மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) வெளியிட்ட அறிவிப்பில், “அரசாங்கம் வெங்காயத்தின் விலையை சீராக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.” என்று கூறியது.
புனே, டெல்லி, சண்டிகர் மற்றும் சில நகரங்களில் உள்ள சந்தைகளில் வெங்காயம் கிலோ ரூ.100க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை உயர்வுக்கு என்ன காரணம்? விலை விரைவில் குறையுமா? முழு விவரம் இங்கே.
வெங்காயம் விலை ஏன் உயர்கிறது?
நீண்ட காலத்துக்குப் பிறகு, ஆண்டு முழுவதும் வெங்காயத்தின் விலை சீராக இருந்தது. ஆனால் இப்போது உயர்ந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வெங்காயம் விளையும் மாவட்டமான மகாராஷ்டிராவின் நாசிக்கின் மொத்த விற்பனைச் சந்தையின் வர்த்தகர்கள் கூறுகையில், தற்போதைய நிலைமை முற்றிலும் தற்காலிகமானது என்றும் வெங்காய வரத்து குறைந்ததால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
"கடந்த ஆண்டு ரபி பருவத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் , மார்ச் 2024-ல் விவசாயிகளால் அறுவடை செய்யப்பட்டு பழைய இருப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, புதிய இருப்பு இன்னும் சந்தைக்கு வரவில்லை. இந்த சப்ளை-தேவை பிரச்சனையே விலை உயர்வுக்குக் காரணம்,” என்று நாசிக்கில் உள்ள திண்டோரி மொத்த விற்பனைச் சந்தையைச் சேர்ந்த ஒரு வியாபாரி கூறினார்.
நாட்டிலேயே மிகப்பெரிய வெங்காய சந்தையான லாசல்கான் மொத்த விற்பனை சந்தைக்கு, தினசரி 200-250 டன் வெங்காயம் மட்டுமே வரத்து வந்துள்ளது. கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 1,000 டன்னாக இருந்தது.
எப்போது வெங்காயம் விலை குறையும்?
வெங்காயம் ஒரு வருடத்தில் மூன்று முறை பயிரிடப்படுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தங்கள் காரிஃப் பருவத்தில் வெங்காயத்தை விதைத்து, அக்டோபர் முதல் அறுவடை செய்கிறார்கள்.
இருப்பினும், இந்த ஆண்டு அக்டோபர் நடுப்பகுதியில் மழை பெய்ததாலும், அக்டோபர் இறுதியில் தீபாவளியாலும் இந்த செயல்முறை தாமதமானது.
மற்றொரு பயிர், தாமதமான காரிஃப், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் விதைக்கப்பட்டு, டிசம்பருக்குப் பிறகு அறுவடை செய்யப்படுகிறது.
மிக முக்கியமான ரபி பயிர் டிசம்பர் முதல் ஜனவரி வரை பயிரிடப்பட்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு அறுவடை செய்யப்படுகிறது.
அடுத்த 10 நாட்களில், அறுவடை முடிந்து, வரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, விலை சீராகும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. நுகர்வோர் அதிக விலையை விரும்பாத நிலையில், மொத்த விலை உயர்வு ஆளும் மகாயுதி அரசுக்கு பிரச்சனையாக இருக்கலாம்.
லோக்சபா தேர்தலின் போது, திண்டோரி, நாசிக், பீட், ஔரங்காபாத், அகமதுநகர் மற்றும் துலே ஆகிய இடங்களில் உள்ள "வெங்காயப் உற்பத்தி" இடங்களில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளில் ஐந்தில் மஹாயுதி தோல்வியடைந்தது. இப்பகுதி நாட்டின் வெங்காய உற்பத்தியில் சுமார் 34% கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“