கால்பந்து உலகக் கோப்பைக்கு இந்தியா தகுதி பெற்ற கதை! ஆனால், நடந்தது என்ன தெரியுமா?

இந்திய அணியின் போட்டிகளை விடுத்து, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வெறித்தனமாக பார்க்கும் இந்திய ரசிகர்கள்!

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என கால்பந்து ஜாம்பவான்களின் தரிசனத்துக்காக இந்திய கால்பந்து ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கின்றனர். இவர்களுக்காகவே, தற்போது நடைபெற்று வரும் ஃபிபா உலகக் கோப்பை தொடரை, இந்திய ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

வடகிழக்கு மாநிலங்கள், கொல்கத்தா, கேரளா ஆகிய பகுதிகளில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். கொல்கத்தாவில் டீக்கடை வைத்திருக்கும் ஷிப் ஷங்கர் பத்ரா என்பவர், ரஷ்யா சென்று தனக்கு பிடித்தமான அணியான அர்ஜென்டினா விளையாடும் போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக, 60 ஆயிரம் ரூபாய் வரை சேர்த்து வைத்துள்ளார். ஆனால், டிராவல் ஏஜென்ட் ரஷ்யா சென்று போட்டியை பார்க்க ஒன்றரை லட்சம் ரூபாய் ஆகும் என்று கூறியதால் இவரது கனவு வீணானது.

நேரில் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், தனது மூன்று மாடி வீட்டிற்கு அர்ஜென்டினா வீரர்கள் அணியும் ஜெர்சியின் கலரை வண்ணமாக பூசி, தன்னுடைய வீட்டை அர்ஜென்டினா அணியாக மாற்றி, தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இதேபோன்று, கேரளா மாநிலம் கொச்சியில் வசிக்கும் தம்பதி தங்களது வீட்டை பிரேசில் நாட்டின் தேசியக்கொடி வண்ணத்திற்கு மாற்றியுள்ளனர். பிரேசிலின் வீடு என்று எழுதப்பட்டு, வீட்டு சுவர்களில் அந்நாட்டு தேசியக் கொடி வண்ணம் பூசப்பட்டுள்ளது. மேலும், சுற்றுச்சுவற்றில் பிரேசில் அணி வீரர்களின் புகைப்படங்கள் தொங்க விடப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்திய ரசிகர்கள், தங்களது கால்பந்து ஹீரோக்களை கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்திய கால்பந்து அணியைப் பற்றி பெரிதாக யாரும் அலட்டிக் கொள்வதாக இல்லை. சமீபத்தில், இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரியின் ட்விட்டர் வேண்டுகோளுக்கு பின்னரே, இந்திய கால்பந்து அணி விளையாடும் போட்டியை காண அதிகளவில் ரசிகர்கள் மைதானம் நோக்கி படையெடுத்தனர். அதற்கு முன்பு வரை வெறும் 1000, 2000 என்ற அளவில் தான் ரசிகர்கள் தலை தெரிந்தது.

இப்படி, இந்திய அணியின் போட்டிகளை விடுத்து, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வெறித்தனமாக பார்க்கும் இந்திய ரசிகர்கள், இந்திய அணியே உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றால், எப்படி கொண்டாடி தீர்த்திருப்பார்கள்.

ஒருமுறை கூட, ஃபிபா உலகக் கோப்பையில் இந்தியா விளையாடியதில்லை. ஆனால், ஒரேயொரு முறை, இந்தியா உலகக் கோப்பைக்கு தகுதிப் பெற்றது. ஆனால், அப்போது என்ன நடந்தது தெரியுமா?

1950ம் ஆண்டு பிரேசிலில் நடந்த நான்காவது உலகக் கோப்பை அது!. அப்போது இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்தது. நான்காவது உலகக் கோப்பையை பிரேசில் நடத்துவது என உறுதியானது. தொடரை நடத்தும் பிரேசிலும், நடப்பு சாம்பியனாக வலம் வந்த இத்தாலியும் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதிப் பெற்றது. மீதமுள்ள 14 அணிகளை தகுதி சுற்று மூலம் தேர்வு செய்ய வேண்டி இருந்தது. இதில் ஆசியாவுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

பல பிரச்சனைகளை காரணமாக காட்டி, பல அணிகள் தகுதிச் சுற்றில் விளையாட மறுத்துவிட்டன. இதில் ஹங்கேரி, செக்கோஸ்லோவேகியா, அர்ஜென்டினா, ஈகுவடார், பெரு, ஆஸ்திரியா, பெல்ஜியம் அணிகள் முக்கியமானவை. அர்ஜென்டினாவை பொறுத்தவரை பிரேசில் கால்பந்து சங்கத்துடன் ஏற்பட்ட மோதல் போக்கால் அங்கு செல்ல மறுத்தது. இதன் காரணமாக சில அணிகளுக்கு தகுதி சுற்றில் ஆடாமலேயே பிரதான சுற்றை எட்டும் அதிர்ஷ்டம் கிட்டியது.

