இந்த மதிப்பீட்டு ஆண்டில் (2019-2020) , கடந்த நிதி ஆண்டிற்கான (2018 - 2019) வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை மாதம் 31ம் தேதி தான் இறுதி நாள் என்று தெரிந்து அனைவரும் மிக மிக அவசரமாக தங்களின் வருமான வரியை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மத்திய நேரடி வரி வாரியம் வரி செலுத்துவோர்களுக்கு ஒரு ஆறுதலான அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் நீங்கள் உங்கள் வருமான வரியை செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பிற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
பல பட்டய கணக்கர்கள் மற்றும் அவர்களை சார்ந்து இயங்கி வரும் நிறுவனங்கள் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நடைமுறையில் உள்ளன. எனவே அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்ட காரணத்தால் இந்த புதிய காலக்கெடுவை நீட்டித்து அறிவித்துள்ளது இந்திய வருமான வரித்துறை. குறிப்பிட்ட பிரிவில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரியான நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன நிகழும்?
ஜூலை 31ம் தேதிக்குள் அனைவரும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்பது கடந்த ஆண்டு கட்டாயம் ஆக்கப்பட்டது. வரி தாக்கல் ரிட்டர்ன்ஸை செலுத்த மார்ச் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. 31ம் தேதிக்குள் அதனை எந்த வித அபராதமும் இன்றி செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இம்முறை ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிக்குள் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்யவில்லை என்றால் 5000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அதை மீறினால் ரூ.10,000 அபராதம் கட்ட வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் ரூ. 1000 - அபராத தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஃபார்ம் 16ல் வருமான வரி விலக்கு பெறும் சான்றிதழ்களை சமர்பிக்க ஜூன் 15ம் தேதியில் இருந்து ஜூலை 10ம் தேதி வரை 25 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.