கனடா நாட்டில் வெறுப்பு குற்றங்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் அதிகரித்து வருவதை காரணம் காட்டி இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை ஒன்றை வழங்கியது.
அதில் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
கனடாவில் சமீபகாலமாக என்ன நடக்கிறது?
கனடாவில் அண்மையில் காலிஸ்தான் வாக்கெடுப்பு மற்றும் இந்து கோயில் சேதம் தொடர்பான சம்பவங்கள் நடைபெற்றன. இது தொடர்பாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிண்டம் பாக்ஷியின் செப்.22ஆம் தேதியிலான ஊடக சந்திப்பின்போது செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதில் பிரதானமாக காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்குப் பதிலளித்த பாக்ஷி, “இது ஒரு கேலிக்கூத்தானது.
இந்த விவகாரம் குறித்து கனடா அரசாங்கத்திடம் கூறப்பட்டுள்ளது. கனடா அரசாங்கம் இந்திய இறையாண்மையை மதிக்கிறது. இதனை கனடா ஆதரிக்காது” என்றார்.
மேலும், “பயங்கரவாத செயல்கள் அதிகரிப்பை நாங்கள் கூர்ந்து கவனிக்கிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும்” என்றும் கூறினார்.
எந்த மாதிரியான வெறுப்பு குற்றங்கள் நிகழ்கின்றன
இம்மாத தொடக்கத்தில் கனடாவின் டோரண்டோவில் உள்ள சுவாமி நாராயணன் மந்திர் (கோவில்) இந்தியாவுக்கு எதிரான கோஷங்களுடன் தாக்கப்பட்டது.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் கனடா அரசாங்கம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது.
கனடாவில் இந்தியர்கள், காலிஸ்தான் வரலாறு
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்தியர்கள் கனடாவுக்குச் சென்று வருகின்றனர், அந்நாட்டில் கணிசமாக இந்தியர்கள் வாழ்கின்றனர். அந்த வகையில் உலகில் மிகப்பெரிய இந்தியர்களின் புலம்பெயர் நாடு இதுவாகும்.
கனடா இன்று பல இந்திய மாணவர்களுக்கு உயர் கல்விக்கு விருப்பமான இடமாகும், சுமார் 60,000 மாணவர்கள் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சென்றுள்ளனர். இது அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
கனடாவுக்கான இந்திய குடியேற்றத்தில் சீக்கியர்களின் பங்கு அபரிதமாக உள்ளது. கனடாவுக்குச் செல்ல விண்ணப்பிப்பவர்களில் 60 முதல் 65 சதவீதம் பேர் இந்தியாவில் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள்.
பல ஆண்டுகளாக, பஞ்சாபி சீக்கிய சமூகம் கனடாவில் பணக்கார மற்றும் அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த குழுவாக மாறியுள்ளது. அந்தச் சமூகத்தின் சமூகத்தின் பல பிரிவுகளும் பல தசாப்தங்களாக காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தை ஆதரித்து நிதியளித்தன,
இது குறித்து இந்தியா தொடர்ந்து பல முறை எச்சரித்துள்ளது. இதற்கிடையில் 2018ஆம் ஆண்டு கனடா பிரதமர் தனது இந்தியப் பயணத்தின்போதும், 2010 மன்மோகன் சிங்கின் கனடா பயணமும் சில சர்ச்சைகள் வெடித்தன.
மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும்போதும் கனடா சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால் கனடா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை என இந்திய அரசு கருதியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.