/indian-express-tamil/media/media_files/2025/03/02/WhpUys8ZeF8KwlmWSmUw.jpg)
மூன்று மொழிக் கொள்கையை பயனற்ற தாக்கியது தமிழ்நாடு அல்ல, இந்தி பேசும் மாநிலங்களே. (படம்: சி.ஆர். சசிகுமார்)
கட்டுரை: யோகேந்திரா யாதவ் YOGENDRA YADAV
மும்மொழிக் கொள்கையைப் (Three Language Formula - TLF) பற்றிய அரசியல் விவாதத்தின் மற்றொரு சுற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக, நமது கொள்கை வகுப்பாளர்கள் மூன்று மொழி, இரண்டு மொழிக் கொள்கைகளின் தகுதிப்பாட்டைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் போது, நம் நாடு நடைமுறையில் ஆங்கிலம் என்ற ஒரு மொழிக் கொள்கைக்குள் தூக்க நடையில் நுழைந்து கொண்டிருக்கிறது, இது பொது அறிவுக்கும், கல்வி நிபுணத்துவத் திற்கும் எதிரானது. இதைவிட மோசமானது என்னவென்றால், அரசு ஆதரவுடன் பன்மொழியிலிருந்து ஒருமொழிக்கு வந்த அறிவாற்றல், பண்பாடு மற்றும் நாகரீகப் பின்னடைவு, நவீன வளர்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
பள்ளி மாணவர்களுக்கு மூன்று மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அதிகாரப்பூர்வ பெயர் மும்மொழிக் கொள்கை ஆகும். 1968-ல் ஏற்பட்ட சமரசத்தின்படி "இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் மூன்றாவதாக நவீன இந்திய மொழி (முன்னுரிமை தென்னிந்திய மொழிகளில் ஒன்று) என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி" கற்பிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது. தென்னிந்திய மாநிலங்களில் ஏற்பட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து மொழிக் கொள்கையை வகுக்க நாட்டின் முதலமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்தபோது இந்த சமரசம் எட்டப்பட்டது. 1948-49ல் ராதாகிருஷ்ணன் கமிஷனால் முதன்முதலில் முன்மொழியப்பட்டு முதல் கல்வி ஆணையமான கோத்தாரி கமிஷனால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1960 மற்றும் 1980களில் காங்கிரஸ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கல்விக் கொள்கைகளில் இவை உள்ளடக்கப்பட்டது.
மும்மொழிக் கொள்கைக்கான அடிப்படைப் கோட்பாடு என்ன என்பதைப் பார்ப்போம்: இந்தியா என்பது இந்தியர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள் என்பது மட்டுமல்ல, இந்தியா என்பது நம் நாட்டில் உள்ள பெரும்பாலான சமூகங்களும், தனிநபர்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைப் பேசும் பன்மொழி நாடாகும். எனவே, நமது கல்விமுறையானது இந்திய அடையாளத்தை உருவாக்குகின்ற பன்மொழிப் புலமையை நிலைநாட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அறிவாற்றல் நெகிழ்வுத்தன்மை, மாறுபட்ட சிந்தனை, கல்விசார் சாதனை, படைப்பாற்றல் மற்றும் சமூக சகிப்புத்தன்மை ஆகியவற்றிற்கு பன்மொழிக் கல்வி உதவுகிறது என்பதைக் காட்டுவதற்கு இப்போது சான்றுகள் உள்ளன. மும்மொழிக் கொள்கை என்பது பன்மொழிக் கல்வியைச் செயல்படுத்துவதற்கான ஒரு நல்ல வழியாகும்.
டி.பி. பட்டநாயக் மற்றும் ரமாகாந்த் அக்னிஹோத்ரி உள்ளிட்ட மொழியியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒரு நிபுணர் குழு, "மூன்று மொழிக் கொள்கை என்பது ஒரு குறிக்கோள் அல்லது மொழி கற்பித்தலைக் கட்டுப்படுத்தும் காரணி மட்டும் அல்ல, மாறாக வானளாவிய அறிவின் விரிவாக்கத்திற்கும் மற்றும் நாட்டு மக்களை உணர்ச்சி பூர்வமாக ஒருங்கிணைக்கும் வழிகளை ஆராய்வதற்கான வசதியான ஒரு ஏவுதளமாகும்" என்று முடிவு செய்தனர். ("இந்திய மொழிகள் கற்பித்தல் குறித்த தேசியக் குழுவின் நிலை அறிக்கை', NCERT-ன் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு, 2005). குழந்தைகள் படிப்படியாக மூன்று மொழிகளுக்கு மேல் கற்க முடியும் என்றும், கூடுதல் மொழிகளைக் கற்றுக் கொள்வதால் உண்மையில் முதல் மற்றும் இரண்டாம் மொழிகளைக் கற்க இது உதவுகின்றது என்றும், இந்தக் குழு பரிந்துரைத்தது.
