கடந்த வாரம், திரிபுராவில் 56 பழங்குடியின அமைப்புகளின் கூட்டமைப்பு, மாநிலத்தின் பெரும்பாலான பழங்குடியினருக்கான மொழியான கோக்போரோக்கின் எழுத்தாக இந்தி அறிமுகப்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வடகிழக்கு மாநிலங்களில் ஒன்பது பழங்குடி சமூகங்கள் தங்கள் பேச்சுவழக்குகளை தேவநாகரிக்கு மாற்றியதாகவும், 8 மாநிலங்கள் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறினார். இவரது கருத்துக்கு ரோமன் ஸ்கிரிப்ட் ஃபார் கோக்போரோக் சோபா (RSKC) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமித் ஷாவின் பேச்சு, பிராந்தியத்தின் பல மாநிலங்களிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்தன. ஒவ்வொரு வடகிழக்கு மாநிலமும் இந்தோ-ஆரியம் முதல் திபெட்டோ-பர்மன் வரை, ஆஸ்ட்ரோ முதல் ஆசியாடிக் வரை என பல்வேறு மொழிகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.
திரிபுரா
கோக்போரோக் 1979 இல் திரிபுராவின் அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போது, 22 பட்டப்படிப்பு கல்லூரிகளிலும், திரிபுரா மத்திய பல்கலைக்கழகத்திலும் பெங்காலி மற்றும் ரோமன் எழுத்துக்களைப் பயன்படுத்தி கற்பிக்கப்படுகிறது.
எழுத்துகள் பற்றிய விவாதம் பல தசாப்தங்கள் பழமையானது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஷ்யாமா சரண் திரிபுரா, மொழியியலாளர் பபித்ரா சர்க்கார் ஆகியோரின் கீழ் இரண்டு கமிஷன்கள் அமைக்கப்பட்டன.
முந்தைய இடது முன்னணி அரசாங்கம் பெங்காலி எழுத்துக்களை விரும்பியபோது, இரண்டு கமிஷன்களும் பெரும்பான்மையான பழங்குடியின மக்கள் ரோமானிய எழுத்துக்களை விரும்புவதைக் கண்டறிந்ததாக RSKC கூறுகிறது.
RSKC தலைவர் பிகாஷ் ராய் டெபர்மா கூறுகையில், கோக்போரோக்கிற்கு ரோமன் எழுத்துகளை அறிமுகப்படுத்துவது எளிதாக இருக்கும் என்று கருதுகிறோம். அரசாங்கம் அவர்களது சொந்த நலனுக்காக எந்த எழுத்துகளையும் அறிமுகப்படுத்தக்கூடாது. இந்த விவகாரத்தை அச்சமூகத்தின் மக்களிடம் விட்டுவிடுங்கள் என்றார்.
RSKC கூற்றுப்படி, எங்கள் அமைப்பு இந்தி அல்லது தேவநாகரிக்கு எதிரானது அல்ல. ஆனால், வலுக்கட்டாயமாக திணிக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பதாக கூறியது.
பழங்குடி இலக்கியவாதியும் கலாச்சாரப் பணியாளருமான சந்திரகாந்தா முரசிங்க் கூறுகையில், பழங்குடி ஆர்வலர்கள் இந்திக்கு எதிரானவர்கள் அல்ல. அதேநேரம், இந்தி திணிக்கப்பட்டால் மொழிச் சமநிலை பாதிக்கப்படலாம். பெங்காலி, கோக்போரோக் பேசும் மக்களின் சகோதரத்துவமும் சமநிலையும் வருத்தமடையக்கூடும். இந்தி காரணமாக பெங்காலி, கோக்போரோக் கற்றுக்கொள்ள முடியாவிட்டால், அது சமநிலையை சீர்குலைக்கும் என்றார்.
மிசோரம்
மிசோ மொழி அல்லது மிசோ தாங் ஆகியவை சீன-திபெத்திய குடும்பத்தைச் சேர்ந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கிறிஸ்தவ மிஷனரிகளான ரெவரெண்ட்ஸ் ஜே எச் லோரெய்ன், எஃப் டபிள்யூ சாவிட்ஜ் ஆகியவை லுஷாய் மலைகளுக்கு (இப்போது மிசோரம்) விஜயம் செய்து 1894 ஆம் ஆண்டில் ரோமானிய எழுத்துக்களின் அடிப்படையில் மிசோ எழுத்துக்களை அறிமுகப்படுத்தினர். மிசோ எழுத்துகள் 'A Aw B' என்று அழைக்கப்படுகிறது.
மாணவ அமைப்பான மிசோசிர்லாய் பாவ்லின் (MZP) செய்தித் தொடர்பாளர் ரிக்கி லால்பியாக்மாவியா கூறுகையில், இதனை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகிறோம். அதன் மீது இந்தி எழுத்தை திணிப்பதை ஏற்க மாட்டோம் எனக் கூறினார்.
மணிப்பூர்
மணிப்பூரின் மெய்டேய் மாயெக் அல்லது மணிப்பூரி எழுத்து 2,000 ஆண்டுகள் பழமையானது.இந்த எழுத்து மணிப்பூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரி அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.
ஏப்ரல் 25 அன்று, மணிப்பூரின் ஆறு மாணவர் அமைப்புகள் ஷாவின் முன்மொழிவுக்கு எதிராக பொது மாநாட்டை ஏற்பாடு செய்தன. அங்கு, பத்தாம் வகுப்பு வரை இந்தியைக் கட்டாயப் பாடமாக ஏற்றுக்கொள்வதற்கு எதிரான தீர்மானம் உட்பட பல தீர்மானங்கள் ஏற்கப்பட்டன.
மணிப்பூரின் ஜனநாயக மாணவர் கூட்டணியின் தலைவர் லீஷாங்ட்ஷெம் லம்பியான்பா கூறுகையில், எங்கள் மொழியும் இந்தி போன்று 8வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.ஹிந்திக்கும் மணிப்பூரிக்கும் ஒரே அந்தஸ்து தான். எனவே, ஹிந்தியைத் திணிக்கும் செயல், பிற மொழிகளையும் எழுத்துகளையும் நிராகரிப்பதற்கு சமமாகும்.
இந்தியை திணிப்பது மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். உள்ளூர் மொழியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். தேசியக் கல்விக் கொள்கை கூட தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்கிறது. இந்தி எங்கள் தாய் மொழி அல்ல என்றார்.
அருணாச்சல பிரதேசம்
இன ரீதியாக வேறுபட்ட அருணாச்சல பிரதேசத்தில் பல மொழிகள் பேசப்படுகின்றன. யுனெஸ்கோவின் சமீபத்திய ஆய்வில், 33 மொழிகள் அழிந்துவரும் நிலையிலும், நான்கு மொழிகள் ஆபத்தான நிலையில் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. ஆதி, நிஷி, காலோ மற்றும் மிஷ்மி போன்ற மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழிகளுக்கு தனியாக எழுத்துகள் கூட இல்லையாம்
ஒரு குழுவிற்கும் மற்றொரு குழுவிற்கும் இடையே பொதுவான பூர்வீக மொழி இல்லாததால், இந்தி ஒரு பாலம் மொழியாக செயல்படுகிறது என அனைத்து அருணாச்சல பிரதேச மாணவர் சங்கத்தின் (AAPSU) தலைவர் டோபோம் டாய் கூறினார். ஆனால், இந்தி மொழி திணிக்கப்பட்டால் எங்கள் மொழி சிதைந்துவிடும் என்றார்.
அசாம்
அசாமிஸ், போடோ ஆகிய 2 மொழிகளும் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அசாமிஸ் மொழிக்கு தனியாக பழங்கால எழுத்தைப் பயன்படுத்தினாலும், போடோ தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. அசாமில் டஜன் கணக்கான பூர்வீக மொழிகள் உள்ளன, அவற்றில் பல எழுத்துகள் இல்லாமல் உள்ளன. கர்பி, மிசிங் , திவா ஆகியவை ரோமானிய எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. ரபா அசாமிஸ் எழுத்துக்களில் எழுதப்படுகிறது.
அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் (AASU) ஆலோசகர் சமுஜ்ஜல் பட்டாச்சார்யா கூறுகையில், அசாமில் மாணவர்கள் ஏற்கனவே 8ஆம் வகுப்பு வரை இந்தி படிக்கும் நிலையில், அதனை மேலும் நீட்டிப்பது சரியில்லை. இந்த முடிவை நாங்கள் எதிர்க்கிறோம்.
தேவநாகரி எழுத்து விவாதம் அசாமிய மொழிக்கான பிரச்சினை அல்ல. ஸ்ஸாமில் உள்ள ரபா, மிசிங், திவா மற்றும் கர்பி போன்ற பிற மொழிகளின் இலக்கிய அமைப்புகள் எழுத்துப் பிரச்சினை குறித்து முடிவு செய்யும். எங்கள் தரப்பில் இருந்து, அனைத்து பழங்குடி மற்றும் இன மொழிகளும் வளர வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
NE மாணவர் சங்கம்
ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வடகிழக்கு மாணவர் அமைப்பு (NESO), இந்தியைக் கட்டாயப் பாடமாக "திணிக்கப்படுவதை" எதிர்த்து அவருக்கு கடிதம் அனுப்பியது. இது பழங்குடி மொழிகளைப் பரப்புவதற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி. கூடுதலாக ஒரு பாடத்தை கல்வியில் இணைக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.