/indian-express-tamil/media/media_files/2025/10/15/madras-hc-upheld-thiruparankundram-2025-10-15-18-15-14.jpg)
திருப்பரங்குன்றம் மலையில் விலங்கு பலியிட ஐகோர்ட் தடை விதித்தது ஏன்?
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆண்டு விழாவின்போது விலங்கு பலியிடும் சடங்குக்குச் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உள்ளது. 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு 2025 ஜூன் மாதம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், நியமிக்கப்பட்ட 3-வது நீதிபதியான நீதியரசர் ஆர்.விஜயகுமார் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். தொன்மையான நினைவுச் சின்னங்கள் சட்டம் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958) மூலம் பாதுகாக்கப்பட்ட மலையின் மீதுள்ள கோயில் மற்றும் தர்காவிற்கு இடையே ஆன சட்டப் போராட்டத்தை இந்தத் தீர்ப்பு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
வழக்கின் பின்னணி:
தர்கா அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலையில், கோயில்கள் மற்றும் சமணர் குகைகள் உள்ளன. மலையின் உச்சிக்கு செல்லும் படிகள், அங்கு உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் செல்லும் பாதையின் ஒரு பகுதியாகும் என்று வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. பல தசாப்தங்களாக, இரு மத சமூகங்களும் இந்தப் பகுதியைப் பயன்படுத்தி வந்தன. சமீபத்திய சர்ச்சை, தர்கா அறங்காவலர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தால் தொடங்கியது. "சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்க" ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிடும் “சமபந்தி விருந்து 2025” நிகழ்ச்சிக்கு பிரசுரம் அழைப்பு விடுத்திருந்தது. அந்த விளம்பரத்தில், மலையை ‘சிக்கந்தர் மலை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. புனிதமான இடத்தில் விலங்கு பலியிடுவது மலையின் புனிதத்தன்மையை கெடுக்கும் என்று இந்து சமய அறநிலையத் துறை (HR&CE) மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில், விலங்கு பலியிடுவது சில மதச் சூழல்களில் இருந்தாலும், அது தர்காவில் கடைப்பிடிக்கப்படும் அத்தியாவசியமான சடங்கு அல்ல என்று நிறுவப்படவில்லை எனக் கூறியதால், இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்தை எட்டியது.
சட்டப் போராட்டத்தின் வரலாறு
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான சச்சரவு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்கிறது. தர்கா மண்டபம் கட்ட முயன்றபோது, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் நிர்வாகம், முழு மலைக்கும் உரிமை கோரி வழக்குத் தொடர்ந்தது. 1931 பிரிவி கவுன்சில் trial court-டின் முடிவை பிரிவி கவுன்சில் உறுதி செய்தது. இதன்படி, நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள 33 சென்ட் நிலத்தைத் தவிர, கிட்டத்தட்ட முழு மலைக்கும் கோவில் நிர்வாகமே ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
இதற்கு பிந்தைய வழக்குகளில், 1958-ல் தர்காவின் குறிப்பிட்ட பகுதிக்கு வெளியே குவாரிங் (Quarrying) தடை செய்யப்பட்டது; 2011-ல் கோவிலின் அனுமதியின்றி புதிய கட்டுமானம் அல்லது விளக்குகள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றங்கள் தொடர்ந்து, 33 சென்ட் நிலத்தில் மட்டுமே தர்காவுக்கு உரிமையை அங்கீகரித்தன. விலங்கு பலியைத் தடை செய்யக் கோரியும், மலையை “சிக்கந்தர் மலை” என அழைப்பதற்கு தடை விதிக்கக் கோரியும் புதிய வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
நீதியரசர் நிஷா பானுவின் கருத்து: விலங்கு பலியிடுவது இப்பகுதியில் பல மத நிறுவனங்களில் நடைமுறையில் இருப்பதால், தேர்ந்தெடுத்து தடை செய்ய முடியாது என்று கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தார். அரசியலமைப்புச் சட்டத்தின் 25-வது பிரிவை மேற்கோள் காட்டி, மதச் சடங்குகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறினார். மலையை ‘சிக்கந்தர் மலை’ என்று அழைக்க சட்டரீதியான தடை எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீதியரசர் ஸ்ரீமதியின் கருத்து: அவர் இதற்கு நேர்மாறான முடிவை எடுத்தார். தர்காவில் விலங்கு பலியிடுவது வரலாற்று அல்லது சட்டப் பதிவு மூலம் ஆதரிக்கப்படவில்லை என்றும், துண்டுப்பிரசுரம் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் தீங்கிழைக்கும் நடவடிக்கை என்றும் கூறினார். மலையின் பெயரை மாற்ற முடியாது என்றும் அவர் தீர்ப்பளித்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், நீதியரசர் விஜயகுமார் வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இறுதித் தீர்ப்பு: நீதியரசர் விஜயகுமார், விலங்கு பலி மற்றும் பெயரிடுதல் தொடர்பான நீதியரசர் எஸ். ஸ்ரீமதியின் கருத்தையும், நெல்லித்தோப்பு பகுதியில் பிரார்த்தனை செய்வதற்கான உரிமையைப் பற்றிய நீதியரசர் ஜெ. நிஷா பானுவின் கருத்தையும் ஏற்றுக்கொண்டார். இது கோயிலின் புனிதத்தன்மையை கெடுக்கும் என்றும், தர்காவில் இந்தச் சடங்கு "தொன்றுதொட்டு" இருந்து வருகிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரம் (Positive evidence) இல்லை என்றும் நீதிபதி கூறினார். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 164-ன் கீழ் பெறப்பட்ட சாட்சியம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நிராகரிக்கப்பட்டது.
மேலும், முழு மலையும் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதால், ASI விதிகளின்படி விலங்குகளைக் கொண்டு வருவதற்கோ அல்லது உணவு சமைப்பதற்கோ தடை உள்ளது. எனவே, விலங்கு பலியிடும் நடைமுறைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.
முந்தைய சிவில் தீர்ப்பு மற்றும் ஏ.எஸ்.ஐ. பதிவுகளுடன் ஒத்துப்போகும் வகையில், இந்த இடம் திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்கப்பட வேண்டும் என்றும், “சிக்கந்தர் மலை என்றோ அல்லது சமணர் குன்று என்றோ அழைக்கப்படக் கூடாது” என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள 33 சென்ட் நிலம் தர்காவுக்குச் சொந்தமானது என்பதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்களில் மட்டுமே இஸ்லாமியர்கள் அங்குத் தங்கள் பிரார்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தீர்ப்பளித்தார். அப்போது அசைவ உணவைக் கொண்டு வருவதற்கோ அல்லது பரிமாறுவதற்கோ, கோவில் பக்தர்களின் வழித்தடத்திற்கு இடையூறு செய்வதற்கோ தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றம், முழு மலையையும் ஆய்வு செய்து ஓர் அறிக்கையைச் சமர்ப்பிக்க, தொல்லியல் துறைக்கு (Archaeological Department) உத்தரவிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.