Advertisment

2-வது மாதமாக தொடரும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; முக்கிய பிரச்சனை என்ன?

சாம்சங் தொழிலாளர்கள் ஏன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்? நிறுவனம் என்ன கோரிக்கைகளை ஒப்புக்கொண்டது, என்ன மறுக்கிறது? வேலை நிறுத்தத்தால் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன?

author-image
WebDesk
New Update
samsung strike

சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் ஆலையில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சங்கத் தலைவர்களுடன் பேசினர். (ராய்ட்டர்ஸ்/ பிரவீன் பரமசிவம்)

Arun Janardhanan 

Advertisment

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் ஆலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் இரண்டாவது மாதமாக நீடிக்கிறது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிப்பது மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்தக் கோரி போராடி வருகின்றனர்.

ஆங்கிலத்தில் படிக்க: Why Samsung workers’ labour strike near Chennai has entered its second month

செப்டம்பர் தொடக்கத்தில் போராட்டங்கள் தொடங்கிய போதிலும், தமிழ்நாடு அரசு சாம்சங் நிறுவனத்துடன் திங்கள்கிழமை (அக்டோபர் 7) பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முதல் நடவடிக்கையை எடுத்தது, தொழிலாளர் நலத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறை மற்றும் தொழில் துறையைச் சேர்ந்த மூன்று மூத்த அமைச்சர்கள் போராடி வரும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாம்சங் நிறுவனம் ஊதிய உயர்வுகள் மற்றும் கூடுதல் நன்மைகள் உள்ளிட்ட சில சலுகைகளுக்கு ஒப்புக்கொண்டது, ஆனால் முக்கிய கோரிக்கையான தொழிற்சங்கத்தின் அங்கீகாரம் தொடர்பாக தீர்வு எட்டப்படாமல் இருந்தது.

பேச்சு வார்த்தைக்குப் பிறகும் போராட்டங்கள் தொடர்ந்ததால், தமிழக காவல்துறையின் தடியடி நடத்தப்பட்டது. புதன்கிழமை அதிகாலை, 11 முக்கிய தொழிற்சங்கத் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். வேலைநிறுத்தம் மற்ற துறைகளிலும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை இப்போது உள்ளது.

முதலில் ஒரு தொழிற்சாலை போராட்டமாக ஆரம்பித்தது தற்போது அரசியல் நெருக்கடியாக உருமாறியுள்ளது, முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலம் என்ற தமிழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணியின் பலத்தை சோதிக்கிறது.

சாம்சங் தொழிலாளர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த இடதுசாரி தொழிலாளர் அமைப்பான இந்திய தொழிற்சங்கங்களின் மையத்தின் (சி.ஐ.டி.யு) பதாகையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை (SIWU) அங்கீகரிப்பதற்கான தொழிலாளர்களின் கோரிக்கை முக்கிய பிரச்சினையாகும். 

இருப்பினும், தென் கொரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங் இந்த கோரிக்கையை எதிர்த்தது. வெளியில் இருந்து வரும் தலைவர்களுடன் கூட்டு பேரத்தில் ஈடுபடும் தொழிற்சங்க யோசனையை ஏற்க முடியாது என்று சாம்சங் கூறியது, மாநில தொழிலாளர் துறையும் தொழிற்சங்கத்தை பதிவு செய்ய கோரிய தொழிலாளர்களின் கோரிக்கையை செயல்படுத்தவில்லை. சட்டப்படி, 45 நாட்களுக்குள் கோரிக்கையை அரசு பரிசீலித்திருக்க வேண்டும்.

தாமதம் குறித்து தொழிலாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர், மேலும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்பதாக அரசாங்கம் கூறியது.

2007-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஸ்ரீபெரும்புதூர் ஆலை இதுபோன்ற போராட்டத்தை இதுவரை சந்தித்ததில்லை. சாம்சங்கின் உலகளாவிய செயல்பாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள் மூலம் நிறுவனத்தின் தற்போதைய நிலை ஓரளவுக்கு வெளிப்பட்டுள்ளது.

ஜூலை மாதம், சாம்சங் நிறுவனம் தென் கொரியாவின் சியோலில் உள்ள ஆலையில் ஒரு பெரிய வேலைநிறுத்தத்தை எதிர்கொண்டது, 6,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளை கோரி இருந்தனர். வேலைநிறுத்தத்தில் வட கொரிய கம்யூனிஸ்ட் தலையீடு பற்றிய வதந்திகள், தொழிற்சங்கமயமாக்கல் முயற்சிகளுக்கு எதிரான சாம்சங்கின் எச்சரிக்கையை உயர்த்தியதாக நம்பப்படுகிறது.

சி.ஐ.டி.யு.,வின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், முன்மொழியப்பட்ட தொழிற்சங்கமான எஸ்.ஐ.டபிள்யூ.யு.,வின் தலைவருமான என்.முத்துக்குமார், ஸ்ரீபெரும்புதூர் பெல்ட்டில் உள்ள தொழிற்சாலைகளில் சி.ஐ.டி.யு.,வின் இதேபோன்ற இரண்டு டஜன் தொழிற்சங்கங்களை வழிநடத்துகிறார்.

சாம்சங் தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்தப்போது நிர்வாகத்திடம் இருந்து பிரச்சனைகளை எதிர்கொண்டதால், தங்களை அணுகியதாக முத்துக்குமார் கூறினார். “முன்னர் கோரிக்கைகளை எழுப்பிய அந்த ஊழியர்கள் நிபுணத்துவம் இல்லாவிட்டாலும் டி.வி பிரிவுகளில் இருந்து ஏ.சி பிரிவுகளுக்கு மாற்றப்பட்டனர். கேள்வி கேட்க தனியாக அறைகளில் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்ததாக அவர்கள் புகார் தெரிவித்தனர். அவர்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டது, இடைவிடாத கூடுதல் நேரங்களுக்கு தள்ளப்பட்டனர், மேலும் அவர்களது சகாக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். தொழிலாளர் சக்தியைப் பொறுத்தவரை, இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்கத்தைப் பற்றியது மட்டுமல்ல, இது தொழிலாளர்களாகிய அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கானது,” என்று முத்துக்குமார் கூறினார்.

தமிழக அரசு எப்படி நடந்துகொண்டது?

ஆலையில் பணிபுரிந்த 1,723 நிரந்தரத் தொழிலாளர்களில் 1,350 பேர் தொடக்கத்தில் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டாலும், அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் உட்பட பல மூத்த அதிகாரிகள், காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு அணுகுமுறையை மேற்கொண்டனர், சாம்சங் இந்தியா இந்த சிக்கலை தொழிற்சாலை மட்டத்தில் தீர்க்கும் என்று நம்பினர். எவ்வாறாயினும், அரசாங்கத்தின் முடிவு தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர வழிவகுத்தது.

திங்கட்கிழமை நடந்த கூட்டத்திற்குப் பிறகு, அரசாங்கம் ஒரு தீர்வு எட்டப்பட்டதாகக் கூறியது. "சாம்சங் நிறுவனம் இன்று தனது சென்னை தொழிற்சாலையின் பணியாளர் குழுவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது... சட்டவிரோத வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தமிழக அரசின் முயற்சிகளை நாங்கள் அறிந்துள்ளோம், மேலும் தொடர்ந்து ஆதரவு அளித்த அதிகாரிகளுக்கு நன்றி கூறுகிறோம்" என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இருப்பினும், சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத சில தொழிலாளர்கள் என்று குற்றம் சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஒப்பந்தத்தை ஏற்க மறுத்தனர்.

தி.மு.க தலைவர் ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் புதன்கிழமை கூறுகையில், பேச்சுவார்த்தை தோல்வியல்ல, ஆனால் ஒரு முக்கியமான படியாகும். "ஆனால், அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் தவறான கூற்றை உருவாக்க முயன்றதாகத் தெரிகிறது. பிரச்சினை தீர்க்கப்பட்டதாக அறிவிக்க விரைந்தவர்கள் அதிக லட்சியம் கொண்டவர்கள் மற்றும் தொழிற்சங்க பேச்சுவார்த்தைகளில் அனுபவம் இல்லாதவர்கள்,” என்று அந்த தலைவர் கூறினார்.

இப்போது அரசு என்ன செய்ய வேண்டும்?

