பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமாட்டோ பங்குகள் எப்போதும் இல்லாத வகையில் ரூ.50க்கும் கீழ் வந்துள்ளது. இந்நிறுவனத்தின் தொடக்க பங்கு விற்பனை ஓராண்டு காலக்கெடு திங்கள்கிழமையோடு முடிவுக்கு வந்தது.
தொடர்ந்து, நிறுவனத்தின் பங்குகள் ரூ.76இல் இருந்து 40 சதவீதம் வரை குறைந்து ரூ.46க்கு விற்பனையானது.
சொமாட்டோ நிறுவன பங்குகளின் இந்த திடீர் சரிவுக் காரணம் என்ன?
கடந்த வெள்ளிக்கிழமை சொமாட்டோ நிறுவன ஊழியர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் கைவசம் இருந்த தொடக்க கால பங்குகளின் ஒராண்டு காலக்கெடு முடிவடைந்தது.
இதனால் பங்குகளை நிறுவன விளம்பரதாரர்கள் மற்றும் ஊழியர்கள் விற்கவோ, வாங்கவோ முடியும் என்ற சுதந்திரமான நிலைக்கு வந்தனர். தொடர்ந்து சந்தையில் அதிகபடியான பங்குகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்தத் திடீர் விற்பனை காரணமாக பங்குகளின் விலை பாதியாக குறைந்தது. பொதுவாக நிறுவன ஊழியர்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கு தொடக்க நிலை பங்கு விற்பனையில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்தப் பங்குகளை விற்க சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படும். முதல் ஓராண்டுக்கு பங்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படாது.
சொமாட்டோ தொடக்க நிலை செயல்பாடு
சொமாட்டோ பங்குகள் ஆரம்ப காலகட்டத்தில் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. |ரூ.76க்கு விற்கப்பட்ட பங்குகள் ரூ.116 வரை விற்பனையாகின.
ஒரு கட்டத்தில் பங்குகள் ரூ.169.10 வரை உயர்ந்து காணப்பட்டன. இந்த நிலையில் தற்போது சரிவை கண்டுள்ளன சொமாட்டோ பங்குகள்.
இதேபோல் மற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களான பேடிஎம் பங்கின் வெளியீட்டு விலை ரூ.2150இல் இருந்து ரூ.740.35 ஆக சரிந்துள்ளது. இது 65 சதவீதத்துக்கும் அதிகமான சரிவாகும்.
மற்றொரு இ-காமர்ஸ் நிறுவனமான நைகா தொடக்க பங்கு வெளியீட்டில் பம்பர் அடித்தது. அதாவது பங்குகள் பட்டியலிடப்பட்டபோது ரூ.1125 வரை 78 சதவீதம் உயர்ந்தது. அதன் பின்னர் பங்கிள் விலை வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”