன காரணம்?

author-image
WebDesk
New Update
இந்தியாவில் தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்… என்ன காரணம்?

கடந்த 5 நாள்களில், ஓலா, ஒகினாவா மற்றும் ப்யூர் EV போன்ற நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இரு சக்கர மின்சார வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இத்தகைய தொடர் சம்பவங்கள், எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அத்தகைய வாகனங்களை இயக்கும் பேட்டரிகள் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

செல்போன், ஸ்மார்ட்வாட்ச்-களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளால் தான் எலக்ட்ரிக் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மற்ற பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில், லித்தியம் அயன் திறன் வாய்ந்ததாகவும், இலகுவாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், அவை தீ ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது சமீபத்திய சம்பவங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

லித்தியம் அயன் பேட்டரிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு வேலை செய்கின்றன?

மின்சார கார்கள் முதல் ஸ்மார்ட்போன், மடிக்கணினிகள் வரை லித்தியம்-அயன் (Li-ion) பேட்டரிகள் பயன்படுத்துவதால், அவை பிரபலமான பேட்டரி வகையாக மாறியுள்ளது. லித்தியம்-அயன் பேட்டரியில் ஒரு அனோட், கேத்தோடு, பிரிப்பான், எலக்ட்ரோலைட் மற்றும் 2 சேகரிப்பான்கள் உள்ளன. இதில், அனோட் மற்றும் கேத்தோடில் லித்தியம் சேமிக்கப்படுகிறது. அதே சமயம் எலக்ட்ரோலைட், சார்ஜ் செய்யப்பட்ட லித்தியம் அயன்களை அனோட்-லிருந்து கேத்தோடுக்கு கொண்டு செல்கிறது. இதே செயல்முறை, நேர்மாறாக separator வாயிலாக நடைபெறும். லித்தியம் அயன்களின் இயக்கம் அனோடில் இலவச எலக்ட்ரான்களை உருவாக்குகிறது. இது பாசிட்டிவ் கரன்ட் சேகரிப்பானில் சார்ஜை உருவாக்குகிறது.

லித்தியம் அயன் பேட்டரிகள் மற்ற பேட்டரிகளை காட்டிலும் எலக்ட்ரிக் கார்கள், ஸ்மார்ட்போன்கள் போன்றவற்றுக்கு பக்கவாக பொருத்தவதற்கான காரணம், அதன் குறைந்த எடை, ஹை என்ர்ஜி டென்சிட்டி, ரீசார்ஜ் செய்யும் திறன் ஆகியவை தான். இது தவிர, லி-அயன் பேட்டரிகள் பொதுவாக லீட் ஆசிட் பேட்டரியுடன் ஒப்பிடும்போது நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும்.

ஒரு லித்தியம் அயன் பேட்டரி ஒரு கிலோவிற்கு 150 வாட்ஸ்-மணிநேரத்தை சேமித்து வைக்கும். ஆனால், லீட்-அமில பேட்டரியால் ஒரு கிலோவிற்கு சுமார் 25 வாட்ஸ்-மணிநேரத்தை மட்டுமே சேமித்து வைத்திட முடியும்.

Li-ion பேட்டரிகள் மற்ற பேட்டரி வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக செயல்திறனை வழங்குகின்றன. இதனால், லித்தியான் அயன் பேட்டரி எலக்ட்ரிக் வாகனங்கள் நீண்ட தூரம் ஒரே சார்ஜில் பயணிக்கும், ஸ்மார்ட்போனும் நாள் முழுவதும் பயன்படுத்திட முடிகிறது.

லி-அயன் பேட்டரிகளின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று அதிக ஆற்றல் அடர்த்தி(high energy density ) ஆகும். இரு சக்கர EV தயாரிப்பாளரான Ather Energy இன் வலைப்பதிவின்படி, லி-அயன் பேட்டரிகளின் அதிக ஆற்றல் அடர்த்தி என்பது சில சூழ்நிலைகளில் இந்த செல்கள் நிலையற்றதாக மாறி, செயல்பாட்டைத் தடுக்கிறது. அவை பாதுகாப்பான செயல்பாட்டு வரம்பிற்குள் சிறப்பாக செயல்படுகின்றன. லி-அயன் பேட்டரி பாதுகாப்பாக இயங்குவதை உறுதிசெய்ய, பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS) பயன்படுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேட்டரி மேலாண்மை அமைப்பு என்றால் என்ன?

BMS என்பது அடிப்படையில் ஒரு லி-அயன் பேட்டரி பேக்கில் உள்ள அனைத்து செல்களுடன் இணைக்கப்பட்ட ஒரு மின்னணு அமைப்பாகும். இவை, அவற்றின் மின்னழுத்தத்தையும், மின்னோட்டத்தையும் தொடர்ந்து அளவிடுகிறது. BMSஇல் வெப்பநிலை கண்டறியும் சென்சார் உள்ளது. அதன் மூலம், பேட்டரி பேக்கின் வெவ்வேறு பிரிவுகளில் வெப்பநிலை பற்றிய தகவலை வழங்குகிறது. இந்தத் தரவு அனைத்தும், சார்ஜிங் மற்றும் டிஸ்சார்ஜிங் வீதம், பேட்டரி ஆயுள் சுழற்சி மற்றும் செயல்திறன் போன்ற பேட்டரி பேக்கின் மற்ற அளவுருக்களைக் கணக்கிடுவதற்கு BMSக்கு உதவுகிறது.