அப்புறம் என்ன விவாதம்? தேசியக் கல்விக் கொள்கைக்கு (NEP) இணங்காததால், மத்திய அரசு, தமிழகத்திற்கு சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் தரவேண்டிய மானியத்தை நிறுத்தி வைத்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கட்சி மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறி இந்த உத்தரவை ஏற்க மறுத்து விட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை மட்டுமே தமிழக அரசு எப்போதும் கற்பித்துள்ளது. மூன்றாவது மொழியை வலியுறுத்துவது, ஹிந்தியை திணிப்பதற்கான சாக்குப்போக்கு என்கிறார் ஸ்டாலின். தமிழக அரசு அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். அரசியல் சாசனத்தில் இதற்குத் தொடர்புடைய விதியை சுட்டிக் காட்டுமாறு தர்மேந்திர பிரதானை ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் உணர்ச்சிகரமான விளைவுகள் மற்றும் அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கும் போது இது பற்றிய மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
சந்தேகத்திற்கு இடமின்றி, தி.மு.க அரசு கோபப்படவும் ஐயப்படவும் நல்ல காரணங்கள் உள்ளன. கூட்டாட்சித் தத்துவத்தை நரேந்திர மோடி அரசு மீண்டும் மீண்டும் மீறியுள்ளது. தமிழக கவர்னர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக திமிரான முறையில் செயல்படுகிறார். கல்வித்துறையில் மாநில அரசுகளின் அதிகாரங்களை மோடி அரசு மீண்டும் மீண்டும் ஆக்கிரமித்துள்ளது, துணைவேந்தர் நியமனக் கொள்கை சமீபத்திய உதாரணமாகும். அதுமட்டுமல்லாமல், மாநில அரசுகள் கல்விக் கொள்கைகளை ஏற்க வேண்டும் என்று, அதுவும் மொழி தேர்வு போன்ற முக்கியமான விஷயங்களில் மத்திய அரசின் நிதியை ஒரு அடிகோலாகப் பயன்படுத்த முடியாது.
இது இப்படி இருக்க, தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்ற ஒன்று மட்டுமல்லாமல் மேலும் பல சிக்கல்கள் உள்ளன. உண்மை என்னவென்றால், முதல் மற்றும் இரண்டாவது கல்விக் கொள்கை ஆவணங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த மும்மொழிக் கொள்கையையே தேசிய கல்விக் கொள்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதில் வேறுபாடு என்ன என்றால், 2020 தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தியைக் குறிப்பிடுவதைத் தவிர்த்ததன் மூலம் உண்மையில் கொள்கையை தளர்த்தி இருக்கிறது. இப்போது மும்மொழிக் கொள்கையானது, மாநிலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதேனும் மூன்று மொழிகள் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு "இந்தியப் பூர்வீக" மொழிகளாக இருக்க வேண்டும். மேலும் இது சமஸ்கிருதம் மற்றும் தமிழ் போன்ற செம்மொழிகளை இரண்டு இந்திய மொழிகளுக்குள் கணக்கிட அனுமதிக்கிறது. எனவே, தமிழ்நாடு விரும்பினால், தமிழ் மற்றும் மலையாளம் அல்லது தெலுங்கு அல்லது கன்னடம், மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பிக்கலாம். இது புதிய மும்மொழிக் கொள்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழ், செம்மொழி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்பிக்க முடியும். எனவே, இந்தித் திணிப்புக்கு அஞ்சாமல் தமிழகம் இனி மும்மொழிக் கொள்கையை ஏற்பது பற்றிச் சிந்திக்கலாம்.
