கடந்த வாரம், சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (MoEFCC) வனப் பாதுகாப்புச் சட்டம், 1980 இல் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வெளியிட்டது. இந்த திருத்தங்கள் காடுகளை மற்ற நோக்கங்களுக்காக மாற்றுவதை எளிதாக்குகிறது மற்றும் சில வகை வளர்ச்சி திட்டங்களுக்கு அமைச்சகத்திலிருந்து அனுமதி பெற வேண்டிய தேவையிலிருந்து விலக்கு அளிக்கிறது. அமைச்சகம் 15 நாட்களுக்குள் மாநில அரசுகள் மற்றும் பொது மக்களிடமிருந்து கருத்துக்களை கேட்டுள்ளது. பின்னூட்டங்களை ஆராய்ந்த பிறகு, அது ஒரு திருத்தச் சட்ட வரைவை உருவாக்கும், அதைத் தொடர்ந்து ஒரு சட்டத் திருத்த மசோதா வரைந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு இரண்டாவது முறையாக பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்படும்.
சட்டம் இப்போது ஏன் திருத்தப்படுகிறது?
இதற்கு முன்பு ஒரே ஒருமுறை மட்டுமே இந்தச் சட்டம் திருத்தப்பட்டது, அது 1988 ஆம் ஆண்டில். காடுகளின் தற்போதைய வரையறையானது, நாடு முழுவதும் நிலத்தை காடுகள் ஆக்கிரமித்துள்ளதாக அமைச்சக அதிகாரிகள் கூறினர். தனியார் உரிமையாளர்கள் கூட தங்கள் சொந்த சொத்தை வனம் அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. இச்சட்டத்தின் கீழ், குத்தகை ஒதுக்கீடு உட்பட, எந்த நோக்கத்திற்காகவும் எந்த வன நிலத்தையும் மாற்ற மத்திய அரசின் முன் அனுமதி தேவை.
1996 ஆம் ஆண்டில், டி.என்.கோடவர்மன் திருமுல்பாட் Vs இந்திய அரசு வழக்கில், உரிமை, அங்கீகாரம் மற்றும் வகைப்பாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், எந்த அரசாங்க பதிவிலும் காடுகளாகப் பதிவுசெய்யப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி வன நிலத்தின் வரையறை மற்றும் வரம்பை உச்சநீதிமன்றம் விரிவுபடுத்தியது. முன்னதாக, இந்த சட்டம் பெரும்பாலும் காடுகள் மற்றும் தேசிய பூங்காக்களுக்குப் பயன்படுத்தப்பட்டது. நீதிமன்றம் காடுகளின் வரையறையை "காடுகளின் அகராதி அர்த்தத்தை" உள்ளடக்கியதாக விரிவுபடுத்தியது, இதன் பொருள் காடு என்ற பகுதி அது பாதுகாக்கப்பட்டதாக அறிவிக்கப்படாவிட்டாலும், அதன் உரிமையையும் பொருட்படுத்தாமல் தானாகவே "தனிப்பட்ட காடு" என்பதாகிவிடும். காடு அல்லாத நிலத்தில் உள்ள தோட்டங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்று கருதி இந்த உத்தரவு விளக்கப்பட்டது.
அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், "சட்டத்தின் விதிகளை சீராக்க" தற்போதைய திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. வன நிலத்தை அடையாளம் காண்பது அகநிலை மற்றும் தன்னிச்சையானது. மேலும், சட்டத்தின் "தெளிவின்மை" "குறிப்பாக தனிப்பட்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து கடும் அதிருப்தி மற்றும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றும் அவர்கள் கூறினர்.
"ரயில்வே அமைச்சகம், சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆகியவற்றுடன் வன அனுமதி தொடர்பான கடுமையான மனக்கசப்பை" வன அமைச்சகம் மேற்கோள் காட்டியது. இந்த அனுமதிகளுக்கு வழக்கமாக பல ஆண்டுகள் ஆகும், இதனால் உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாகும்.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் என்ன?
* 1980 க்கு முன்னர் ரயில்வே மற்றும் சாலை அமைச்சகங்களால் கையகப்படுத்தப்பட்ட அனைத்து நிலங்களுக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இந்த நிலங்கள் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டது என்று கூறுகிறது, ஆனால் பின்னர் இந்த பகுதிகளில் காடுகள் வளர்ந்துள்ளன, மேலும் அரசாங்கத்தால் நிலத்தை விரிவாக்கத்திற்கு பயன்படுத்த முடியாது. திருத்தம் கொண்டுவரப்பட்டால், இந்த அமைச்சகங்களுக்கு இனி அவர்களின் திட்டங்களுக்கு வன அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை, அல்லது அங்கு கட்டிடம் கட்ட இழப்பீட்டு வரி செலுத்த தேவையில்லை.
