பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தடையாக உள்ளது என்பதை வலியுறுத்தி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2024க்குள் பொது விநியோக அமைப்பு (பிடிஎஸ்) மற்றும் மதிய உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
75 வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, “ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் அரிசியாக இருந்தாலும் சரி அல்லது மதிய உணவில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரிசியாக இருந்தாலும் சரி 2024 ஆம் ஆண்டிற்குள் அனைத்து திட்டத்தின் மூலமும் செறிவூட்டப்பட்ட அரிசி கிடைக்கும்” என்று கூறினார்.
நாட்டில் உள்ளஒவ்வொரு ஏழைக்கும் ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்குவது அரசாங்கத்தின் முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார். “பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஊட்டச்சத்து குறைபாடு ஒரு பெரிய தடையாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும் அரிசியை செறிவூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாட்டில் உணவுப் பொருட்களுக்கான தரத்தை நிர்ணயிக்கிறது. உணவு செறிவூட்டலையும் வரையறுக்கிறது. இது உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஒரு உணவில் அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக்களின் உள்ளடக்கத்தை வேண்டுமென்றே அதிகரிக்கிறது. மேலும், சுகாதாரத்திற்கு குறைந்தபட்ச ஆபத்துடன் ஆரோகிய நன்மைகளை வழங்குகிறது.
FSSAI விதிமுறைகளின்படி, 1-கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு (28 மில்லி கிராம்-42.5 மில்லி கிராம்), ஃபோலிக் அமிலம் (75-125 மைக்ரோ கிராம்) மற்றும் வைட்டமின் B-12 (0.75-1.25 மைக்ரோ கிராம்) இருக்க வேண்டும். கூடுதலாக, அரிசி நுண்ணிய ஊட்டச்சத்துக்களுடன், தனித்தனியாக அல்லது கலவையில், துத்தநாகம் (10 மில்லி கிராம் - 15மில்லி கிராம்), வைட்டமின் A (500-750 மைக்ரோ கிராம் ஆர்.இ), வைட்டமின் B1 (1மில்லி கிராம் -1.5மில்லி கிராம்), வைட்டமின் B2 (1.25 மில்லி கிராம்-1.75 மில்லி கிராம்), வைட்டமின் B3 (12.5 மில்லி கிராம்-20 மில்லி கிராம்) மற்றும் வைட்டமின் B6 ஒரு கிலோவிற்கு (1.5 மில்லி கிராம் -2.5 மில்லி கிராம் ) இருக்க வேண்டும்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013ன் கீழ் பல்வேறு திட்டங்களின் கீழ் 300 லட்சம் டன்களுக்கு மேல் அரிசியை அரசாங்கம் விநியோகிப்பதால் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. 2021-22 ஆம் ஆண்டில் NFSA இன் கீழ் TPDS, MDM மற்றும் ICDSக்கு மத்திய அரசு 328 லட்சம் டன் அரிசியை ஒதுக்கியுள்ளது.
உலகின் அரிசி உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியா வைத்துள்ளது. இந்தியா அரிசி உணவின் மிகப்பெரிய நுகர்வோர் ஆகும். ஒரு நபர் மாதத்திற்கு 6.8 கிலோகிராம் அரிசியை உணவாக நுகர்கிறார்.
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் 2019-20ம் ஆண்டிலிருந்து தொடங்கி மூன்று வருட காலத்திற்கு பொது விநியோக முறையின் கீழ் (PDS) "அரிசி செறிவூட்டல் என்ற திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவியுடன் ரூ.174.64 கோடி மதிப்பில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் 15 மாவட்டங்களில் கவனம் செலுத்துகிறது.
இந்த திட்டத்தின் கீழ், அரிசி அரைக்கும் கட்டத்தில் இந்த கலவை செய்யப்படுகிறது. அமைச்சகத்தின்படி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் 2020 பிப்ரவரி முதல் இந்த திட்டத்தில் பிடிஎஸ்-ன் கீழ் செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளன.
மத்திய பட்ஜெட் 2021-22ல், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மிஷன் போஷன் 2.0 அறிவித்தார். “ஊட்டச்சத்து உள்ளடக்கம், விநியோகம், வெளிப்பாடு மற்றும் விளைவை வலுப்படுத்த, துணை ஊட்டச்சத்து திட்டம் மற்றும் போஷன் அபியான் ஆகியவற்றை இணைத்து மிஷன் போஷன் 2.0 ஐ தொடங்குவோம்” என்று அவர் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.