இதுவரை யாரும் ஆய்வு செல்லாத நிலவின் தொலை தூரப் பகுதியில் விண்கலனை தரையிறக்கிய சீனா முதல் முறையாக அங்குள்ள பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்து வெற்றிகரமாக நேற்று (செவ்வாயன்று) பூமி திரும்பி உள்ளது. சீனாவின் Chang'e-6 விண்கலம் மண், பாறை மாதிரிகளுடன் பூமி திரும்பி சாதனை படைத்துள்ளது. நிலவின் இந்த தொலைதூரப் பகுதி பூமியில் இருந்து ஒருபோதும் பார்க்க முடியாத பகுதியாகும்.
ஜூன் 1-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய லேண்டர், ஒரு ரோபோ கை மற்றும் ட்ரீல் (drill) தொழில்நுட்பம் பயன்படுத்தி, 2,500 கிமீ அகலமுள்ள தென் துருவ-ஐட்கென் (SPA) பேசின் பகுதியில் பழமையான மற்றும் மிகப்பெரிய சந்திர பள்ளங்களில் ஒன்றில் இருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை சேகரித்தது. லேண்டர் தரையிறங்கிய பின் 2 நாட்கள் இந்த பணியை மேற்கொண்டது.
ஆங்கிலத்தில் படிக்க: Why the success of China’s sample return lunar mission matters
லேண்டர் பின்னர் ஒரு ascent module-ஐ வெளியேற்றி அது மாதிரிகளை சந்திரனைச் சுற்றி வரும் சாங்-6 ஆர்பிட்டருக்கு மாற்றியது. ஜூன் 21 அன்று, ஆர்பிட்டர் ஒரு service module-ஐ வெளியிட்டது, அது மாதிரிகளை பூமிக்கு கொண்டு வந்தது.
மண், பாறை மாதிரி பணிகள் ஏன் முக்கியமானவை?
Chang'e-6 போன்ற சாம்பிள் ரிட்டர்ன் மிஷன், சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற வேற்று கிரகத்தில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு ஆய்வுக்காக கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாதிரிகள் மண், பாறைகள், மூலக்கூறுகள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரப்பட்ட பின், விஞ்ஞானிகள் மிகவும் உணர்திறன் வாய்ந்த ஆய்வக (sensitive laboratory ) கருவிகளைப் பயன்படுத்தி அவற்றை ஆய்வு செய்வர். "வேறு கிரகத்தின் மாதிரிகளின் வேதியியல், ஐசோடோபிக், கனிமவியல், கட்டமைப்பு மற்றும் இயற்பியல் பண்புகளை மேக்ரோஸ்கோபிக் மட்டத்திலிருந்து அணு அளவு வரை, ஒரே மாதிரியில் அடிக்கடி ஆய்வு செய்ய முடியும்" என்று நாசாவின் கிரக அறிவியல் பிரிவின் இயக்குனர் லோரி எஸ் கிளேஸ் கூறினார்.
மேலும், இப்படி எடுத்து வரப்படும் மாதிரிகள் பல ஆண்டுகளுக்கு பாதுகாக்கப்படும். தொடர்ந்து மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்கால தலைமுறையினரால் ஆய்வு செய்யப்படலாம் என்பதாகும்.
1960 மற்றும் 1970களில் அப்பல்லோ பயணங்களால் கொண்டு வரப்பட்ட மாதிரிகள் இன்னும் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவைகள் சந்திரன், பூமி மற்றும் உள் சூரிய குடும்பத்தின் வரலாற்றைப் ஆய்வு செய்கின்றனர்.
தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) உருவாக்கப்பட்டு வரும் இந்தியாவின் சந்திரயான்-4 பணியும் இதுபோன்ற மாதிரி திரும்பும் பணியாக இருக்கும்.
Chang'e-6 கொண்டு வந்த மாதிரிகள் என்ன?
நிலவின் தொலைத்தூரப் பகுதியில் இருந்து மாதிரிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பகுதி அதிக பள்ளங்கள் மற்றும் எரிமலைக்குழம்பு பாய்ந்த குறைவான சமவெளிகளைக் கொண்ட பகுதியாகும்.
எஸ்.பி.ஏ பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சந்திர பள்ளத்திற்கான காலத்தை வெளிப்படுத்தலாம். இது சந்திரனின் வரலாறு மற்றும் அதன் தோற்றம் பற்றிய நுண்ணறிவுகளை அளிக்கும்.
நிலவு பயணம் - போட்டா போட்டி
2023-ம் ஆண்டில், இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை சந்திர பயணத்தைத் தொடங்கின. 2030 ஆம் ஆண்டளவில், அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களால் 100க்கும் மேற்பட்ட நிலவு பயணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் 2030 ஆம் ஆண்டிற்குள் நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறக்க போட்டியிடுகின்றன. Chang'e-6 இன் வெற்றியானது சீனாவின் இந்த இலக்கை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“