ஃபிபா உலகக் கோப்பை 2018: இந்த முறையாவது தனது 'Final Destination'-ஐ அடையுமா பெல்ஜியம்?

1986ல் 4வது இடம் பிடித்ததே, பெல்ஜியம் அணியின் ஆகச்சிறந்த செயல்பாடாகும்

ஆசைத் தம்பி

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஜூன் 14ம் தேதி தொடங்கியது. சுமார் ஒருமாத காலம் நடக்கும் இந்த தொடர் ஜூலை 15ம் தேதி முடிகிறது.

தொடக்க போட்டியில் ரஷ்ய அணி, சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக வென்றது. ஆனால், அதன்பிறகு பெரிய அணிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும் படி சிறப்பாக விளையாடவில்லை. அர்ஜென்டினா, பிரேசில், போர்ச்சுகல் உள்ளிட்ட அணிகள் ஆடிய ஆட்டங்கள் டிராவாக, உலக சாம்பியன் ஜெர்மனியோ மெக்சிகோவிடம் தோற்றே போனது.

முதன் முதலாக, இந்த உலகக் கோப்பையில் வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீஸ் (VAR – Video Assistant Referees) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தமுறைப்படி மைதான நடுவர், களத்தில் நடக்கும் சம்பவங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், டிவி நடுவர்களிடம் கேட்டு உறுதிப்படுத்த முடியும். கிட்டத்தட்ட, கிரிக்கெட்டில் Third Umpire போல.. இருப்பினும், இந்த புதிய முறையால் துல்லியமான முடிவை கொடுக்க முடியாது என ஃபிபாவிற்கான நடுவர்களின் தலைவரே எச்சரித்திருந்தார்.

ஆனால், கடந்த 16ம் தேதி நடந்த பிரான்ஸ், ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான போட்டியில், 2-வது பாதி நேர ஆட்டத்தின்போது பிரான்ஸ் வீரர் கிரிஸ்மான் பந்தை கோல் எல்லையை நோக்கி கொண்டு சென்றார். அப்போது கோல் எல்லைக்குள் வைத்து ஆஸ்திரேலிய வீரர் கிரிஸ்மானை தள்ளிவிட்டார்.

பிரான்ஸ் வீரர்கள் பெனால்டி வாய்ப்பு கேட்டனர். ஆனால், மைதான நடுவர் பெனால்டி கொடுக்கவில்லை. அதன்பின் VAR டெக்னாலஜி உதவியை நடுவர் கேட்டார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் செய்தது தவறு என்பது தெரிந்து, பெனால்டி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதில் கிரிஸ்மான் கோல் அடித்தார். இதனால், VAR மீதான சலசலப்பு சற்று குறைந்துள்ளது. வீரர்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ரசிகர்களின் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் தொடங்கி இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று இருக்கும் ஒவ்வொரு அணிகள் குறித்தும் தினம் நாம் இங்கே அலசி வருகிறோம். அதன்படி, இன்று பெல்ஜியம் அணியைப் பற்றி பார்க்கலாம்.

கால்பந்து உலகில் பலம் வாய்ந்த அணியில் ஒன்றாக பார்க்கப்படுவது பெல்ஜியம். 1904ம் ஆண்டு முதன் முதலில் கால்பந்து உலகில் பெல்ஜியம் அணி அடியெடுத்து வைத்தது. மே 1, 1904ம் ஆண்டு பிரான்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் சர்வதேச கால்பந்து போட்டியை ஆடியது பெல்ஜியம். இப்போட்டி 3-3 என்ற கோல் கணக்கில் டிராவானது.

ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று மிக முக்கிய தொடர்களிலும் பங்கேற்று பெல்ஜியம் சாதனை படைத்திருக்கிறது. 12 முறை உலகக் கோப்பை கால்பந்து தொடரிலும், 5 முறை UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப் தொடரிலும் மற்றும் இரண்டு முறை ஒலிம்பிக் தொடர் என அனைத்திலும் பெல்ஜியம் அணி பங்கேற்று இருக்கிறது. இதில், 1920ல் நடந்த ஒலிம்பிக் தொடரில், பெல்ஜியம் பட்டம் வென்றிருந்தது.

உலகக் கோப்பையை பொறுத்தவரை இதுவரை சாம்பியன் ஆனதில்லை. 1986ல் நடந்த உலகக் கோப்பையில் 4வது இடம் பிடித்ததே, பெல்ஜியம் அணியின் ஆகச்சிறந்த செயல்பாடாகும். கடந்த 2014ம் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறி, 6வது அணியாக தொடரை நிறைவு செய்தது பெல்ஜியம். இந்த நிலையில், தற்போது மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2018 உலகக் கோப்பையில் பெல்ஜியம் களமிறங்கியுள்ளது.

2018 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ள பெல்ஜியன் அணி வீரர்கள் விவரம்,

கோல் கீப்பர்கள்:

திபட் கோர்டோய்ஸ், சைமன் மிக்நோலட், கோயன் கேஸ்டீல்ஸ்.

டிஃபென்டர்:

டோபி ஆல்டர்வைரல்ட், தாமஸ் வெர்மேலன், வின்சென்ட் கொம்பேணி, ஜேன் வெர்டன்கென், தாமஸ் மியூநிர், டெட்ரிக் பொயாட்டா.

மிட்ஃபீல்டர்:

ஆக்சல் விட்ஸல், கெவின் டி புருய்ன், மரோனே ஃபெலைனி, யானிக் கராஸ்கோ, யோரி டைலிமேன்ஸ், அட்னன் ஜனுஜஸ், மௌஸா டெம்பலே, நேசர் சட்லி, லியாண்டர் டென்டோன்கர்.

ஃபார்வேர்ட்ஸ்:

ரொமேலு லுகாகு, ஈடன் ஹசார்ட் (கேப்டன்), டிரைஸ் மெர்டன்ஸ், தோர்கன் ஹசார்ட், மிச்சி பாட்ஷுயாயி.

தலைமை பயிற்சியாளர் – ரோபெர்டோ மார்டிநெஸ்.

இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. எப்போதுமே சிறந்த அணியைக் களமிறக்கும் பெல்ஜியம், இந்த முறை முழுமையான அணியாகவும் இருக்கிறது. பெரும்பாலான வீரர்கள் ப்ரீமியர் லீக் தொடரில் முத்திரை பதித்தவர்கள். ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா என எல்லோருமே ஸ்டார் பிளேயர்கள். பயிற்சியாளர் ராபர்டோ மார்டினஸ் அந்த அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பவர் என்றே கூறலாம்.

ப்ரீமியர் லீக் அணிகளுக்கு மேனேஜராக இருந்தபோது, சுமாரான பிளேயர்களையும் சிறந்த டெக்னிக்கல் வீரர்களாக மாற்றியவர் ராபர்டோ. பெல்ஜியம் அணியிடம் இதுவரை இல்லாத சிறந்த பெர்ஃபாமன்சை இவரது பயிற்சியின் கீழ் எதிர்பார்க்கலாம்.

பெரும்பாலான தொடர்களில் தவறாமல் கலந்து கொண்டாலும், கோப்பை என்பது மட்டும் கனவாகவே இருப்பதால், இம்முறை நிச்சயம் அதனை ருசித்து விட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக உள்ளது.

‘G’ பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம், லீக் சுற்றில் இங்கிலாந்து, துனீசியா, பனாமா ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. இன்று (ஜூன் 18) தனது முதல் போட்டியில் பனாமா அணியுடன் பெல்ஜியம் மோதுகிறது. மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள பனாமா உலகக் கோப்பை தொடருக்கு முதன் முறையாக தகுதிப் பெற்றுள்ளது.

இதனால், நிச்சயம் இந்தப் போட்டியில் பெல்ஜியம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close