* 1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள மாநில-குறிப்பிட்ட தனியார் காடுகள் சட்டத்திற்குள் அல்லது காடுகளின் அகராதி அர்த்தத்திற்குள் வரும் நிலங்களுக்கு, குடியிருப்பு அலகுகள் உட்பட "நல்ல நோக்கங்களுக்காக கட்டமைப்புகளை நிர்மாணிக்க" 250 சதுர மீ.க்கு ஒரு முறை தளர்வுக்கு அனுமதிக்க அரசாங்கம் இந்த சட்டத்திருத்தத்தை முன்மொழிகிறது.
* சர்வதேச எல்லைகளுக்கு அருகில் உள்ள பாதுகாப்புத் திட்டங்களுக்கு வன அமைச்சகத்தின் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
* வனப்பகுதிகளில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பது அனுமதிக்கப்படும், ஆனால் விரிவாக்கப்பட்ட ரீச் துளையிடுதல் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே.
* குத்தகை புதுப்பித்தலின் போது வனத்துறை அல்லாத நோக்கங்களுக்காக வரி விதிப்பை நீக்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது, குத்தகை வழங்கும் போது இரட்டை வரி விதிப்பு மற்றும் புதுப்பித்தல் "பகுத்தறிவு அல்ல" என்று கூறியுள்ளது.
* சாலைகளுக்கு அருகில் வரும் தோட்டங்களை அகற்ற சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்கப்படும்.
கவலைகள் என்ன?
* வன ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வன விதிகளை தளர்த்துவது கார்பரேட்மயமாக்கம் மற்றும் பெரிய அளவிலான காடுகள் காணாமல் போவதற்கு உதவும் என்று கூறுகின்றனர்.
* தனியார் நிலத்தில் காடுகளுக்கு விலக்கு அளிப்பது பற்றி, முன்னாள் வன அதிகாரிகள் கூட பல காடுகள் காணாமல் போகும் என்று கூறினர். உதாரணமாக, உத்தரகாண்டில் 4% நிலம் தனியார் காடுகளின் கீழ் வருகிறது.
* பிருந்தா காரத் (சிபிஎம்) போன்ற தலைவர்கள் பழங்குடியினர் மற்றும் காடுகளில் வாழும் சமூகங்களுக்கு என்ன நடக்கும் என்று கேட்டிருக்கிறார்கள் - திருத்தங்களில் இந்த பிரச்சினை பற்றி எந்த தகவலும் இல்லை.
* 1980 க்கு முன்னர் கையகப்படுத்தப்பட்ட வன நிலத்தில் சாலைகள் மற்றும் ரயில்வேக்கு விலக்கு அளிப்பது காடுகள் மற்றும் வனவிலங்குகளுக்கு - குறிப்பாக யானைகள், புலிகள் மற்றும் சிறுத்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
* தனியார் காடுகளில் உள்ள தனியார் குடியிருப்புகளுக்கு ஒரு முறை விலக்கு அளிப்பது காடுகளை துண்டாக்குவதற்கும், ஆரவல்லி மலை போன்ற திறந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட்டுக்கும் வழிவகுக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் குழுக்கள் ஏதேனும் நேர்மறையானவற்றைக் கவனிக்கிறதா?
சட்ட திருத்த வரையறையை பொதுவெளியில் வெளியிட்டு இருப்பதையும், பாராளுமன்ற செயல்முறையைப் பயன்படுத்தி திருத்தத்தின் மூலம் மாற்றங்களைச் செய்வதற்கான முடிவையும் அவர்கள் வரவேற்றுள்ளனர். சுற்றுச்சூழல் வழக்கறிஞர் ரிட்விக் தத்தா, கடந்த ஒன்றரை தசாப்தத்தில், எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், நிலையான நடைமுறை அலுவலக குறிப்புகள் மற்றும் கடிதங்கள் மூலம் சட்டங்களை மாற்றுவதே தவிர சட்டரீதியான செயல்முறையின் மூலம் அல்ல என்று கூறியுள்ளார்.
சுற்றுச்சூழல் குழுக்களும் இதை ஒப்புக் கொண்டுள்ளன:
* MoEFCC வன நிலத்தை மாற்றுவதற்கான அழுத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. அதாவது ரயில் மற்றும் சாலைகள் போன்ற அமைச்சகங்களுக்கு உள்ள சிக்கல்கள். மேலும் அமைச்சகம் முன்மொழிவு குறித்து ஒரு பொது விவாதத்தை அனுமதித்துள்ளது.
* அறிவிக்கப்பட்ட காடுகளுக்கு வனச் சட்டங்களை மிகவும் கடுமையாக்க முன்மொழியப்பட்டது, ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை உட்பட அதிகரித்த அபராதங்களுடன் பிணையில்லா தண்டணையை வழங்குகிறது.
* குறிப்பிட்ட காடுகளில் எந்தவிதமான மாற்றத்தையும் அது அனுமதிக்கவில்லை.
* இந்த சட்ட முன்வடிவு காடுகளை வரையறுக்கவும் அடையாளம் காணவும் முயல்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.