இலங்கைக்கு செல்லும் சீன ‘உளவுக் கப்பலின்’ நடமாட்டத்தை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது .மேலும், ஆகஸ்ட் 11 ஆம் தேதி அந்த கப்பல் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்படும். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில், இலங்கை துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பல் வந்துள்ளது. இந்தியா ஏற்கனவே இந்த கப்பலின் வருகைக்கு எதிராக வாய்மொழியாக எதிர்ப்பு தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.
இலங்கை நோக்கிச் செல்லும் சீனக் கப்பல் எது?
சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’, பெய்ஜிங் கடன் அளித்ததைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உத்தி முக்கியத்துவம் வாய்ந்த ஆழ்கடல் துறைமுகமான அம்பந்தோட்டாவை நோக்கிச் செல்கிறது.
‘யுவான் வாங்’ வகை கப்பல்கள் செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல்களைக் கண்காணிக்கப் பயன்படுகிறது. பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் முழுவதும் இயங்கும் திறன் கொண்ட இந்த கண்காணிப்பு கப்பல் சுமார் 7 கப்பல்கள் சீனாவிடம் உள்ளது. பெய்ஜிங்கின் நிலம் சார்ந்த கண்காணிப்பு நிலையங்களுக்கு இந்த கப்பல்கள் துணைபுரிகின்றன.
அமெரிக்கத் பாதுகாப்புத் துறை அறிக்கையின்படி, இந்த விண்வெளி ஆதரவுக் கப்பல்கள் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் (பி.எல்.ஏ) உத்தி ஆதரவுப் படை (எஸ்.எஸ்.எஃப்) மூலம் இயக்கப்படுகிறது. இது “பி.எல்.ஏ.-வின் உத்தி இடம், சைபர், மின்னணு, தகவல், தகவல் தொடர்பு, உளவியல் போர் பணிகள் மற்றும் திறன்கள்” ஆகியவற்றை மையப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட அரங்க கட்டளை நிலை அமைப்பாகும்.
‘யுவான் வாங் 5’ சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. இது செப்டம்பர் 2007 இல் கடற்படை சேவையில் சேர்ந்தது. 222-மீட்டர் நீளமும் 25.2-மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் கடல்கடந்த வான்வெளி கண்காணிப்புக்கான அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பம் உள்ளது.
சீனாவின் ‘லாங் மார்ச் 5 பி’ ராக்கெட்டை ஏவுவதுதான் அதன் கடைசி கண்காணிப்பு பணி. இது சமீபத்தில் சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையத்தின் முதல் ஆய்வகத் தொகுதி ஏவுதலின் கடல் கண்காணிப்பிலும் ஈடுபட்டது.
இந்த கப்பல் எதற்காக இலங்கைக்கு செல்கிறது?
பெல்ட் & ரோடு இனிஷியேட்டிவ் இலங்கை (BRISL) செய்திப்படி, ‘யுவான் வாங் 5’ ஆகஸ்ட் 11 ஆம் தேதி அம்பந்தோட்டா துறைமுகத்திற்குள் ஒரு வாரத்திற்கு நுழையும். சரக்குகள் நிரப்பப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி புறப்படும்.
“யுவான் வாங் 5 கப்பல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் சீனாவின் செயற்கைக்கோள்களின் செயற்கைக்கோள் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி கண்காணிப்பை நடத்தும்” என்று பி.ஆர்.ஐ.எஸ்.எல் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
பி.ஆர்.ஐ.எஸ்.எல் மேலும் கூறியிருப்பதாவது: “யுவான் வாங் 5’ கப்பல் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு வருகை தருவது இலங்கை மற்றும் பிராந்திய வளரும் நாடுகளுக்கு அவர்களின் சொந்த விண்வெளி திட்டங்களை கற்றுக்கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும்.” என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தால் இந்தியா ஏன் கவலைப்படுகிறது?
‘யுவான் வாங் 5’ ஒரு சக்திவாய்ந்த கண்காணிப்பு கப்பல். அதன் குறிப்பிடத்தக்க வான்வழி அடையும் - சுமார் 750 கிமீ - அதாவது கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பல துறைமுகங்கள் சீனாவின் ரேடாரில் இருக்கக்கூடும். தென்னிந்தியாவில் உள்ள பல முக்கிய நிலைகளை உளவு பார்க்கப்படும் அபாயத்தில் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
கடந்த வாரம் இந்த நிகழ்வுகள் குறித்து பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது: “இந்தக் கப்பல் ஆகஸ்ட் மாதம் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வருகை தர பரிந்துரைக்கப்பட்ட செய்திகளை நாங்கள் அறிவோம்… இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் கவனமாக கண்காணிக்கிறது. அவற்றைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது.” என்று கூறினார்.
பதிலுக்கு, ராய்ட்டர்ஸ் வெளியிட்ட சீனாவின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சீனாவின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியாகப் பார்த்து அறிக்கை வெளியிட்டுவார்கள். சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல் நடவடிக்கைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் என்று சீனா நம்புகிறது.” என்று கூறியது.
அம்பன்தோட்டா துறைமுகம் உத்தி ரீதியாக முக்கியமானது ஏன்?
இலங்கையின் இரண்டாவது பெரிய துறைமுகமான அம்பன்தோட்டா துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவை ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவுடன் இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது. சீனாவைப் பொறுத்தவரை, அதன் பெல்ட் அண்ட் ரோடு முயற்சியில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாகும். அதன் வளர்ச்சிக்கு பெரும்பாலும் சீனா நிதியுதவி அளித்தது. மேலும், 2017 இல், பெருகிவரும் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், கொழும்பு தனது பெரும்பான்மையான பங்குகளை சீன நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
இந்தத் துறைமுகத்தின் மீதான சீனக் கட்டுப்பாடு, சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் கடற்படை மையமாக மாறுவதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் தங்கள் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று இந்தியாவும் அமெரிக்காவும் பலமுறை கவலை தெரிவித்துள்ளன. இந்தியாவிலுள்ள பாதுகாப்பு வல்லுநர்கள் அதன் பொருளாதார நம்பகத்தன்மையை அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளனர். அதே சமயம், நிலம் மற்றும் கடல்வழி தடம் அதிகரிப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் சீனாவின் ‘முத்து சரம்’ உத்திக்கு இது சரியாகப் பொருந்துகிறது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
அம்பன்தோட்டா துறைமுகம் இந்தியாவிற்கு அருகாமையில் இருப்பது, சீன கடற்படை நீண்ட காலமாக இந்தியாவை இலக்காகக் கொண்ட கடல்சார் நெகிழ்வை அனுமதிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.