கொலை வழக்கில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படம், கைரேகையை ஆதார் தரவுதளத்தில் ஒப்பிட்டு, குற்றவாளியை பிடிக்க உதவுமாறு டெல்லி போலீஸ் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. ஆனால், இந்த கோரிக்கைக்கு UIDAI எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்திய குடிமக்களுக்கு பிரத்யேக ஆதார் எண்ணை வழக்கும் UIDAI, எந்தவொரு முக்கிய பயோமெட்ரிக் தகவலையும் காவல் துறையுடன் பகிர்ந்து கொள்வதற்கு சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், காவல்துறையின் கோரிக்கையை ஏற்பது தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளது.
டெல்லி போலீஸ் மனு
கடந்த பிப்ரவரி மாதம், ஆதார் சட்டத்தின் 33(1) பிரிவின் கீழ் டெல்லி உயர் நீதிமன்றத்தை காவல் துறை அணுகியது. அச்சட்டத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதி சில வழக்குகளில் அடையாளம் குறித்த தகவல்களை வெளியிட உத்தரவிடலாம்.
ஆதார் சட்டம், 2016 பிரிவுகள் 28(2) மற்றும் 28(5)இன்படி, UIDAI தனிநபர்களின் அடையாளத் தகவல் மற்றும் அங்கீகாரப் பதிவுகளின் ரகசியத்தன்மையை உறுதி செய்யும் என்று கூறுகிறது. எந்தவொரு UIDAI ஊழியர் பணியில் இருக்கும் போதோ அல்லது ஓய்வு பெற்றப்பிறகோ, தரவுக் களஞ்சியத்தில் சேமிக்கப்பட்டுள்ள தகவலை வெளியிடக்கூடாது என குறிப்பிட்டுள்ளது.
வழக்கு என்ன?
ஜூன் 12, 2018 அன்று, ஹேமந்த் குமார் கௌசிக் என்ற நகைக்கடைக்காரர், ஆதர்ஷ் நகரில் உள்ள அவரது கடையில் கொலை செய்யப்பட்டார். இரண்டு சந்தேகநபர்கள் கடையை கொள்ளையடித்த போது, மூன்றாவது நபர் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் வெளியே காத்திருந்தார். கௌசிக் ஒருவரைப் பிடிக்க முயன்றபோது, அவரை சுட்டுக்கொன்றனர்.
காவல் துறை நடத்திய விசாரணையில், 14 கைரேகைகளும், சிசிடிவியில் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படமும் சிக்கியுள்ளது. காவல் துறையிடம் ஏற்கனவே உள்ள குற்றவாளிகள் புகைப்படம் மற்றும் கைரேகையுடன் அவரை ஒத்துப்போகவில்லை. தற்போது, போலீஸ் ஆதாரின் பயோமெட்ரிக் டேட்டாபேஸை உபயோகிக்க முடிவு செய்தனர்.
UIDAI சேகரிக்கும் தரவுகள் என்ன?
குடியிருப்பாளர்களின் மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை ஆணையம் சேகரிக்கிறது. அவர்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பத்து விரல்களின் கைரேகை, இரண்டு கருவிழி ஸ்கேன், புகைப்படம் ஆகியவை சேகரிக்கப்படுகிறது. பிராசஸ் முடிவடைந்த பிறகு, அவர்களுக்கு 12 டிஜிட் ஆதார் எண் வழங்கப்படும்.
தரவு ரகசியத்தன்மை
ஆதார் சட்டத்தின்படி UIDAI தான் சேகரிக்கும் அடையாளத் தகவலின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். UIDAIகூற்றுப்படி, டெல்லி காவல்துறையின் கோரிக்கை சட்டப்பிரிவு 29க்கு முரணானது. அச்சட்டம், கைரேகை, கருவிழி ஸ்கேன் போன்ற முக்கிய பயோமெட்ரிக் தகவல்களை எந்த நிறுவனத்துடனும் எந்த காரணத்திற்காகவும் பகிர்வதை தடை செய்கிறது. ஆதார் கார்டு உரிமையாளரின் அனுமதியின்றி ஆதார் தரவைப் பகிர முடியாது என்றும் UIDAI கூறியுள்ளது.
டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சட்டப்பிரிவு 33இல் புகைப்படம் அல்லது அங்கீகாரப் பதிவுகள் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே வெளியிட கூறுகிறது. முக்கிய பயோமெட்ரிக் தகவல்கள் பகிர சட்டம் அனுமதிக்கவில்லை. அதேபோல், சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது கார்டு உரிமையாளரின் அனுமதியின்றி அத்தகைய உத்தரவை நீதிமன்றத்தால் பிறப்பிக்க முடியாது எனவும் கூறுகிறது.
இச்சட்டத்தில் தேசிய பாதுகாப்பு விதிவிலக்கும் உள்ளது. மத்திய அரசின் செயலாளர் பதவிக்குக் குறையாத அதிகாரி, தேசிய பாதுகாப்பு நலன் கருதி அடையாளத் தகவல் அல்லது அங்கீகாரப் பதிவு உள்ளிட்ட தகவல்களை வெளியிட உத்தரவிடலாம்.
தொழில்நுட்ப தடை
டெல்லி போலீஸ் மனுவை எதிர்ப்பு தெரிவித்த UIDAI, 1:N தரவுப் பகிர்வு சாத்தியமில்லை, அது 1:1 அடிப்படையில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
ஆதார் தொழில்நுட்பம் பயோமெட்ரிக் அங்கீகாரங்களை மட்டுமே அனுமதிக்கிறது. அவை 1:1 அடிப்படையில் செய்யப்படுவதால், தனிநபரின் ஆதார் எண்ணை வைத்திருப்பது அவசியம்.
தடயவியல் நோக்கங்களுக்கான தொழில்நுட்பங்கள், தரநிலைகள் அல்லது நடைமுறைகளின் அடிப்படையில் கருவிழி ஸ்கேன், கைரேகைகள் போன்ற பயோமெட்ரிக் தகவல்களை சேகரிக்கவில்லை. எனவே, பயோமெட்ரிக் தரவை சீரற்ற பொருத்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது. அவை சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் என UIDAI நீதிமன்றத்தில் கூறியது.
ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்திற்கு, “லைவ் பயோமெட்ரிக்ஸ்” மற்றும் ஆதார் இரண்டையும் வைத்திருப்பது அவசியம். எனவே, ஆதார் எண் மூலம் மட்டுமே ஒரு தனிநபரின் அடையாளத்தை ஆணையம் பெற முடியும். அறியப்படாத குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை வழங்குவது கூட தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை. UIDAI இன் தொழில்நுட்ப கட்டமைப்பு 1:N பொருத்தத்தை அனுமதிக்காது என UIDAI தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil