Mihir Vasavda
இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) 2022 காமன்வெல்த் போட்டிகளைத் தவிர்க்க விரும்புகிறது. வியாழக்கிழமை, காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் (சிஜிஎஃப்) உயர்மட்ட அதிகாரிகள், விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்க அதிகாரிகளை சந்தித்து, போட்டியை புறக்கணிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், நாள் முழுவதும் நடந்த ஆலோசனைக்குப் பிறகும் கூட, ஐஓஏ அதிகாரிகளை சமரசப்படுத்த தவறிவிட்டனர்.
பர்மிங்காமில் 2022ம் ஆண்டு நடைபெறவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுகளில் இருந்து துப்பாக்கிச் சுடும் போட்டி விலக்கிக் கொள்ளப்பட்டது . அதற்கு பதிலாக, பெண்கள் கிரிக்கெட், பாரா டேபிள் டென்னிஸ் மற்றும் பீச் கைப்பந்து ஆகியவை சேர்க்கப்பட்டது.
பர்மிங்காம் மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் உள்ள பரந்த வசதிகள் காரணமாக மற்ற விளையாட்டுகள் சேர்க்க போட்டி அமைப்பாளர்கள் ஆர்வமாக இருந்ததால், துப்பாக்கிச் சுடுதல் கைவிடுவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதேசமயம், பிரிட்டனின் கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள், விளையாட்டு வீரர்கள் ஆயுதங்களுடன் நாட்டிற்குள் நுழைவது போன்றவையும் இம்முடிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.
சி.ஜி.எஃப் இன் விருப்ப விளையாட்டு பட்டியலில் துப்பாக்கிச் சுடுதலும் இருந்தது என்பது உண்மை. ‘விருப்பத்தேர்வு’ பிரிவில் பல விளையாட்டுக்கள் உள்ளன. அவற்றில் வலுவான விளையாட்டுகளைத் தேர்ந்தெடுப்பது என்பது போட்டியை நடத்தும் நாட்டின் நிலையான நடைமுறையாகும். எடுத்துக்காட்டாக, 2010 ஆம் ஆண்டில், இந்தியா கூடைப்பந்து மற்றும் டிரையத்லானை (triathlon) திட்டத்திலிருந்து விலக்கி, டென்னிஸ், வில்வித்தை மற்றும் மல்யுத்தத்தைச் சேர்த்தது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா மல்யுத்தத்தை கைவிட்டது.
ஆனால் இந்த தர்க்கத்தை இந்தியா ஏற்கவில்லை. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பதக்கங்களில் நான்கில் ஒரு பங்கு துப்பாக்கிச் சுடுதலில் இருந்தே கிடைக்கிறது. துப்பாக்கிச் சுடும் போட்டியை நீக்குவது என்பது, ஒட்டுமொத்த பதக்கத்தின் எண்ணிக்கையில் இந்தியாவை பெரும் வீழ்ச்சியடையைச் செய்யும் என்று வாதிடப்பட்டது. எனவே, ஏப்ரல் 2018 இல், தேசிய துப்பாக்கி சங்கத்தின் தலைவர் ரனீந்தர் சிங், துப்பாக்கிச் சூடுதல் நீக்கப்படுவதாக பேசப்பட்டபோது, இந்தியா காமன்வெல்த் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்தை முதலில் முன்வைத்தார்.
ரணீந்தரின் கருத்துக்கள் கடந்த மாதம் ஐஓஏ பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தாவும் எதிரொலித்தார். அப்போதிலிருந்து, புறக்கணிப்பு தொடர்பான கருத்து வேகம் எடுத்தது. ஐ.ஓ.ஏ தலைவர் நரிந்தர் பாத்ரா, 2022 காமன் வெல்த் விளையாட்டில் இருந்து மட்டுமல்லாமல், சி.டபிள்யு.ஜி-யிலிருந்து விலக இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகினால், உண்மையில் விளையாட்டு வீரர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஒரு பெரிய சர்வதேச நிகழ்வில் போட்டியிடுவதில் இருந்து அவர்களை தடுப்பது மட்டுமல்லாமல், மற்ற சலுகைகளையும் அவர்கள் இழப்பார்கள். சி.டபிள்யூ.ஜி.யில் பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் அதிக பரிசுத் தொகையைப் பெறுகின்றனர், தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ .30 லட்சம், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ .20 லட்சம், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ .10 லட்சம் கிடைக்கும். இது தவிர, ரயில்வே, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாநில காவல் துறைகள் போன்றவை பதக்கம் வென்றவர்களுக்கு பண ஊக்கத்தொகை / அல்லது பதவி உயர்வுகளை வழங்குகின்றன. அதேபோல், மாநில அரசுகள் தனி பரிசுத் தொகையை வழங்குகின்றன.
பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் விளையாட்டுகளை புறக்கணிக்கும் யோசனையை நிராகரித்துள்ளனர். ஆனால் அவர்களின் விதி ஒலிம்பிக் முதலாளிகளின் கைகளில் உள்ளது. அவர்கள் அடுத்த மாதம் இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளது.