காலநிலை மாற்றங்களுக்கு எதிரான போரை துவங்கிய 16 வயது சிறுமி... தலைவர்களின் மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்துவாரா?

காலநிலை மாற்றத்தால் பாதிப்புகளை சந்திக்க இருக்கும் வருங்கால சந்ததிகளின் பிரதிநிதியாக தன்னுடைய குரலை பதிவு செய்துள்ளார் கிரேட்டா.

Amitabh Sinha

environmental activist Greta Thunberg speech at UN climate conference : ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்மில் 9வது படிக்கும் மாணவியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமல், தன்னுடைய கேள்விகளுக்கு விடை தேடிக் கொண்டு அட்லாண்டிக்கை கடந்து, காலநிலை மாற்றம் குறித்து கேள்வி எழுப்பி வருகிறார் கிரேட்டா தன்பர்க். சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இவர் எழுப்பிய கேள்விகள் உலக தலைவர்களின் தலையை கீழிறக்கியது என்று தான் கூற வேண்டும்.

திங்கள் கிழமையன்று ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் பேசினார் கிரேட்டா தன்பெர்க். உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். டெட் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கியுள்ளார். உலகின் எண்ணற்ற, புகழ்மிக்க ஊடகங்களின் ஆசிரியர்களால் பேட்டி காணப்பட்டுள்ளார். இவருக்கென மிகவும் டீட்டெய்லான விக்கிப்பீடியா பேஜ் இருக்கிறது. இந்த வருடத்தின் துவக்கித்தில் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரையில் இவருடைய பெயர் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

யார் இவர்?

இவருடைய தந்தை ஒரு நடிகர். தாய் ஒரு பாடகி. ஸ்வீடன் நாட்டு பாராளுமன்றத்தின் வெளிப்புறத்தில் ஒற்றை ஆளாக அமர்ந்து காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்று குரல் கொடுத்தவர். இவருடைய வயதில் ஸ்விடனில் அனைவரும் கட்டாயமாக கல்வி கற்க பள்ளி செல்ல வேண்டும். ஆனால் விதிமுறைகளை மீறி இவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

8 வயதில் இருந்தே காலநிலை மாற்றங்கள் குறித்து கற்றும் கேட்டும் அறிந்து வந்தார் கிரேட்டா. ஆனால் இந்த மாற்றங்களை தடுக்க யாரும் ஏன் முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதும் அவருடைய கேள்வியாக இருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் ஸ்வீடன் நாட்டு நாளிதழ் ஒன்று நடத்திய கட்டுரைப் போட்டியில் பங்கேற்று வெற்றியடைந்தார். அவரை சில சமூக ஆர்வலர்கள் தொடர்பு கொண்டு பேசினர். அவர்களில் ஒருவர் கொடுத்த பரிந்துரையின் படியே பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

பள்ளியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடும் வழியை நான் தேர்ந்தெடுத்தேன். ஆனால் என்னுடன் யாரும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் தான் ஒற்றை ஆளாக புறக்கணிப்பு போராட்டத்தில் நான் ஈடுபடத்துவங்கினேன் என்று இந்த வருடம் பிப்ரவரி மாதம் தன்னுடைய முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கிரேட்டா தன்பெர்க்.

ஸ்வீடன் பாராளுமன்றத்தின் முன்பு தனி ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரின் பார்வையும் கிரேட்டாவின் மீதும், கிரேட்டா வைக்கும் கோரிக்கைகள் மீதும் விழுந்தது. காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் பலதரப்பட்ட அரசு சாரா இயக்கங்கள் இவருடைய போராட்டத்திற்கு ஆதரவாக பக்கபலமாக உடன் இருந்தனர். கடந்த ஆண்டு போலாந்து நாட்டில் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்டு தன்னுடைய உரையை ஆற்றினார் கிரேட்டா.

இந்த உலகிற்கு என்ன சொல்ல வருகிறார் கிரேட்டா?

ஏற்கனவே இந்த உலகம் அறியாத ஒன்றை அவர் மற்றவர்களுக்கு அறிப்படுத்தவில்லை. காலநிலை மாற்றத்தால் பெரும் பாதிப்புகளை சந்திக்க இருக்கும் வருங்கால சந்ததிகளின் பிரதிநிதியாக மக்கள் மத்தியில் தன்னுடைய குரலை பதிவு செய்துள்ளார் கிரேட்டா. அவருடைய ஒவ்வொரு உரையும் தீர்க்கமான தேவைகளையும், முன்னெடுப்புகளை, கோரிக்கைகளையும் உலகத் தலைவர்களிடம் வைக்கிறது. தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப் புகைகளை கட்டுப்படுத்த வேண்டும். காலநிலை மாற்றம் என்பது வெள்ளை அல்லது கறுமை என இரண்டுக்கும் இடைப்பட்ட பிரச்சனையாக இருக்கிறது. பசுமையக வாயுக்களை வெளியிடுவதை உடனடியாக தடுத்தே ஆகவேண்டும் என்று சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார் கிரேட்டா.

என்.ஜி.ஓக்களின் ஆதரவுடன் உலக அரங்கில் அனைவருக்கும், குறிப்பாக அவர் வயது மாணவ மாணவியர்களுக்கும் தன்னால் இயன்ற அளவு உலகம் சந்திக்க இருக்கும் பிரச்சனையை கூறியுள்ளார் கிரேட்டா. சில மாணவர்கள் இவருக்கு ஆதரவாக பள்ளியை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மேலும் படிக்க : காடுகளில் இருந்து வெளியேற்றப்படும் காடர்கள்.. இவர்களின் எதிர்காலம் என்ன?

இல்லாத எதிர்காலம் குறித்து நான் ஏன் படிக்க வேண்டும். அந்த காலத்தைப் நினைத்து கவலைப்படவும் யாரும் இல்லை, அதை பாதுகாக்கவும் யாரும் இல்லை. இந்த சமூகத்திற்கும் அரசியல் தலைவர்களுக்கும் கற்றுக் கொடுத்த அறிவியல் பயனற்று போன பின்பு அதே அறிவியலை நான் கற்றுக் கொள்வதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பியவர் கிரேட்டா. இவரின் மாபெரும் இம்முயற்சி மக்கள் மத்தியில் சென்று சேருமா? அரசியல் தலைவர்கள் இவரின் வேண்டுகோள்களை கருத்தில் கொண்டு அரசியல் கொள்கைகளில் மாற்றங்களை உருவாக்கி, எதிர்கால சந்ததியினருக்கு தேவையான பாதுகாப்பான, சுகாதாரமான சமூகத்தையும், உலகத்தையும் உருவாக்கித் தருவார்களா என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close