இந்த மாத தொடக்கத்தில் மிகவும் பழமைவாத சிந்தனைகள் உடைய நாடு என்று கருதப்படும் சவுதி அரேபியாவில், பெண்கள் தங்களுக்கான சம உரிமைப் போராட்த்தில் கணிசாமான வெற்றி பெற்றுள்ளனர் என்றே கூறலாம்.
இனி சவுதியில் ஒரு ஆண் பாதுகாவலரிடமிருந்து அனுமதி பெறாமல் பெண் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பையும் , பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழ்நிலையையும், தாங்களாகவே முன்வந்து கல்யாணத்தையும், விவகாரத்தையும் பதிவு செய்யும் உரிமையும், சவுதி பெண்கள் பெற்றுள்ளனர்.
உலகில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இயற்கையாகக் கருதப்படும் இந்த நடவடிக்கைகள் இன்று வரை சவுதி அரேபியாவில் சீர்திருத்தப்பட வேண்டியவைகள் ஆகவே இருந்தன. சவுதி அரச ஆணைகள் அதிகாரப் பூர்வமாக வெளியிடும் உம் அல்-குரா என்ற தினசரி நாளிதழில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இருந்தாலும், விமர்சகர்கள் மற்றும் மூன்றாம் பார்வையாளர்கள் இந்த அறிவிப்பு, சவுதி அரசர் ஜமால் கஷோகி கொலை நிகழ்வில் ஏற்பட்ட மனித உரிமை கேள்விகளில் இருந்து தப்பிப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும் செய்ததே தவிர, பெண் விடுதலை இந்த அரசின் சித்தாங்களில் இல்லாத ஒன்று என்று தெரிவித்துள்ளது.
சொல்லப்பட்டுள்ள பெண் சுதந்திரங்கள்:
புதிய ஆரசாணையின் கீழ், சவுதி பெண்கள் தங்கள் ஆண் பாதுகாவலர்களிடமிருந்து ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியும். 21 வயதை எட்டியதும் அவர்களால் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த, சீர்திருத்தங்களால் பயணிக்கும் சுதந்திரம் சவூதியில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் ஒன்றாக்கப்பட்டுள்ளன .
பெண்கள் இப்போது தங்கள் திருமணம், விவாகரத்து மற்றும் தங்கள் குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய முடியும். அத்துடன், தன்னிச்சையாக குடும்ப ஆவணங்களையும் பெற முடியும். பெண்கள் கணவருடன் ஒரு வீட்டின் இணைத் தலைவராக பதிவு செய்யும் வாய்ப்பும் தற்போது கிடைத்திருப்பதால், இது சவுதி தேசிய அடையாள அட்டைகள் அவர்கள் பெறுவதை எளிதாக்கும்.
இதுவரை, சவுதியில் ஒரு ஆண் மட்டுமே குழந்தையின் சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்க முடியும். ஆனால், இந்த விதிமுறையை மாற்றி இனி பெண்களும் தங்கள் குழந்தைகளின் சட்டப்பூர்வ பாதுகாவலராக முடியம் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளது சவுதி அரசு.
வேலை வாய்ப்புகள்
மேலும், இந்த சீர்திருத்தங்கள் சவுதியில் யாரும் இனி பாலினம், இயலாமை அல்லது வயது அடிப்படையில் வேலை வாய்ப்பு மறுக்கக் கூடாது என்ற முக்கிய கட்டளைகளையும் உள்ளடக்கி உள்ளன.
சமிபகாலமாகவே, சவுதி அரேபியாவில் பெண்கள் வேலைக்கு செல்வதற்காக பல முயற்சிகள் எடுத்திருப்பதை நாம் அறிந்த ஒன்றே. உதாரணமாக,ஆடைக் குறியீட்டிலிருந்து வேலை செல்லும் பெண்களுக்கு சிறிது தளர்வு எற்ப்படுதியதும், பெண்கள் மட்டும் வேலைசெய்யும் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்ததுமே இதற்க்கு சான்று.
இதனால் தான், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களான டி.சி.எஸ் (2013) மற்றும் விப்ரோ (2017) முழுக்க முழுக்க பெண்களால் இயக்கப்படும் வணிக செயல்முறை சேவை (பிபிஎஸ்) மையங்களைத் சவுதியில் திறந்தன.
படிப்படியான முன்னேற்றம்
2012 இல், சவுதி அரேபியா முதல் முறையாக லண்டனில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இரண்டு பெண் பங்கேற்பாளர்களை அனுப்பி வைத்தது.
2015 ல் நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் கவுன்சிலர்களை எதிர்த்து 20 பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், சவுதி அரேபியாவின் மேலாதிக்க அரசியல் அவர்களின் தோற்றம் ஒரு திருப்புமுனையாகவே காணப்பட்டது.
அடுத்த ஆண்டு, 22% ஆக உள்ள வேலைக்கி செல்லும் சவுதி பெண்களின் எண்ணிக்கையை 2030 க்குள் 30% ஆக உயர்த்துவோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
சவுதி நாட்டின் பெண்களுக்கான ஓட்டுநர் தடை 2018 இல் அகற்றப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதே ஆண்டு செப்டம்பரில், ஒரு பெண் தொகுப்பாளர் முதல் முறையாக தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பை வழங்கினார்
2019- ம் ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்காவுக்கான தூதர் பதவியை ஒரு பெண்ணுக்கு அளித்தது அந்நாட்டு அரசு .
‘ஆண் பாதுகாவலர்’ அமைப்பு:
அரபியில் சொல்லப்படும் ‘விலாயா’ அமைப்பு,, குரானின் 4:34 வசனத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இது ஆண்களை பெண்களின் “பாதுகாவலர்கள்” மற்றும் “பராமரிப்பாளர்கள்” என்று விவரிக்கிறது. சவுதி அரேபிய மதகுருமார்கள் இந்த வசனத்தை ஒரு மரபுவழியில் புரிந்துக் கொள்ளப்படத்தால், 'விலாயா’ அமைப்பு என்கிற இந்த 'ஆண் பாதுகாவலர் முறையை' இன்று வரை அந்நாடு கடைப்பிடுத்து வருகிறது.
வாலி பொதுவாக கணவனாகவோ, தந்தையாகவோ அல்லது மகனாகவோ இருக்கலாம். இவர்களின் ஒவ்வொரு முடிவும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளை எடுக்கும் சக்தி கொண்டது என்பதே உண்மை .
போக வேண்டிய தூரம் :
புதிய சீர்திருத்தங்கள் விலாயா அமைப்பை ஓரளவிற்கு அகற்றும் நோக்கத்தோடு கொண்டுவரப்படாலும் , இந்த சீர்திருத்தங்கள் எப்போது நடை முறைப்படுத்தப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. சவூதி அரேபியாவின் சக்திவாய்ந்த பழமைவாத குழுக்கள் இதை கடுமையாக எதிர்ப்பார்கள் என்பதும் உண்மை .
'இந்த அரசாணையில் சொல்லப்பட்டுள்ள சீர்த்திருத்தங்களைத் தாண்டி இன்னும் பெண் சுதந்திரத்தை தடுக்கும் பல விதிகள் நடைமுறையில் தான் உள்ளன. உதாரணமாக, திருமணம் செய்ய , சிறையை விட்டு வெளியேற மற்றும் ஒரு தொழிலைத் தொடங்க ஆண் பாதுகாவலரின் அனுமதி இன்னும் தேவைப்படுகிறது . சவுதி பெண்கள் இன்னும் தங்கள் குழந்தைகளுக்கு குடியுரிமையை விட்டு செல்லமுடியாது.
மேலும் , 2018-ல் சீர்திருத்தங்களுக்காக போராடி வந்த பெண் ஆர்வலர்கள் மீது சவுதி அரேபியா கட்டவிழ்த்து விட்ட வன்முறையை இந்த நாடு மறக்க முடியாது என்பதும் குறிப்பிட்டத் தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.