/tamil-ie/media/media_files/uploads/2022/07/Gota-1.jpg)
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து தப்பினார். அவர் புதன்கிழமை (ஜூலை 13) மாலத்தீவு சென்றடைந்தார்.
தொடர்ந்து அங்கிருந்து சிங்கப்பூர் செல்லும் சவுதியா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றுள்ளார்.
அவர் இன்று (வியாழக்கிழமை) மதியம் சிங்கப்பூர் சென்றுவிட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவலை பெயர் குறிப்பிட விரும்பாத மாலத்தீவு அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக மேற்கொள்காட்டி ஏபி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக கோத்தபயவும் அவர் மனைவியும் சிறிய நகரமான சிங்கப்பூரில் சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளனர். முன்னதாக கோத்தபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி மாலத்தீவில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருந்தனர். எனினும் அவர்களின் இறுதி இலக்கு சிங்கப்பூராக இருக்குமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
ராஜபக்சவின் சிங்கப்பூர் பயணத்துக்கு காரணம் என்ன என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் தெரியவில்லை. எனினும் ராஜபக்சவின் குடும்பம் சிங்கப்பூரில் உறுதியான தொடர்புகளை கொண்டுள்ளது.
மேலும் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர்.
கோத்தபய ராஜபக்ச அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களுக்கு முன்பு அதே ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒரு இலங்கைத் தமிழர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 2021இல் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் சிங்கப்பூர் சென்றார்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.