ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பருவநிலை மாறுபாடு தொடர்பான வரைவு தீர்மானத்திற்கு இந்தியாவும், ரஷ்யாவும் எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து, ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதால் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
பருவநிலை மாற்றத்தை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அறிவிக்கும் வரைவு தீர்மானத்தை நைஜர் மற்றும் அயர்லாந்து நாடுகள் இணைந்து பல மாதங்கள் பணியாற்றி கூட்டாக தாக்கல் செய்தனர்.
கடந்த மாதம் கிளாஸ்கோவில் நடந்த வருடாந்திர காலநிலை மாற்ற மாநாட்டில், நிலக்கரியை மொத்தமாக நிறுத்தும் வரைவு ஒப்பந்தததில், நிலக்கரி உற்பத்தி அளவை மட்டும் குறைக்கும் வகையில் இறுதி நேரத்தில் திருத்தத்தை இந்தியா கொண்டு வந்தது.
பருவநிலை பாதுகாப்பு அச்சுற்றுத்தல் வரைவு தீர்மானம்
பருவநிலை மாற்றம் தொடா்பான ஐ.நா. நெறிமுறை வகுப்புக் கூட்டமைப்புதான் (யுஎன்எஃப்சிசிசி- UN Framework Convention on Climate) தற்போது இந்த விவகாரத்தை கவனித்து வருகிறது. 190-க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள அந்த அமைப்பு, இந்த விவகாரம் குறித்து ஆண்டுதோறும் பலமுறை கூடி விவாதித்து முடிவுகளை எடுத்து வருகிறது. மறுபுறம், பாதுகாப்பு கவுன்சில் முதன்மையாக மோதல்களைத் தடுப்பதற்கும் உலகளாவிய அமைதியைப் பேணுவதற்கும் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, ஜேர்மனி தலைமையிலான ஒரு சில ஐரோப்பிய நாடுகள், காலநிலை மாற்ற விவாதங்களில் பாதுகாப்பு கவுன்சிலின் பங்கிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. காலநிலை மாற்றம் சர்வதேச பாதுகாப்பு அச்சுறுத்தலை கொண்டுள்ளது என்று வாதிடுகிறது. இது உணவு அல்லது தண்ணீர் பற்றாக்குறை, வாழ்வாதார இழப்பு, இடம்பெயர்வு ஆகியவற்றால் ஏற்கனவே உள்ள மோதல்களை அதிகப்படுத்தலாம் அல்லது புதியவற்றை உருவாக்கலாம் என தெரிவிக்கின்றன.
அயர்லாந்து,நைஜரால் முன்மொழியப்பட்ட வரைவுத் தீர்மானம் ஐநாவில் வருவது முதல் முறை அல்ல. கடந்தாண்டு, ஜெர்மனியால் இதே போன்ற வலுவான தீர்மானம் முன்மொழியப்பட்டது. ஆனால், அப்போது அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததால் யாரும் வாக்களிக்கவில்லை. ஏனென்றால், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் எளிதாக தீர்மானத்தை ரத்து செய்துவிடலாம்
பாதுகாப்பு கவுன்சிலில் ஜேர்மனியின் இரண்டு வருட பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது, ஆனால் இந்த திட்டத்திற்கு பல நாடுகள் ஆதரவு அளித்தது. அதன் காரணமாக, இந்த வரைவு திட்டத்தை புதுப்பித்து அயர்லாந்து, நைகர் இம்முறை தாக்கல் செய்தனர்.
வரைவு தீர்மானத்தில் இடம்பெற்ற தகவலை ஆராய்ந்தால், அதில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பருவநிலை பாதுகாப்புக்காக சிறப்பு தூதுவரை நியமிக்குமாறு பொதுச்செயலாளரிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், ஐ.நா. களப்பணிகள் தங்கள் செயல்பாட்டுப் பகுதிகளில் காலநிலை மாற்ற மதிப்பீடுகளைத் தொடர்ந்து அறிக்கையிடவும், வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்வதில் காலநிலை நிபுணர்களின் உதவியைப் பெறவும் கேட்டுக் கொள்வது போன்றவை இடம்பெற்றிருந்தது.
UNSC மற்றும் காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றத்தைப் பற்றி விவாதிப்பதற்கான இடம் UNSC இல்லையென்றாலும், பாதுகாப்பு கவுன்சிலும் அதன் செயலகமும் கடந்த காலங்களில் இந்த விஷயத்தில் சில விவாதங்களையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. பல ஐரோப்பிய நாடுகள், ஆரம்பத்தில் ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்தின் தலைமையில், பாதுகாப்பு கவுன்சிலின் பணிகளில் காலநிலை மாற்றத்தின் பாதுகாப்பு தாக்கங்களை ஒருங்கிணைக்க முயற்சிகளை மேற்கொண்டன. 2017 ஆம் ஆண்டிலிருந்து இத்தைய விவாதங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது.
எதிர்ப்பு
பாதுகாப்பு கவுன்சிலில் பருவநிலை மாற்றத்தை கொண்டு வரும் நடவடிக்கைக்கு வீட்டோ அதிகாரம் கொண்ட இரண்டு நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யாவும் சீனாவும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பைடன் தலைமையிலான புதிய அமெரிக்க அரசு, இம்முறை ஆதரவு பக்கம் திரும்பியது. ஜனவரியில் இரண்டு வருட பதவிக் காலத்தை தொடங்கிய இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் இணைந்துள்ளது. அடுத்தாண்டு பாதுகாப்பு கவுன்சிலில் இணையவுள்ள பிரேசில் நாடும் இந்த நடவடிக்கைக்கு எதிராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வரைவு தீர்மானத்தை எதிர்க்கும் நாடுகளின் கூற்றுப்படி, UNFCCC அனைத்து காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பொருத்தமான மன்றமாக இருக்கும். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலுக்கு அவ்வாறு செய்ய நிபுணத்துவம் இல்லை . 190-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஒருமித்த முடிவுகளில் எடுக்கப்படும் UNFCCC போலல்லாமல், UNSC ஆனது ஒரு சில வளர்ந்த நாடுகளால் காலநிலை மாற்ற முடிவுகளை எடுக்கும் என்பதை சுட்டிக்காட்டப்பட்டது.
இதுகுறித்து பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி, " பருவநிலை மாற்ற விவகாரத்தில் குறைந்த உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைவிட அதிக நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட யுஎன்எஃப்சிசிசி-தான் முடிவுகள் எடுக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாடுகள் மட்டும் தீர்மானிக்க முடியாது
காலநிலை மாற்றத்தை பாதுகாப்பு கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டு வருவதற்கான நோக்கத்தைத் தவிர, இந்த தீர்மானத்திற்கு உண்மையான தேவை எதுவும் இல்லை.இந்த அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முடிவு எடுக்கும் அதிகாரம் சில நாடுகளின் கைகளுக்கு செல்லும்.
பருவநிலை விவகாரத்தை அனைத்துத் தரப்பு நாடுகளையும் உள்ளடக்கிய யுஎன்எஃப்சிசி தற்போது திறம்பட கவனித்து வருகிறது. அதனைவிட சிறப்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் எதுவும் செய்துவிட முடியாது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியை பாதுகாப்பு என்ற பெயரில் திசைதிருப்பவே இந்தத் தீர்மானம் பயன்படும்.
பாதுகாப்பு கவுன்சில் உண்மையில் இந்தப் பிரச்சினையில் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், ஒரு சில மாநிலங்கள் காலநிலை தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் முடிவெடுப்பதில் சுதந்திரமாக இருக்கும். இது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல" என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.