ஓலா, ஒகினாவா உட்பட பிற ஸ்கூட்டர் தீப்பிடிக்க என்ன காரணம்?

ஓலா, ஒகினாவா ஸ்கூட்டர்கள் தீப்பிடித்தற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அந்நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒகினாவா பைக் தீவிபத்து குறித்து நடத்திய முதற்கட்ட ஆய்வில், வாகனத்தை சார்ஜ் செய்வதில் அலட்சியமாக இருந்ததன் காரணமாக ஷார்ட் சர்க்யூட்டில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்த எடுத்துக்காட்டுகள் லி-அயன் பேட்டரி பேக்கில் உள்ள தவறுகளின் விளைவுகளை நினைவூட்டுகின்றன. தொழில் வல்லுநர்களின் கூற்றுப்படி, உற்பத்தி குறைபாடுகள், வெளிப்புற சேதம் அல்லது BMS இல் பயன்படுத்துவதில் உள்ள தவறுகள் போன்ற பல காரணங்களால் இந்த பேட்டரிகள் தீ ஆபத்தை ஏற்படுத்தலாம்.

மறுபுறம், லி-அயன் பேட்டரி பேக்கில் வெப்பநிலையும் முக்கிய பங்கு வகிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெயர் கூற விரும்பாத EV உற்பத்தியாளரின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், லி-அயன் பேட்டரிகள் வெப்பநிலையில் சிறப்பாகச் செயல்படும் ஆனால், மிக அதிக வெப்பநிலையின்போது, பேட்டரி பேக்கின் சுற்றுப்புற வெப்பநிலை 90-100 டிகிரி வரை உயரக்கூடும். அப்போதுதான் அவை தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கின்றார்.

EV மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களில் நூற்றுக்கணக்கான பேட்டரிகள் ஒரு பேட்டரி பேக்கில் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஒரு சில பேட்டரியில் சிக்கல் ஏற்பட்டு ஷாட் சர்க்யூட் ஆனால், அதன் தாக்கம் மொத்த பேட்டரிகளுக்கும் பரவி தீவிபத்தை ஏற்படுத்தக்கூடும். லி-அயன் பேட்டரிகள் உடனடியாக தீப்பிடித்து வெடிப்பதற்கு இதுவே காரணமாக கருதப்படுகிறது.

இது தவிர, வாகனத்தின் முந்தைய விபத்துக்களின் போது பேட்டரி பேக் சேதமாகியிருந்தால், சில நேரங்களில் சார்ஜ் செய்த பிறகு தீப்பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

சமீபத்திய தீவிபத்து சம்பவங்கள் குறித்து ஊடகத்திற்கு பதிலளித்த ஏதர் எனர்ஜியின் நிறுவனர் தருண் மேத்தா, உற்பத்தியாளர்கள் தயாரிப்புகளை வடிவமைக்க போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதில்லை. அனைத்து நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளையும் துல்லியமாக சோதிக்க, அரசாங்க அமைப்புகளால் நிர்ணயிக்கப்பட்ட சோதனை தரநிலைகள் போதுமானதாக இருக்காது என்றார்.

தீவிபத்து குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீவிபத்து குறித்து அந்தந்த நிறுவனங்களே ஆய்வு நடத்தி வரும் நிலையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், தீப்பிடிக்கும் வாகனங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்க தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தை (CFEES) அணுகியதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு லி அயன் பேட்டரி ஏற்படுத்திய தீ விபத்துகள்?

Li-ion பேட்டரிகளால் இயங்கும் சாதனங்கள் அல்லது வாகனங்கள் தீப்பிடித்து வெடித்த பல நிகழ்வுகள் உள்ளன. சாம்சங் நோட் 7 மற்றும் ஷாங்காயில் பார்க்கிங் கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த டெஸ்லா மாடல் எஸ் ஆகியவை தீப்பிடித்து எரிந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்லா சம்பவத்தைப் பொறுத்தவரை, வாகனத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள ஒற்றை பேட்டரி பகுதியால் தான் தீவிபத்து ஏற்பட்டதாகவும், மற்ற அமைப்புகளில் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.

சாம்சங் பொறுத்தவரை, ஆயிரணக்கணக்கான நோட் 7 சீரிஸூக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உற்பத்தி குறைபாடு தான காரணம் என கண்டறிந்தது. சில சமயங்களில் பேட்டரிகளைச் சுற்றியுள்ள இன்சுலேஷன் டேப் மிஸ் ஆகும் பட்சத்தில், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில பேட்டரிகளில் செல்களுக்குள் உள்ளே கூர்மையான ப்ரோட்ரஷன்கள் இருந்தன. இது, அனோட் மற்றும் கேத்தோடிற்கு இடையே உள்ள Seperatorஐ சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Electric Vehicle Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment