சோஃபி ஹசன், கட்டுரையாளர்
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் கடந்த வாரம், ‘மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றம் செய்யும் சட்டம் 1994 -ஐ மேம்படுத்தி அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கும் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கும் சண்டிகரின் யூனியன் பிரதேசத்திற்கும் உத்தரவிட்டுள்ளது. சட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது.
சண்டிகரின் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர். ஐச் சேர்ந்த ஒன்பது மருத்துவர்கள் குழு உறுப்பு தானம் அளிப்பவர்களின் தேசிய பதிவேட்டிற்கு அழுத்தம் கொடுக்க முன்வந்துள்ளது. மேலும், உறுப்பு கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களின் பயோமெட்ரிக் அடிப்படையிலான அங்கீகாரத்தை பரிந்துரை செய்துள்ளது.
மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்றுச் சட்டம் 1994 என்றால் என்ன? இதற்கு நிபுணர் குழு எவ்வாறு உருவாக்கப்பட்டது?
1994 ஆம் ஆண்டு சட்டம் இந்தியாவில் மனித உறுப்புகள் மற்றும் திசுக்களை மாற்றம் செய்வது மற்றும் மரணத்திற்குப் பிறகு உறுப்புகளை தானம் செய்வது உட்பட அறுவை சிகிச்சை மூலம் மாற்றம் செய்வதை நிர்வகிக்கிறது. இந்த சட்டத்தை திறம்பட செயல்படுத்தக் கோரி 2016 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மே 2019 இல், பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் இந்த விஷயத்தில் விவாதிப்பதற்காக மருத்துவர்கள் குழுவை அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், இறந்தபின் உடல் தானத்தை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த குழு இரண்டு அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது - ஒன்று மே மாதத்திலும் கடைசி அறிக்கை அக்டோபர் 30 ஆம் தேதியும் சமர்ப்பித்தது.
இந்த குழு டிஜிட்டல் தரவுத்தளம் மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு குறித்து என்ன கூறியது?
இந்த குழு ‘தன்னார்வ உறுப்பு கொடையாளர்களின் தேசிய பதிவேட்டை’ உருவாக்க பரிந்துரைத்தது. மேலும், இது தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (நோட்டோ) வழங்கிய தனித்துவமான தேசிய அடையாள எண்ணின் அடிப்படையில் இருக்கலாம் என்று கூறியது. மேலும், அது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிபெற்ற அனைத்து அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் தரவுத்தளமும் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.
நடைமுறை செயல்பாட்டில் அடையாளம் அல்லது பிற மோசடிகள் உருவாவதைத் தடுக்க உறுப்பு கொடையாளர் மற்றும் பெறுநரின் அடையாளத்தை ஒரு பயோமெட்ரிக் அங்கீகார முறை மூலம் சரிபார்க்க பரிந்துரைக்கப்பட்டது.
ஒப்புதல் செயல்முறை தொடர்பாக குழுவின் பரிந்துரைகள் யாவை?
ஒரு கொடையாளர் அட்டையை உடல் கொடையாளருக்கான ஒரு உயிர்ப்பான உத்தரவாதமாக கருத வேண்டும். உறுப்பு கொடை அறுவை சிகிச்சையில் ஏற்படும் அபாயங்களை அவர்களுக்கு விளக்கிய பின்னர், உறுப்பு கொடையாளர்களின் விஷயத்தில் கட்டாயமாக தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெற வேண்டும்.
அறுவைசிகிச்சைக்கு முன்னர் எந்த நேரத்திலும் ஒப்புதலை வாபஸ் பெற உறுப்பு கொடையாளருக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அது பரிந்துரைத்துள்ளது. நேரடி உறுப்பு கொடையாளரின் பகுதியை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்க இது ஒரு ‘காத்திருப்பு காலம்’ அல்லது குளிரூட்டும் காலத்தை பரிந்துரைத்துள்ளது. மேலும், அங்கீகாரக் குழுவில் சமர்ப்பிக்கும் முன் கொடையாளரை தனிப்பட்ட முறையில் கட்டாய ரகசிய உளவியல் பகுப்பாய்வு செய்வதற்கான நடைமுறையையும் கோரியுள்ளது.
உறுப்புக் கொடையாளருக்கு ஏதேனும் திருப்பிச் செலுத்துமாறு குழு பரிந்துரைத்துள்ளதா?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான செலவினங்களுக்கு கொடையாளருக்கு ஒரு பெரிய அளவில் பணத்தை அளிக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது. மேலும் மருத்துவமனையில் இருந்து செல்லும் நேரத்தில் குறைந்தது ரூ.50,000 செலுத்த பரிந்துரைத்தது. உறுப்பு கொடையாளருக்கு மருத்துவக் காப்பீட்டை வழங்குவதற்கான ஒரு அமைப்பையும், அவர்களின் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய தேவைகளையும் இது கோரியுள்ளது.
இந்த குழு அரசு நிறுவனங்கள் மற்றும் விழிப்புணர்வு செயல்முறை குறித்து என்ன கூறியுள்ளது?
உறுப்பு தானம் மற்றும் ஒப்புதல் செயல்பாட்டில் மத நம்பிக்கைகள், சமூகத் தடைகள், உறவினர்களின் சில அச்சங்கள் ஆகியவை அடங்கியுள்ளதாக கூறியுள்ளது. இதற்கு நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்த சான்றளிக்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகளின் ஈடுபாடு இருக்க வேண்டும் என்று குழு கூறியுள்ளது.
இறந்தவர்களின் உறுப்பு தானத்தை மேம்படுத்துவதற்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் மாற்று மையங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மேலும், இதற்கான நடைமுறை பதிவு விதிமுறைகளை மீறி தனியார் மையங்களில் வருகை தரும் அறுவை சிகிச்சை நிபுணர்களை பணியமர்த்தும் போக்கைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த குழு கூறியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.