நீங்கள் முகக்கவசம் அணியும்போது அது முதன்மையாக உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களை பாதுகாக்கிறது. உங்களுக்கான பாதுகாப்பு என்ற கண்ணோட்டத்தில் இருந்து உங்களுடைய முகக்கவசம் உங்கள் முகத்தைச் சுற்றி காற்றோட்டத்தில் எப்படி தாக்கம் செலுத்துகிறது, நீங்கள் உள்ளிழுக்கும் துகள்கள் மேல் சுவாசப்பாதையில் அல்லது நுரையீரலில் செல்லும் விதத்தை எவ்வாறு பாதிக்கிறது?
அமெரிக்கன் இயற்பியல் நிறுவனத்தின் ஆய்விதழ் ஒன்றில் திரவங்களின் இயற்பியல் என்ற ஒரு புதிய ஆய்வில், இத்தகைய காற்றோட்டங்கள் மற்றும் துகள் படிதல் ஆகியவற்றில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது அணியப்படும் மூன்று மடிப்பு கொண்ட முகக்கவசத்தை அணிந்ததன் விளைவை ஆய்வு செய்துள்ளது.
முக்கிய கண்டுபிடிப்புகள்
* துகள்களை வடிகட்டுவதில் குறைவான செயல்திறன் கொண்ட பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை அணிந்தால், அது முகக்கவசம் அணியாமல் இருப்பதை விட ஆபத்தானது.
* ஒரு முகக்கவசம் 10 மைக்ரோமீட்டர்களை விட பெரிய துகள்களிலிருந்து மேல் சுவாசப்பாதையை சிறந்த முறையில் பாதுகாக்கிறது (ஒரு மைக்ரோமீட்டர், மைக்ரான் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு மீட்டரில் மில்லியனில் ஒரு பகுதி).
* ஒரு முகக்கவசம் 10 மைக்ரோமீட்டர்களுக்கும் குறைவான துகள்களிலிருந்து முகம் மற்றும் நுரையீரலைப் பாதுகாக்கிறது.
இந்த கண்டுபிடிப்புகள் 3 மடிப்பு அறுவைசிகிச்சை முகக்கவசத்தை அணிந்த ஒரு நபரின் கணக்கீட்டு மாதிரியைப் பயன்படுத்தி உருவகப்படுத்துதல்களிலிருந்து பெறப்பட்டன. பின்னர், முகமூடி மூலம் துகள்களைக் கண்காணிக்க எண்ணியல் முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
பயன்படுத்திய முகக்கவசம் vs முகக்கவசம் இல்லாமை
துகள்களை வடிகட்டுவதில் ஒரு முகக்கவசத்தின் செயல்திறனானது புதிய மற்றும் பழைய முகக்கவசங்களுக்கு இடையில் பெரிதும் மாறுபடும். ஒரு புதிய அறுவை சிகிச்சை முகக்கவசம் 65% வரை வடிகட்டுதல் செயல்திறனைக் கொண்டுள்ளது என்பதை ஆய்வில் காண்பித்தது. இது பல முறை பயன்படுத்திய பிறகு 25% ஆகக் குறையும்.
லோவலில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ பொறியாளரும் இந்த ஆய்வின் ஆசிரியருமான ஜின்க்சியாங் ஜி, முகக்கவசம் அணிந்துகொண்டு இருக்கும்போதும் முகக்கவசம் அணியாமல் இருக்கும்போதும் முகத்தைச் சுற்றி காற்றோட்டம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதை விளக்கினார்.
“முகக்கவசம் இல்லாமல், காற்று ஒரு குறுகிய பகுதி வழியாக தொடர்ந்து வாய் மற்றும் மூக்கில் நுழைகிறது. முகக்கவசம் அணிந்திருக்கும்போது முகம் முழுவதும் காற்று ஓட்டம் வாய் / மூக்குக்கு அருகில் வருகிறது” என்று ஜின்க்சியாங் ஜி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.
மேலும், நீங்கள் முகக்கவசம் அணிந்திருக்கும்போது முகத்தைச் சுற்றியுள்ள காற்றோட்டம் மெதுவாக இருக்கும். “முகக்கவசம் காற்றோட்டத்தை வெகுவாகக் குறைத்து முழு முகக்கவசத்தின் மேற்பரப்பிலும் நீர்த்துளிகள் பரவுகிறது . மெதுவான காற்றோட்டம் மூக்குக்குள் நீர்த்துளிகளை உள்ளிழுக்க உதவுகிறது” என்று ஜின்க்சியாங் ஜி கூறினார்.