சி.ஐ.டி.யு மற்றும் சி.பி.ஐ(எம்) ஆகிய இரு கட்சிகளும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு நீண்டகாலமாக ஆதரவு அளித்து வருகின்றன, ஆனால் வேலைநிறுத்தம் உறவில் விரிசலைத் திறந்துள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தி.மு.க.,வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, ம.தி.மு.க., மற்றும் வி.சி.க ஆகிய கட்சிகளின் தலைவர்கள் போராட்ட இடத்திற்குச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவிப்பதற்கு முன்னதாக, 11 தொழிற்சங்கத் தலைவர்களை தமிழக போலீஸார் புதன்கிழமை தடுப்புக் காவலில் எடுத்துச் சென்றனர். மேலும் பதட்டத்தை அதிகரிக்கச் செய்த சி.ஐ.டி.யு மூத்த தலைவர்களான சௌந்தரராஜன், முத்துக்குமார் உள்ளிட்டோரும் காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

சி.ஐ.டி.யு இப்போது அக்டோபர் 21 அன்று வடக்கு தொழில்துறை பகுதி முழுவதும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

வேலைநிறுத்தம் மாநில அரசுக்கு ஒரு மோசமான நேரத்தில் வருகிறது. முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்கா சென்று, உலக முதலீட்டாளர்களின் இலக்காக தமிழ்நாட்டை உயர்த்தி, தொடர்ச்சியான முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

சாம்சங் நிறுவனத்திற்கு என்ன ஆபத்தில் உள்ளது, ஸ்ரீபெரும்புதூர் ஆலையின் முக்கியத்துவம் என்ன?

சாம்சங்கைப் பொறுத்தவரை, ஸ்ரீபெரும்புதூர் ஆலை இந்தியாவில் அதன் வருடாந்திர வருவாயில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது. இந்தத் தொழிற்சாலை குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் போன்ற உபகரணங்களை உற்பத்தி செய்கிறது. இந்த வேலைநிறுத்தம் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தொழிலாளர் இடையூறுகளில் ஒன்றாகும்.

ஆலையின் மொத்த பணியாளர்களில் கணிசமான பங்கான 5,000 பேர் கொண்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை, ஆனால் உற்பத்தி கணிசமாக குறைந்துள்ளது. சாம்சங் இந்தியாவுடன் நன்கு அறிந்த சுயாதீன ஆதாரங்களின்படி, உற்பத்தியில் குறைந்தது 50% ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தம் ஊதியங்கள் அல்லது வேலை நிலைமைகள் பற்றியது அல்ல என்று சாம்சங் தொடர்ந்து வாதிட்டது, இவை ஏற்கனவே தீர்க்கப்பட்டதாக நிறுவனம் கூறுகிறது, மாறாக தொழிலாளர் சக்தியின் மீது கட்டுப்பாட்டை பெற சி.டி.ஐ.யூ.,வின் முயற்சி என்று கூறப்படுகிறது. திங்களன்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, செய்தித் தொடர்பாளர் ஒருவர், "தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நிவர்த்தி செய்ய சி.ஐ.டி.யு நேரடியாக ஈடுபடும்" என்று கூறினார்.

முன்மொழியப்பட்ட தொழிற்சங்கத்தில் அவர் இருப்பதில் முட்டுக்கட்டை பற்றி கேட்டபோது, முத்துக்குமார் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சங்கத்தையும் தலைவர்களையும் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என்று கூறினார். "தொழிலாளர்களை யார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை ஆணையிட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை. ஒரு குறிப்பிட்ட நிர்வாக இயக்குனரிடம் அல்லது ஹெச்.ஆரிடம் பேச தொழிலாளர்கள் மறுத்தால் என்ன செய்வது? இது தொழிலாளர்களின் உரிமைகள் பற்றியது,'' என்றார்.

முதலீட்டுக்கு உகந்த மாநிலம் என்ற சூழ்நிலைக்கு எழுந்துள்ள கவலைகள் குறித்து முத்துக்குமார் கூறுகையில், கடந்த காலங்களில் இதுபோன்ற வேலைநிறுத்தங்கள் நடந்துள்ளன, ஆனால் அவை மாநிலத்தில் நிறுவனங்கள் கடைகளை மூடுவதற்கு வழிவகுக்கவில்லை என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Chennai Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment