கண்ணாடி அணிவதனால் நாவல் கொரோனா வைரஸிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமா? ஓரளவு வரை முடியும்; ஆனால் அவை சில வரம்புகளுடன் வருகின்றன எனச் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதனைச் சீன ஆராய்ச்சியாளர்கள் JAMA கண் மருத்துவத்தில் வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் ஆராய்ச்சி இந்த ஆலோசனையை எவ்வாறு அளிக்கிறது?
ஹூபேயில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 155 ஆண்கள் மற்றும் 121 பெண்கள் என 276 நோயாளிகளைக் கொண்ட ஓர் சிறிய குழு இந்த ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டனர். அவர்களில் எத்தனை பேர் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாகக் கண்ணாடி அணிந்துள்ளனர் என்று முதலில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 16 பேர் (அதாவது நோயாளிகளில் 6 சதவிகிதத்திற்கும் குறைவானவர்கள்) கண்ணாடி அணிந்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் அனைவருக்கும் கிட்டப்பார்வை (மயோபியா) இருக்கிறது எனவும் கண்டறிந்தனர். பிறகு, ஆராய்ச்சியாளர்கள் இதனை ஹூபே மாகாணத்தில் கிட்டப்பார்வையினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்துடன் ஒப்பிட்டனர். இது முந்தைய ஆய்வின் அடிப்படையில் 31.5 சதவிகிதமாக இருந்தது. ஒட்டுமொத்த மக்கள்தொகையில் கிட்டப்பார்வையினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் மயோபியா கொண்ட கோவிட்-19 நோயாளிகளின் விகிதத்தை விட அதிகமாக இருந்ததால், தினசரி கண்ணாடி அணிவது கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்தனர்.
இந்த ஆராய்ச்சி முடிவு எவ்வளவு முக்கியமானது?
ஆராய்ச்சியாளர்கள் அதன் வரம்புகளைக் குறிப்பிட்டனர்:
* இது மிகவும் குறைவான மாதிரி எண்ணிக்கைகொண்ட ஒற்றை மைய ஆய்வு.
* கண்ணாடி அணியும் மக்களின் விகிதம் முந்தைய தரவுகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டதே தவிர, தற்போதைய உள்ளூர் மக்களிடமிருந்து கணக்கிடப்படவில்லை.
* முந்தைய ஆய்வுகளில் பெறப்பட்ட கிட்டப்பார்வையினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதத்தில் கண்ணாடி அணியாமல் மயோபியாவினால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவார்கள்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (Johns Hopkins University School of Medicine) பணிபுரியும் டாக்டர்.லிசா L மரகாகிஸ் (Lisa L Maragakis) என்ற தொற்றுநோயியல் நிபுணரை இந்த ஆய்வு குறித்து வர்ணனை எழுத JAMA அழைத்தது. அவர் கொரோனா பரவுதலைத் தடுக்க மக்கள் கண்ணாடி அல்லது பிற வகையான கண் பாதுகாப்பு சாதனத்தைப் பொதுவெளியில் செல்லும்போது அணிய வேண்டும் என்று எச்சரிக்கையுடன் அறிவுறுத்தினார்.
இதிலிருக்கும் சிக்கல்கள் யாவை?
டாக்டர் மரகாகிஸ் ஆராய்ச்சியாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட வரம்புகளை விரிவுபடுத்தி, ஒரே ஒரு ஆய்விலிருந்து அதன் காரணத்தை ஊகிப்பதை எதிர்த்து எச்சரித்தார். “கண்ணாடிகளை அணிவது கொரோனாவின் அபாயத்துடன் தொடர்புடைய மற்றொரு அறியப்படாத மற்றும் அளவிடப்படாத காரணியுடன் தொடர்பாகலாம்” என இந்தக் கண்டுபிடிப்புகளுக்கு மாற்று விளக்கம் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், நோய்த்தொற்று பரவுதலின் ஆரம்பக்காலத்தில்தான் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த சமயத்தில் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் கை கழுவுதல் அல்லது உடல் ரீதியான தொலைவு பற்றிய தரவு எதுவுமில்லை.
கோவிட் -19 நோயாளிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையில் கண்ணாடிகள் அணிவதில் காணப்பட்ட வேறுபாடு தற்செயலாக மட்டும் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இது எந்த ஒரு காரண உறவையும் குறிக்கவில்லை என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
காட்டப்பட்ட தரவுக்கும் மேல், கண்ணாடியை கொரோனாவுடன் எவ்வாறு இணைக்க முடியும்?
உலகளவில் இந்த நோய்த்தொற்று தொடங்கியதிலிருந்து, கோவிட் 19-ஐ ஏற்படுத்தும் SARS-CoV-2 வைரஸுக்கான ஓர் சாத்திய நுழைவாகக் கண்கள் இருக்கிறதா என்று பெரும்பாலும் ஊகிக்கப்படுகிறது. இருப்பினும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் கலவையான முடிவுகளையே தருகின்றன. ஒருபுறம், அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவன இணையதளத்தில், கண்ணின் சில பகுதிகளில் உள்ள புரத ACE2-ன் வெளிப்பாட்டைப் பற்றிக்கூறி(வைரஸ் மனித உயிரணுக்குள் நுழைய ACE2-ஐப் பயன்படுத்துகிறது) வெளியிடப்பட்டது. மறுபுறம், ஜர்னல் ஆஃப் மெடிக்கல் வைராலஜி (Journal of Medical Virology) ஆய்வில், ACE2-ன் குறிப்பிடத்தக்க வெளிப்பாடு conjunctival மாதிரிகளில் இல்லை எனக் கூறப்படுகிறது.
கண்ணாடி, முகக் கவசம் போன்றவை சுகாதாரப் பணியாளர்கள் பயன்படுத்தும் PPE-ன் (personal protective equipment – தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள்) ஓர் முக்கிய பகுதி என டாக்டர்.மரகாக்கிஸ் தன் வர்ணனையில் குறிப்பிடுகிறார். ஆனால், கோவிட்-19 குறித்த பொது சுகாதார வழிகாட்டுதல்கள் பொது மக்களுக்குக் கண்ணாடிகளைப் பரிந்துரைக்கவில்லை.
கொரோனா தாக்கத்தைத் தடுக்க மக்கள் பொதுவெளியில் கண்ணாடி அணிய வேண்டும் என்ற முடிவில் இருக்கும் எதிர்பாராத விளைவுகள் குறித்து டாக்டர் மரகாகிஸ் எச்சரிக்கிறார். “கண்ணாடிகள், முகக் கவசம் அல்லது கண்கண்ணாடிகள் அணிவது ஒருவரின் கண்களை அடிக்கடி தொடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும். அதிலும், அதனை மாற்றும்போதும், சரிசெய்யும்போதும் அவற்றை மாசுபடுத்துவதற்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக அந்த நபர் அவற்றை அணியப் பழக்கமில்லை என்றால் ஆபத்துகள் இன்னும் அதிகம்” எனக் குறிப்பிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“