மேற்கு வங்கத்தில் நேற்று (ஜூலை 8) பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்ற நிலையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. வாக்குச் சாவடிகள் சேதப்படுத்தப்பட்டன, வாக்குச் சீட்டுகள் தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் நாடு முழுவதும் 12 பேர் கொல்லப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சி மத்திய பாதுகாப்பு படைகள் மோதலை கட்டுப்படுத்த தவறியதாக குற்றஞ்சாட்டியது. அதேசமயம் பா.ஜ.க மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் எதிர்க்கட்சிகள் முதல்வர் மம்தா பானர்ஜி “ஜனநாயகத்தை நசுக்கியதாக” குற்றஞ்சாட்டினர்.
மேற்கு வங்கத்தில் ஜூன் 9-ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் தேதியை அம்மாநில அரசு அறிவித்ததில் இருந்து வன்முறை மோதல்கள் பதிவாகி வருகின்றன. இதன் விளைவாக, கொல்கத்தா உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 6) மாநிலம் முழுவதும் மத்தியப் படைகளை 10 நாட்களுக்கு அனுப்ப உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலை என்ன?
சனிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், நாடியா, முர்ஷிதாபாத் மற்றும் மால்டா மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 3 திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டனர். கூச் பெஹாரில் பாஜக வாக்குச் சாவடி முகவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிழக்கு பர்த்வான் மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த காயம் அடைந்த சி.பி.எம் தொண்டர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதற்கிடையில், முர்ஷிதாபாத்தில் உள்ள நௌடாவில் காங்கிரஸ் ஆதரவாளர் ஒருவர் வாக்களிக்கச் சென்றபோது கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமையன்று தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் 2 குழந்தைகள் காயம் அடைந்ததாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் சாலையோரத்தில் இருந்த கச்சா வெடிகுண்டை பந்து என்று தவறுதலாக கருதிய போது இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.எஸ்.எப்-ன் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரியின் கூற்றுப்படி, 59,000 மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPF) மற்றும் பிற மாநில ஆயுதப் போலீஸ் படைகள் முக்கியமான வாக்குச் சாவடிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் மற்ற CAPF & SAP துருப்புக்கள் உள்ளூர் மாநில காவல்துறையினருடன் வழங்கப்பட்டுள்ளன.
தேர்தல் எதற்கு?
பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது: கிராம பஞ்சாயத்து (கிராம நிலை), மண்டல் பரிஷத் அல்லது தொகுதி சமிதி அல்லது பஞ்சாயத்து சமிதி (தொகுதி நிலை), மற்றும் ஜிலா பரிஷத் (மாவட்ட அளவில்). மேற்கு வங்கத்தில் 3,317 கிராம பஞ்சாயத்துகளும், மொத்தம் 63,283 பஞ்சாயத்து இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. 58,594 கிராம பஞ்சாயத்து தேர்தல் மையங்கள் அமைக்கப்பட்டன.
வன்முறைக்கு காரணம் என்ன?
பஞ்சாயத்து தேர்தல் தேதியை மாநில அரசு அறிவித்ததில் இருந்தே பதற்றம் நிலவி வருகிறது. தேர்தலுக்கான 60,000 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய போதுமான நாட்கள் இல்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் இந்த அறிவிப்பை வெளிப்படையாக எதிர்த்தன. அடுத்த சில நாட்களில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
தங்களின் வேட்பாளர்களை வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் தடுப்பதாக பாஜக, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டின. மறுபுறம், திரிணாமுல் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்யுமாறு கட்சித் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டது. இருப்பினும், மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நாளன்றும் மோதல்கள் தொடர்ந்தன.
கடந்த பஞ்சாயத்து தேர்தலின் போது நிலைமை என்ன?
2018-ல், டி.எம்.சி 95% க்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துகளை வென்றது, அதில் 34% இடங்கள் போட்டியின்றி வெற்றி பெற்றது. இது வங்காள பஞ்சாயத்து தேர்தல் வரலாற்றில் ஒரு சாதனையாகும்.
இருப்பினும் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆளுங் திரிணாமுல் கட்சி மீது தெரிவித்தன. எதிர்க்கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படவில்லை. வாக்குப்பதிவு மோசடி, வன்முறை போன்றவற்றால் டிஎம்சி விமர்சனங்களை எதிர்கொண்டது. காவல்துறையின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த பஞ்சாயத்து தேர்தல் ஏன் முக்கியமானது?
2024 லோக்சபா தேர்தலுக்கு அனைத்து கட்சிகளுக்கும் இது ஒரு லிட்மஸ் சோதனை ஆகும். 2021 சட்டமன்றத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான பாஜகவின் உயர் டெசிபல் பிரச்சாரத்தை மீறி டிஎம்சி அமோக வெற்றி பெற்றது. அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எனினும், அதன் பின்னர் ஆளும் கட்சி மீது பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எஸ்.எஸ்.சி ஊழல் வழக்கு மற்றும் நிலக்கரி கடத்தல் மற்றும் மாடு கடத்தல் வழக்குகளில் டிஎம்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நகராட்சி ஆள்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக சிபிஐயும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. டிஎம்சி மூத்த தலைவரான அபிஷேக் பானர்ஜி, நிலக்கரி கொள்ளை வழக்கு மற்றும் எஸ்.எஸ்.சி ஊழல் தொடர்பாக சிபிஐ கண்காணிப்பில் உள்ளார். 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் மரணத்திற்குப் பிறகு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ராஜ்பன்ஷி சமூகம் ஏப்ரல் மாதம் ஒரு எதிர்ப்புப் பேரணியை நடத்தியது.
இந்நிலையில், பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள், வங்காளத்தில் அரசியல் காற்று எந்த திசையில் வீசுகிறது என்பதைச் சொல்ல முக்கியமான குறிகாட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.