மகாராஷ்டிராவில் சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்பட்டுவருவது நாமறிந்ததே.
இந்த நிலையில் மும்பை அந்தேரி (கிழக்கு) சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வகையில் இரு தரப்பினரும் கட்சி சின்னமான வில் மற்றும் அம்புவை கோரியிருந்தனர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் சின்னம், சிவசேனா கட்சி மற்றும் தேர்தல் சின்னத்தை முடக்கியது. இந்த நிலையில் இருவரும் மூன்று சின்னங்கள் மற்றும் கட்சியின் பெயரை கோரியிருந்தனர்.
அந்த வகையில் உத்தவ் தலைமையிலான அணிக்கு சிவசேனா- உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரும் கட்சியின் சின்னமாக சுடர்விடும் ஜோதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உத்தவ் தாக்கரே திரிசூலம், உதய சூரியன், தண்டாயுதம் ஆகியவற்றை கோரியிருந்தார். இதில் உதய சூரியன் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேயும் கோரியிருந்தார்.
இந்த சின்னம் திமுகவின் சின்னம் என்பதால் நிராகரிக்கப்பட்டது. மற்ற சின்னங்களான கதா மற்றும் திரிசூலமும் மதம் சார்ந்த அடையாளம் என்பதால் நிராகரிக்கப்பட்டன.
இந்த நிலையில், உத்தவ் தாக்கரே அணிக்கு சுடர்விடும் ஜோதி சின்னமாக கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஷிண்டே அணிக்கு பாலாசாஹேபஞ்சி சிவசேனா (பாலாசாகேப்பின் சிவசேனா) என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்தேரி கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முன்னதாக, சிவசேனா சின்னத்தை பெற இரு பிரிவினரும் மோதலில் ஈடுபட்ட நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
தொடர்ந்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கரே தலைமையிலான பிரிவினர் தில்லி உயர் நீதிமன்றத்தை திங்கள்கிழமை (அக்.10) அணுகினர்.
ஏன் சுடர்விடும் ஜோதி?
2004ஆம் ஆண்டு சுடர் விடும் ஜோதி சமதா என்ற கட்சிக்கு வழங்கப்பட்டது. இந்தக் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்வில்லை.
தற்போது உத்தவ் தாக்கரே அணியினர் இந்தச் சின்னத்தை கோரியுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் அந்த அணிக்கு வழங்கியுள்ளது.
மேலும் இந்த சுடர்விடும் ஜோதி சின்னத்துக்கும் சிவசேனாவுக்கும் இடையே பழைய தொடர்புகள் உள்ளன. 1985 ஆம் ஆண்டு, சிவசேனாவுக்கு பிரத்யேக தேர்தல் சின்னம் இல்லாதபோது, அக்கட்சி சுடர்விடும் ஜோதி சின்னத்தில் தேர்தலில் வெற்றி பெற்றது.
ஏழாவது மகாராஷ்டிர சட்டசபையில் சேனாவின் ஒரே எம்.எல்.ஏ.வான சாகன் புஜ்பால், மஸ்கான் தொகுதியில் தீபச் சின்னத்தில் வெற்றி பெற்றார்.
புஜ்பால் மற்றும் முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி உட்பட மற்ற சேனா வேட்பாளர்கள், கட்சிக்கு பிரத்யேக சின்னம் இல்லாததால், தேர்தலில் போட்டியிட பல்வேறு சின்னங்களைத் தேர்ந்தெடுத்தனர்.
மற்ற சின்னங்கள் உதய சூரியன், மற்றும் மட்டை பந்து ஆகும். இந்த நிலையில், புஜ்பால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “மகாராஷ்டிரா மக்களுக்கு ஒரு புதிய பாதையைக் காட்டும் புரட்சியின் சின்னம் என்பதால் சுடர்விடும் ஜோதியை தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
1985 தேர்தலை நினைவு கூர்ந்த புஜ்பால், அப்போது தேர்தல் பிரச்சாரம் பெரும்பாலும் சுவர் ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும், ஜோதியை வரைவது எளிதாக இருந்தது என்றும் கூறினார்.
மேலும், “அப்போது தேர்தலில் போட்டியிட எங்களிடம் பணம் இல்லை, அதனால் நான் சுவர் ஓவியம் வரைவேன். எரியும் ஜோதியை வரைவது மிகவும் எளிதானது. எனது பிரச்சாரத்தின் போது நான் அதை வரைந்தேன்.
அது வாக்காளர்களின் கண்களைக் கவரும். அது என்னை ஒரு வரலாற்று வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அப்போது சட்டசபையில் சேனாவின் ஒரே எம்.எல்.ஏ.,வாக இருந்தேன்” என்றார்.
தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூத்த தலைவரான புஜ்பால், அவர் சட்டமன்றத்தில் எரியும் ஜோதி சின்னத்தில் வெற்றி பெற்ற பிறகு, சிவசேனாவின் வெற்றிப் பயணம் எல்லா இடங்களிலும் தொடங்கியது என்று கூறினார்.
மேலும், “உத்தவ் தாக்கரேவுக்கு இது மீண்டும் நிகழும் என்றும், எரியும் ஜோதி சின்னம் மகாராஷ்டிராவின் அரசியலில் சிவசேனாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.
1989 ஆம் ஆண்டுதான் சேனாவுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டு, வில் அம்பு சின்னம் வழங்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.