எனவே, இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக செயல்படுத்தப்படும் பட்சத்தில், தமிழக முதல்வர் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதற்குப் பதிலாக, அதை ஏற்க முன்வரலாம். உண்மையில் அசல் விதிமுறைகளில் எதிர்பார்க்கப்பட்டது போன்று, இந்தி பேசும் அனைத்து மாநிலங்களும் தமிழ் அல்லது வேறு ஏதேனும் தென்னிந்திய மொழியை "மூன்றாவது மொழியாக" ஏற்றுக்கொண்டால், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஹிந்தியை அறிமுகப்படுத்த ஸ்டாலின் முன்வரலாம். இல்லையெனில், ஹிந்தி பேசும் மாநிலங்கள் சமஸ்கிருதத்தை மூன்றாம் மொழியாக அறிமுகப்படுத்தியது போல், ஆங்கிலம் மற்றும் தமிழ் தவிர, செம்மொழி தமிழை மூன்றாம் மொழியாக தமிழக அரசு அறிமுகப்படுத்தலாம்.
இத்தகைய நடவடிக்கை மூலம், மூன்று மொழிக் கொள்கையை பயனற்ற தாக்கியது தமிழ்நாடு அல்ல, இந்தி பேசும் மாநிலங்களே என்ற எளிய உண்மையை எடுத்துக் காட்ட முடியும். இந்தி பேசும் மாநிலங்கள் மற்றொரு இந்திய மொழியை, குறிப்பாக தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்பிக்க வேண்டும் என்பது முந்தைய ஒருமித்த கருத்து. ஆரம்பத்தில், உ.பி.யில் தமிழ், ஹரியானாவில் தெலுங்கு போன்றவற்றைக் கற்பிக்க சில திட்டங்கள் இருந்தன. ஆனால் விரைவில் இந்தி மாநிலங்கள் குறுக்கு வழியைக் கண்டுபிடித்தன. சமஸ்கிருதம், அல்லது மாநில மொழியின் அடிப்படை கற்றல், "மூன்றாவது மொழி" என முன்வைக்கப்பட்டது, இதனால் வேறு எந்த எழுத்து அல்லது மொழியைக் கற்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. எனவே, மும்மொழிக் கொள்கை ஒரு சமமற்ற பேரமாக மாறியது: இந்தி பேசாதவர்கள் இந்தி மொழியைக் கற்க வேண்டும் என்றும், இந்தி பேசுபவர்கள் ஈடு கொடுக்கத் தேவையில்லை என்றும் ஆகிவிட்டது. இதனாலேயே, மும்மொழிக் கொள்கை மீது அரசியல் வெறுப்பு ஏற்பட்டது. இதை வீண்பேச்சு என்று அழைக்க வேண்டிய நேரம் இது.
மத்திய அரசு மும்மொழிக் கொள்கை மீதும், இந்தியை திணிக்கக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தால், நிதி வழங்குவதற்கு மும்மொழிக் கொள்கையை ஒரு நிபந்தனையாக விதிக்கக்கூடாது. அதற்குப் பதிலாக 1968-ல் கடைப்பிடிக்கப்பட்ட அதே வழியில் முதலமைச்சர்களின் கூட்டத்தை கூட்டி தேசிய ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். மூன்றாம் மொழிக்கு மாற்றாக சமஸ்கிருதத்தைக் கற்பிக்க ஹிந்தி பேசும் மாநிலங்களை அனுமதிக்கக் கூடாது. இது மொழி மீதான சோர்வடைந்து போன அரசியல் விவாதத்தை மீண்டும் திறந்து, ஹிந்தி தவிர்த்து பன்மொழி மீது கவனம் செலுத்த உதவும்.
நமது கல்விமுறையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள இது நமது அரசியல்வாதிகளுக்கு ஒரு புதிய முயற்சியாக இருக்கும். ஆங்கில மொழி ஆதிக்கத்தின் அடர்த்தியான அதிகார வலையிலிருந்து விடுபடுவதை விட, அடக்குமுறை மற்றும் சர்வாதிகார அரசை எதிர்ப்பது அல்லது தொழில்துறை-இராணுவ வளாகத்தை எதிர்த்து நிற்பது எளிதாக இருக்கலாம்.
கட்டுரையாளர் ஸ்வராஜ் இந்தியா உறுப்பினராகவும், பாரத் ஜோடோ அபியானின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
மொழிபெயர்ப்பு: எம். கோபால்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.