சுஷந்த் சிங், கட்டுரையாளர்
1929 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக இருந்த ஜவஹர்லால் நேரு பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து பூரண சுயராஜ்யம் அல்லது முழு சுதந்திரம் வேண்டும் என்று கேட்டபோது, ஜனவரி 26 தான் சுதந்திர தினமாக தேர்வு செய்யப்பட்டது. உண்மையில் காங்கிரஸ் கட்சி அந்த நாளைத்தான் 1930 முதல் இந்தியா சுதந்திரம் பெறும்வரை மற்றும் ஜனவரி 26, 1950 குடியரசு தினமாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரையிலும் தொடர்ந்து கொண்டாடியது. இந்த நாளில்தான் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இல்லாமல் இந்தியா முறையாக ஒரு இறையாண்மை கொண்ட நாடாக மாறியது. ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திர தினமாக மாறியது எப்படி? 1948 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதிக்குள் அதிகாரத்தை மாற்றி அளிக்குமாறு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மவுண்ட்பேட்டன் பிரபுவுக்கு ஆணை வழங்கப்பட்டது.
ராஜகோபாலாச்சாரியின் மறக்கமுடியாத வார்த்தைகளில் சொல்வதென்றால், 1948 ஜூன் வரை அவர் காத்திருந்தால், மாற்றி அளிப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. அதனால், மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 1947 க்கு தேதியை முன்னேற்றினார். அந்த நேரத்தில், மவுண்ட்பேட்டன் தேதியை முன்னேற்றுவதன் மூலம், இரத்தக்களறி அல்லது கலவரம் ஏற்படாது என்பதை உறுதி செய்வதாகக் கூறினார்.
அவரது எண்ணம் நிச்சயமாக தவறு என்று நிரூபிக்கப்பட்டது. இருப்பினும், அவர் பின்னர் அதை நியாயப்படுத்த முயன்று கூறியது: “காலனித்துவ ஆட்சி எங்கு முடிவுக்கு வந்தாலும் அங்கு ரத்தக்களறி ஏற்பட்டுள்ளது. அதுதான் அதற்கு நீங்கள் செலுத்தும் விலை.” என்று கூறினார்.
மவுண்ட்பேட்டனின் கருத்துகளின் அடிப்படையில், இந்திய சுதந்திர மசோதா ஜூலை 4, 1947 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் பொது அவையில் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்பட்டது. அது ஆகஸ்ட் 15, 1947-இல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முடிவை வழங்கியது. மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் டொமினியன்களை நிறுவி, அவை பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் இருந்து பிரிந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.
மவுண்ட் பேட்டன் பின்னர், நள்ளிரவில் சுதந்திரம் அளித்த நாளில், “நான் தேர்ந்தெடுத்த தேதி எதிர்பாராமல் வந்தது. ஒரு கேள்விக்கான பதிலில் அதைத் தேர்ந்தெடுத்தேன். முழு நிகழ்விற்கும் நான்தான் சூத்ரதாரி என்பதைக் காண்பிப்பதில் உறுதியாக இருந்தேன். நாங்கள் ஒரு தேதியை நிர்ணயித்திருக்கிறோமா என்று அவர்கள் கேட்டபோது, அது விரைவாக இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் அதைச் சரியாகச் செய்யவில்லை - ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், பின்னர் ஆகஸ்ட் 15 க்கு வெளியே சென்றேன். ஏனென்றால், அது ஜப்பான் சரணடைந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாள். ” என்று கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 15, 1945 -இல் ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிட்டொவின் பதிவு செய்யப்பட்ட வானொலி உரையில் பேசினார். அது பின்னர், ஜுவல் வாய்ஸ் பிராட்காஸ்ட் (ஆபரண குரல் ஒலிபரப்பு) என்று அறியப்பட்டது. அந்த வானொலி உரையில், அவர் ஜப்பான் நேச நாடுகளிடம் சரணடைவதாக அறிவித்தார். அந்த நாளில் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் அறையில் அமர்ந்திருந்த மவுண்ட்பேட்டன் ஜப்பானியர்கள் சரணடைந்ததை நினைவு கூர்ந்தார். தென் கிழக்கு ஆசியப் படைகளின் கூட்டுத் தளபதி, செப்டம்பர் 4, 1945 அன்று சிங்கப்பூரின் ஜப்பானியர்கள் முறையாக சரணடைந்ததில் கையெழுத்திட்டார்.
ஆனால், ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானுக்கு எப்படி சுதந்திரம் கிடைத்தது? உண்மையில் அது அப்படி இல்லை. இந்திய சுதந்திர மசோதா ஆகஸ்ட் 15ம் தேதியை இரு நாடுகளுக்கும் சுதந்திர அளிக்கும் தேதியாகத்தான் வழங்கியது. பாகிஸ்தான் வெளியிட்ட முதல் ஸ்டாம்ப்பில் ஆகஸ்ட் 15 ஆம் தேதியைத்தான் அதன் சுதந்திர தினமாக குறிப்பிட்டுள்ளது. ஜின்னா உண்மையில், பாகிஸ்தானுக்கு தனது முதல் உரையில் “ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர மற்றும் இறையாண்மை கொண்ட பாகிஸ்தானின் பிறந்த நாள். கடந்த சில ஆண்டுகளில் தங்களுக்கு ஒரு தாயகத்தைக் கொண்டிருப்பதற்காக பெரும் தியாகங்களைச் செய்த முஸ்லிம்களின் தேசத்தின் கண்ணியத்தை நிறைவேற்ற வேண்டும்” என்று கூறினார்.
1948 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 ஆம் தேதியை அதன் சுதந்திர தினமாகக் குறிக்கத் தொடங்கியது. இதற்கு காரணம், கராச்சியில் அதிகாரப் பரிமாற்றத்துகான விழா ஆகஸ்ட் 14, 1947 அன்று நடைபெற்றதாலும் அல்லது ஆகஸ்ட் 14, 1947 முஸ்லிம்களின் மிகவும் புனிதமான ரமதான் மாதத்தின் 27 ஆம் தேதி என்பதாலும்தான்.
எது எப்படியிருந்தாலும், 73 ஆண்டுகளில், இந்தியாவும் பாகிஸ்தானும் தாங்கள் கடினமாக போராடி பெற்ற சுதந்திரத்தை தேசபக்தி உணர்வுடன் கொண்டாடுகின்றன. இருப்பினும், இரு நாடுகளிலும் உள்ள ஏராளமான மக்களுக்கு சுதந்திரத்தின் பலன்களை வழங்குவதற்கான நோக்கத்தைவிட, இந்த தேதிகள் மிகக் குறைவான முக்கியத்துவத்தையே பெற்றுள்ளன.