ஆசிய கண்டத்தை பொறுத்தவரை, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பர்மா உள்ளிட்ட அணிகள், தகுதிச் சுற்றில் விளையாட பல்வேறு காரணங்களுக்காக மறுத்துவிட்டன. இதனால், இந்திய கால்பந்து அணி தானாகவே உலகக் கோப்பைக்கு முதல்முறையாக தகுதிப் பெற்றது. அந்த சமயத்தில் இந்தியா ஆசியாவில் சிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கியது.
போட்டி அட்டவணையில் இந்திய அணி, சுவீடன், இத்தாலி, பராகுவே ஆகிய அணிகளுடன் ஒரே குரூப்பில் இடம் பிடித்திருந்தது. இந்தியா தனது முதல் லீக்கில் பராகுவேயுடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அப்போது ஷூ இன்றி உலகக் கோப்பையில் விளையாடக் கூடாது என்ற உத்தரவு போடப்பட்டிருந்தது. ஷூ இன்றி வெறுங்காலுடன் விளையாடுவதற்கு ஃபிபா தடை விதித்ததால் இந்திய அணி உலகக் கோப்பையில் விளையாட தயக்கம் காட்டியது. மேலும் நீண்ட பயணம் என்பதால், செலவுத் தொகையும் அதிகம் என கூறியது.

ஒரு கட்டத்தில் கப்பல் பயணத்திற்குரிய செலவுத் தொகையை ஏற்றுக்கொள்வதாக பிரேசில், இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு உறுதி அளித்தது. இதனால் இந்திய அணி நிச்சயம் இந்த போட்டியில் பங்கேற்கும் என்று கருதிய பிரேசில், வேறு எந்த ஆசிய அணியையும் அழைக்கவில்லை. ஆனால் கடைசி நேரத்தில் உலகக் கோப்பையில் இருந்து இந்தியா பின்வாங்கி விட்டது.

ஷூ மற்றும் பயண தூரம் ஆகிய இவ்விரு காரணங்களால் அன்று உலகக் கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பை இந்தியா புறக்கணித்தது. அப்படியொரு வாய்ப்பை நழுவ விட்ட இந்தியாவுக்கு, அதன் பிறகு ஃபிபா உலகக் கோப்பைக்கு தகுதிப் பெறுவது என்பது எஸ்.வி.சேகரை தமிழக போலீஸ் பிடிப்பது போன்று எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.
இன்று, ஆசிய கோப்பையில் விளையாடுவதற்கு, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா தகுதிப் பெற்றுவிட்டது என்று கூறி மகிழும் நிலையிலேயே இந்திய கால்பந்து அணி உள்ளது.
அந்த உலகக் கோப்பையில் ஆடியிருந்தால், நிச்சயம் இந்திய அணி காலிறுதிக்கோ அல்லது அரையிறுதிக்கோ முன்னேறி இருக்க முடியும் என கூறுகின்றனர், முன்னாள் இந்திய கால்பந்து வீரர்கள்.

ஷூ இல்லாமல் விளையாடிய போதே, இந்திய அணி பிரான்ஸை 1-2 என வெற்றி கண்டிருந்தது. அப்போது இந்திய அணி இருந்த ஃபார்ம் அபாரமானது என கூறுகின்றனர்.

1948ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி ஷூ அணியாமல் தான் விளையாடியது. ஆனால் பின்லாந்தில் நடந்த அதற்கடுத்த ஒலிம்பிக்கில் ஷூ இல்லாமல் கடும் குளிரில் விளையாட முடியாமல் இந்திய அணி தவித்தது. அதன்பிறகே ஷூ அணிவது கட்டாயமாக்கப்பட்டது.

இந்தியா தவறவிட்ட அந்த 1950 உலகக் கோப்பையில் உருகுவே சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close