ஆந்திராவின் தலைநகராக அமராவதியை கொண்டு வரும் முந்தைய டிடிபி ஆட்சியின் திட்டத்தைத் தொடராமல், அதற்குப் பதிலாக 3 தலைநகரை உருவாக்கும் திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி அரசு கையில் எடுத்தது. இதற்காக கொண்ட வரப்பட்ட 2 சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அதனை ரத்து செய்ய ஜெகன் மோகன் ரெட்டி அரசு முடிவு செய்தது. இதற்கான சட்ட மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ரத்து செய்யப்பட்ட சட்டங்களில் ஒன்று தான், அனைத்துப் பகுதிகளின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய மேம்பாடு மசோதா 2020. இது மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்க ஜனவரி 2020 இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அனைத்துப் பகுதிகளின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய மேம்பாடு மசோதா அறிமுகம் ஏன்?
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம், ஆந்திரா, தெலங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்பிறகு விஜயவாடா - குண்டூர் இடையே ஆந்திராவின் புதிய தலைநகரை அமைக்க கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 33 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு வழங்கினர். இப்பகுதிக்கு ‘அமராவதி’ என பெயர் சூட்டப்பட்டது.
தற்காலிக சட்டப்பேரவை, தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் அமராவதியில் கட்டப்பட்டன. ஆந்திராவின் தலைமைச் செயலக ஊழியர்கள் ஹைதராபாத்தில் இருந்து அமராவதிக்கு இடம்மாறினர். சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் அரசு, அமராவதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது.
கடந்த 2019 ஏப்ரலில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, அத்திட்டத்தைக் கைவிட முடிவு செய்தது. அதற்குப் பதிலாக, ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் உருவாக்கும் திட்டத்தைக் கையிலெடுத்தார்.
அதன்படி, 2020 ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையச் சட்டத்தை ரத்துசெய்து, ஆந்திரப் பிரதேசப் பரவலாக்கம் மற்றும் அனைத்துப் பகுதிகளின் உள்ளடக்கிய மேம்பாட்டுச் சட்டம், 2020 நிறைவேற்றப்பட்டது.
புதிய சட்டத்தின்படி, அமராவதியில் சட்டப்பேரவையும், விசாகப்பட்டினத்தில் தலைமைச் செயலகமும், கர்னூலில் உயர் நீதிமன்றமும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஏன் 3 தலைநகர் சட்டம் ரத்து செய்யப்பட்டது?
அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பெரும்பாலான மனுக்கள் டிடிபி கட்சி ஆதரவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமராவதியில் விவசாய குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு கையகப்படுத்திய நிலையில், முந்தைய திட்டத்தின்படி அமராவதியே தலைநகராக ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில், நீதிமன்றத்தில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் சுப்ரமணியம் ஸ்ரீராம், தலைநகர் அமைக்கும் முடிவை திரும்ப பெற அரசு தயாராக உள்ளது. இச்சட்டம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
சட்டம் ரத்து செய்வது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, முந்தைய மசோதாவில் உள்ள ஓட்டைகளை அடைத்து, புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என உறுதியளித்தார். அமராவதியை டிடிபி அரசு தேர்வு செய்வதற்கான காரணமே, அங்கு சாலை, வடிகால் அமைப்பு போன்ற சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லாதது தான். அதனை சீரமைக்க 1 லட்சம் கோடி தேவைப்படும். இந்த தொகை 10 ஆண்டுகளில் 5 லட்சம் 6 லட்சமாக உயரக்கூடும் என தெரிவித்தார்.
ஏன் புதிய மசோதா?
ஆந்திராவில் தலைநகரை பரவலாக்கம் செய்வது மிகவும் அவசியம் என்று நாங்கள் நம்பினோம். மாநிலத்தின் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக தான், 3 தலைநகர் சட்டத்தை அறிமுகப்படுத்தினோம். ஆனால், எதிர்க்கட்சிகள் மாநிலத்தின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி தொடர்பான எங்கள் நோக்கத்தைத் திரித்து, தவறான தகவலை பரப்பி சட்டரீதியான தடைகளை உருவாக்குகின்றனர். உண்மையான எண்ணம் மற்றும் அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியத்தை சம்பந்தப்பட்ட அனைவருக்கும் விளக்கி,புதிய மசோதாவில் தேவையான மாற்றங்கள் சேர்க்கப்படும். பொது நலன் கருதி சட்டம் திரும்பப் பெறப்படுகிறது என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திராவுக்கு இனி ஒரு தலைநகர் தானா?
அமராவதியைத் தனி தலைநகராக அரசு கடைப்பிடிக்குமா என்பது தெரியவில்லை. முதல்வர் தனது உரையில், அனைத்துப் பகுதிகளின் சமமான வளர்ச்சிக்கு அதிகாரப் பரவலாக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். புதிய மசோதா எப்போது தாக்கல் செய்யப்படும் என்பதை முதல்வர் கூறவில்லை.
மற்ற கட்சிகள் கருத்து என்ன?
முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ், 'பொய்கள்' மற்றும் 'அரை உண்மைகளை' அரசாங்கம் பரப்பி வருகிறது. அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்காகவும், சமமான நீதிக்காகவும் அமராவதியை தலைநகராக மாற்றுவதற்கு முந்தைய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்தியது. மக்களுடன் மூளை விளையாட்டை ஜெகன் விளையாடி கொண்டிருக்கிறார்.
2019 தேர்தலுக்கு முன்பு, அமராவதியை வளர்ச்சியடையச் செய்வேன் என உறுதியளித்தார். ஆனால், மாநிலத் தலைநகர் மற்றும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான அவரது திட்டம் குறித்து அவரால் தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை" என்றார்.
அதே சமயம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பயந்து இச்சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்ததாக பாஜக தெரிவித்துள்ளது.
அதிகாரப் பரவலாக்கம் குறித்து எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி பொதுமக்களின் கருத்தை கேட்குமாறு முதல்வரிடம் கேட்டுக் கொள்வதாக பாஜகவின் ஆந்திரப் பிரிவுத் தலைவர் சோமு வீர்ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.