சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக் தனது பெயரை மாற்றப்படவுள்ளதாகவும், அதற்கான முடிவை பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் எடுப்பார் என தி வேர்ஜ் செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக் பெயரை மட்டும் மாற்றப்போகிறது இல்லை, நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக மெடாவெர்ஸ் என்ற மெய்நிகர் உலகை படைப்பதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த மெடாவெர்ஸ் முயற்சிக்காக ஏற்கனவே 50 ஆயிரம் டாலர்களை பேஸ்புக் முதலீடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக,அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 10,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மெய்நிகர் உலகை படைக்கும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.
பேஸ்புக் பெயர் மாற்றம் தகவல் பரவ தொடங்கியதுமே, மெடாவெர்ஸ் என்றால் என்ன என்பது பலரின் கேள்வியாக அமைந்துள்ளது. அது தொடர்பான விரிவான தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
பேஸ்புக் பெயர் மாற்றம் ஏன்?
பேஸ்புக் பெயர் மாற்றப்படும் பட்சத்தில், மற்ற சமூக வலைதளம் போல் இதுவும் தாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும். உதாரணமாக, வணிகத்தை விரிவுபடுத்த நினைத்த கூகுள், கடந்த 2015ஆம் ஆண்டு, ஆல்பாபெட் ஐஎன்சி என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கியது. ஆட்டோமொபைல் ஆலைகள், சுகாதார தொழில்நுட்பம், தொலைதூர இடங்களில் இணையச் சேவை அளிப்பது உள்பட பல்வேறு நிறுவனங்கள் ஆல்பாபெட் ஐஎன்சி கீழ் இயங்கிவருகிறது.
தற்போது, பேஸ்புக் தாய் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ஓக்குலஸ் ஆகிய நிறுவனங்கள் தற்போது இயங்கிவருகிறது.
பேஸ்புக் நிறுவனம் தற்போது மெடாவெர்ஸ் என்னும் மெய்நிகர் உலகை படைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏனென்றால், வெறும் சமூக வலைதளமாக பேஸ்புக் இருக்கக்கூடாது என அதன் நிறுவனர் கருதுகிறார். அதற்கான காரணம், கடந்த சில நாள்களாக பேஸ்புக் மீது எழுந்துள்ள எதிர்மறை கருத்துகள் தான். நிறுவனத்தின் பாதுகாப்பில் குறைபாடு இருப்பதாகப் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். குழந்தைகளை மனரீதியாகப் பாதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டில், இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி அறிமுகம் தள்ளிச்சென்றது.
அமெரிக்கா உள்பட பல நாடுகளில் அரசின் கட்டுப்பாட்டு ஸ்கேனரில் பேஸ்புக் உள்ளது. ஆனால், பேஸ்புக்கின் நோக்கம் பெரியது என்பதை காட்டும் வகையிலே, மெடாவெர்ஸில் அதிக கவனம் செலுத்திவருகிறது.
மெடாவெர்ஸ் ஐடியா வந்தது எப்படி?
நீல் ஸ்டீஃபென்சனின் 1992ஆம் ஆண்டு வெளியான அறிவியல் புனைவுப் புதினமான ஸ்னோ க்ராஷில் இந்த மெடாவெர்ஸ் பற்றி முதன்முதலில் கூறப்பட்டு இருந்தது. அதில், கற்பனை உலகத்தில் அரசாங்கம் அனைத்து அதிகாரங்களையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கும். நவீன உலகின் பல அம்சங்களைக் மெய்நிகர் ரியாலிட்டி (VR) மற்றும் டிஜிட்டல் கரண்சி மூலம் கையாளும். இதே ஐடியா, 2011இல் வெளியான Ready Player One புத்தகத்திலும் இடம்பெற்றது. இதனை மையமாக வைத்துத்தான், 2018இல் திரைப்படம் வெளியானது. அந்த வகையில், மெடாவேரஸ் குறித்த பல கதைகள் இணையத்தளத்திலும் உள்ளது.
மெடாவெர்ஸ் என்றால் என்ன?
மெடாவெர்ஸ் என்பது இணைய உலகமாகும். பல்வேறு கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் மக்கள் இந்த உலகின் நகர முடியும் மற்றவர்களிடம் பேச முடியும். இது முழுக்க முழுக்க டிஜிட்டல் பொருளாதாரம் ஆகும். டிஜிட்டல் கரண்சி மூலம் நிஜ உலகை போல் மெய்நிகர் ரியாலிட்டி (VR) மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி (AR)தொழில்நுட்பம் மூலம் உருவாக்கிய உலகில் பயணிக்க முடியும். ஆனால், அதே சமயம் சிம்பிளாக விஆர் ஹெட்சேட் அணிந்து கேம் விளையாடுவது போல் இது கிடையாது, , மெடாவெர்ஸை புதிதாக அமைப்பதோ அல்லது நடுவில் பாஸ் செய்யவோ இயலாது. அது தொடர்ச்சியாக எண்ட் கார்ட் இன்றி நடைபெற்றுக்கொண்டிருக்கும்.
மெடாவெர்ஸ் திட்டத்தை நிறுவும் பணியில் பேஸ்புக் மட்டும் ஈடுபடவில்லை. ஃபோர்ட்நைட்டை கேம்மை உருவாக்கிய எபிக் கேம்ஸ், மெடாவேர்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகிறது. ஃபோர்ட்நைட் ஏற்கனவே மெடாவேர்ஸூக்கு தேவையான லைவ் நிகழ்வுகள், சொந்த கரண்சி போன்றவற்றை வைத்துள்ளது.
மெடாவெர்ஸ் எப்படி வேலை செய்கிறது.
விஆர் தொழில்நுட்பம் கொண்ட ஃபோர்ட்நைட் கேம்மை முழுமையாக மெடாவெர்ஸில் வேலை செய்கிறது என கூறமுடியாது. ஆனால்,அதன் சில் அம்சங்கள் கேமில் இடம்பெற்றுள்ளன. அண்மையில், போர்ட்நைட் கேமில் இசை கச்சேரி ஒன்று நேரலையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல கலைஞர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த நேரலை நிகழ்ச்சியில் உலகம் முடிவதிலுமிருந்து லட்சக் கணக்கான பயனர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு கலந்துரையாடினர். இது வெறும் கேமாக மட்டுமில்லாமல், கலைஞர்கள் தங்களது திறமையை நிரூபிக்கும் இடமாகக் காட்சியளித்தது. மேலும், மெடாவெர்ஸ் உலகில் பயணிக்க கிரிப்டோகரன்ஸ் போன்ற டிஜிட்டல் கரண்சிகள் பயன்படுத்தப்படும். மெய்நிகர் மற்றும் ரியல் உலகம் ஒன்றிணைந்த கற்பனை கதையை நிஜத்தில் கொண்டு வருவதாக மெடாவெர்ஸ் உள்ளது.
மெடாவெர்ஸில் பேஸ்புக் திட்டம் என்ன?
ஃபேஸ்புக்கின் எதிர்காலத்திற்கு மெடாவெர்ஸ் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான ஓக்குலஸ் விஆர் கேமிங் பிளாட்ஃபார்ம், மெட்டாவெர்ஸின் நுழைவாயிலாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுவருகிறது.
மெடாவேர்ஸ் தொடர்பான பேஸ்புக்கின் கூற்றுப்படி, " உங்கள் அருகில் இல்லாத நபருடன் சேர்ந்து பயணிக்க மெடாவேர்ஸ் உதவுகிறது. நீங்கள் நண்பர்களுடன் ஊர் சுற்றலாம், வேலை செய்யலாம், விளையாடலாம், படிக்கலாம், பர்சேஸ் செய்யலாம், எதேனும் புதியதை உருவாக்குவது உள்ளிட்ட பல நன்மைகள் நிறைந்திருக்கும். உங்களை அதிக நேரம் ஆன்லைனில் இருக்கவைப்பது நோக்கமில்லை. நீங்கள் ஆன்லைனில் செலவிடும் நேரத்தை உபயோகமாக மாற்றும் முயற்சியாகும்" என தெரிவித்தது.
மெடாவெர்ஸ் திட்டத்தை பேஸ்புக்கால் ஓர் இரவில் செயல்படுத்த இயலாது. இருப்பினும், திட்டத்தை நிஜ உலகில் செயல்படுத்தும் முயற்சிகளையும், அத்தகைய முயற்சியில் ஏழும்பும் கேள்விக்கான விடையும் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை வெறும் லாபம் நோக்கத்துடன் பார்க்காமல், பொறுப்புணர்வுடன் உருவாக்கும் முயற்சியில் பேஸ்புக் களமிறங்கியுள்ளது.
மெய்நிகர் ரியாலிட்டி (VR) மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி (AR) ஆகியவற்றில் பேஸ்புக் அதிக முதலீடு செய்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் பயனர்களை இந்த சாதனங்கள் மற்றும் செயலிகள் மூலம் இணைக்க பேஸ்புக் திட்டமிட்டிருக்கிறது.
சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிகாக மாறியுள்ள பேஸ்புக் பெயர் மாற்றம் குறித்து கேள்வி கேட்கையில், ஊகங்கள் மற்றும் வதந்திகள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என பேஸ்புக் தெரிவித்துள்ளது குறிப்பிட்டுள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.