நீங்கள் உள்ளிழுக்கும் நீர்த்துளிகளின் அளவில் அவற்றில் எத்தனை முகக்கவசத்தை கடக்க முடிகிறது என்பதைப் பொறுத்து - அது வடிகட்டுதல் செயல்திறனை முக்கியமாக்குகிறது.
“இந்த ஆய்வின் முக்கிய கண்டுபிடிப்பு என்னவென்றால், குறைவான வடிகட்டுதல் திறன் கொண்ட ஒரு பழைய முகக்கவசம் நன்றாக இருக்காது… முகக்கவசத்தின் செயல்திறன் 30%க்கும் கீழே குறையும்போது (2-3 முறை பயன்படுத்திய பிறகு) முகக்கவசம் இல்லாமல் இருக்கும்போதைவிட சாதகமான காற்றோட்டங்களால் அதிக நீர்த்துளிகளை மூக்கில் உள்ளிழுக்க முடியும். இதனால் ‘பழைய முகக்கவசம்’ மேல் சுவாசப் பாதையில் சிறிய துகள்களிடமிருந்து ஒப்பீட்டளவில் மோசமான பாதுகாப்பை வழங்குகிறது” என்று ஜின்க்சியாங் ஜி கூறினார்.
மூக்கு மற்றும் நுரையீரல்
ஒரு நல்ல திறன்மிக்க முகக்கவசம் 1-10 மைக்ரோமீட்டர் அளவிலான துகள்கள் நுரையீரலில் படிவதை 3 மடங்கு குறைக்கலாம். மேல் சுவாசப்பாதையில் 65% செயல்திறன் உள்ள முகக்கவசம் 1–3 மைக்ரோமீட்டர் அளவைத் தவிர அனைத்து அளவு துகள் படிவுகளையும் குறைக்கிறது.
“நம்முடைய மூக்குகள் வடிகட்டுபவைகளாகவும் செயல்படுகின்றன” என்று ஜின்க்சியாங் ஜி விளக்கினார். “முகக்கவசம் இல்லாமல், மூக்கு அனைத்து பெரிய துகள்களையும் வடிகட்டும். சிறிய துகள்கள் மட்டுமே நுரையீரலுக்குள் நுழைய அனுமதிக்கும். முககவசம் அணியும்போது, முகக்கவசம் கிட்டத்தட்ட எல்லா பெரிய துகள்களையும் தடுக்கும். இதனால், மூக்கை பெரிய துகள்களிலிருந்து காப்பாற்றும். மெதுவான ஓட்ட வேகம் இப்போது அதிக சிறிய துகள்கள் மூக்கில் தேங்க வைக்கிறது, இதனால் நுரையீரலை சிறிய துகள்களிடம் இருந்து காப்பாற்றுகிறது.” என்று கூறினார்.
முகக்கவசத்தின் மடிப்புகளும் துகள்களும்
துகள்கள் முகக்கவசத்துக்குள் நுழைந்தவுடன் அவை அதிக அடர்த்தி உள்ள (அல்லது மடிப்புகளில்) தங்குகின்றன. ஆய்வில் மடிப்புகளில் அதிக வேகத்தில் ஓடுவது கண்டறியப்பட்டது,
“அதிகமான நீர்த்துளிகள் மடிப்புகளைக் (அல்லது ப்ளீட்ஸ்) கடந்து சென்றன. சற்று அதிக வேகத்தையும் கொண்டுள்ளன. (அதாவது, 10 செ.மீ / வி). கூடுதலாக, மடிப்புகள் வழியாக காற்றோட்டங்கள் மூக்கை நோக்கி அதிகமாக செல்லக்கூடியவை. இது சற்று வேகமாக செல்லும் ஓட்டங்களுக்கு அதிக அளவில் நீர்துளிகளை மூக்கு உள்ளிழுக்க வழிவகுக்கிறது” என்று ஜின்க்சியாங் ஜி கூறினார்.
முகக்கவசம் அணிவது எப்போதும் முகக்கவசம் அணியாமல் இருப்பதை விட சிறந்தது என்ற நம்பிக்கையைப் பற்றி கண்டுபிடிப்புகள் இருமுறை சிந்திக்க வைக்கின்றன. “முகக்கவசம் அணிந்தவர் மற்றவர்களைப் பாதுகாப்பது உண்மைதான்; அது பெரிய நீர்த்துளிகளில் இருந்து தற்காப்புக்காகவும் இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், இது சிறிய துளிகளிடமிருந்து (பி.எம் .2.5) தற்பாதுகாப்பதில் எப்போதும் உண்மை இல்லை. குறைவான வடிகட்டுதல் திறன் கொண்ட பயன்படுத்தப்பட்ட முகக்கவசத்தை அணிவது அணிபவருக்கு அதிக ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும்.” ஜின்க்சியாங் ஜி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.