ஆசைத் தம்பி
ஃபிபா உலகக் கோப்பை காலபந்து தொடரில், நேற்று இரவு நடந்த மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம், இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
3-4-3 எனும் ஃபார்மேஷனில் பெல்ஜியம் களமிறங்கியது.
3-5-2 எனும் ஃபார்மேஷனில் இங்கிலாந்து களமிறங்கியது .
இங்கிலாந்து அணியில் நேற்று ஏகப்பட்ட மாறுதல் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக, இங்கிலாந்தின் மிட் பீல்ட் அப்படியே மாற்றப்பட்டு இருந்தது. ஐந்து வீரர்கள் புதிதாக களமிறங்கினர். நேற்று விளையாடிய இங்கிலாந்து அணி வீரர்களுடைய வயதின் சராசரி 25 ஆண்டுகள் 174 நாட்கள் ஆகும். உலகக் கோப்பை வரலாற்றில் மிக இளமையான இங்கிலாந்து பிளேயிங் XI அணி இதுவேயாகும்.
ஆட்டம் தொடங்கிய 4வது நிமிடத்திலேயே பெல்ஜியமின் தாமஸ் மியூனர் முதல் கோல் அடித்து அசத்தினார். இவருக்கு அரையிறுதிப் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்ததால் விளையாடவில்லை. இந்நிலையில், தடை விலகி நேற்று களமிறங்கிய உடனேயே கோல் அடித்து அசத்தினார். இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணியின் 16 வது கோல் இதுவாகும்.
ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு இரண்டாவது கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தவறான ஹீஸ் பாஸ் காரணமாக அந்த கோல் மிஸ் ஆனது.
ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் லோஃப்டஸ்-சீக் தலையால் முட்டி கோல் அடிக்க முயல, பெல்ஜியம் வீரர் தடுத்ததால், இங்கிலாந்தின் முதல் வாய்ப்பு பறிபோனது.
உடனே, 16 வது நிமிடத்தில் பெல்ஜியமின் லுகாகோ, இங்கிலாந்து டிபன்சை அபாரமாக முறியடித்து முன்னேறி, கோல் போஸ்ட்டை நெருங்கினார். ஆனால், அவர் கிக் செய்த பந்தை இங்கிலாந்து கீப்பர் தடுக்க மீண்டும் ஒரு கோல் மிஸ்.
முதல் 17 நிமிடங்கள் வரை, இங்கிலாந்தின் பலம் வாய்ந்த டிபன்சை பெல்ஜியம் வீரர்கள் அசைத்துப் பார்த்தனர் என்றே கூறலாம். ஆட்டத்தின், 19வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு கார்னர் வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அதிலும், இங்கிலாந்து கோல் அடிக்க தவறியது.
குறிப்பாக, 23 வது நிமிடத்தில், ஸ்டெர்லிங் பாஸ் செய்த பந்தில் மிக எளிதான கோல் அடிக்கும் வாய்ப்பை இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் தவறவிட்டார். ரசிகர்களுக்கு உண்மையிலேயே இது பெரிய ஷாக் தான். அதுமட்டுமின்றி, அரையிறுதிப் போட்டியில், குரோஷியாவிற்கு எதிராக விளையாடிய ஸ்டெர்லிங், இரண்டு முறை தானே கோல் அடிக்க வேண்டும் என்று நினைத்து, நல்ல வாய்ப்புகளை வீணடித்தார். முதல் பாதியிலயே அன்று அவருக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவரே அடிக்க நினைத்து தவறவிட்டார். ஆனால், நேற்றைய போட்டியில் தனது தவறை திருத்திக் கொண்டு, நிறைய முறை சரியான பாஸ் செய்து ஆடினார். இதை அன்றே செய்திருந்தால், இங்கிலாந்து வென்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆட்டத்தின் 33 வது நிமிடத்தில், பெல்ஜியம் அணிக்கு முதல் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதில், பெல்ஜியம் வீரர் ரிவர்ஸ் கோல் அடிக்க முயன்றார். ஆனால், பந்து கோல் கம்பத்திற்கு மேலே சென்றது. கொஞ்சம் கீழிறங்கி சென்று இருந்தால், பெல்ஜியம் அணிக்கு இரண்டாவது கோல் கிடைத்திருக்கும்.
பெல்ஜியம் அணி சிறப்பாக ஆடினாலும், லுகாகோ மற்றும் ஹசார்ட் இடையே நல்ல புரிதல் இல்லை என்பது தெரிந்தது. அரையிறுதிப் போட்டியிலும் இந்த பிரச்சனை இருந்தது. இந்தப் போட்டியிலும் அது தொடர்ந்தது.
முதல் பாதியின் முடிவில் 2 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. இருப்பினும், முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என முன்னிலை வகித்தது.
முதல் பாதியில் இருந்தே பெல்ஜியமின் லுகாகோ கொஞ்சம் ஸ்லோவாக ஆடுகிறாரோ என்று நமக்கு தோன்றியதை மறுக்க முடியவில்லை. அதேபோல், இங்கிலாந்து வீரர்களில் சிலர், பாஸ் சரியாக செய்யாமல், தாங்களே கோல் அடிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ என்றும் தெரிந்தது. இங்கிலாந்து இளம் அணியினரை கொண்டிருக்கிறது என்பதால், ஒவ்வொருவரும் தங்களது தனித்தன்மையை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு விளையாடியது போல் தெரிந்தது. இதனால், கோல் அடிக்கும் வாய்ப்புகள் தான் பறிபோனது. இளம் வீரர்கள் என்பதால், இதனை ஒரு படிப்பினையாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என நம்பலாம்.
இரண்டாம் பாதியில், 51வது நிமிடத்தில் பெல்ஜியம் கேப்டன் ஹசார்டை பந்தை அடிக்கவிடாமல், தடுத்ததற்காக இங்கிலாந்து வீரர் ஸ்டோன்ஸ்க்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.
ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் கோல் அடிக்க முயன்று கீழே விழுந்தார். இதையடுத்து, பெல்ஜியம் கோல் கீப்பர் அவரை தூக்கி விட்ட போது, அரங்கத்தில் பலத்த கைத்தட்டல் ஒலித்தது.
நேற்றைய போட்டியில், பெல்ஜியம் வீரர் லுகாகு எளிதான ஒரு கோல் வாய்ப்பை மிஸ் செய்தது மட்டுமின்றி, அவரது ரன்னிங் மெதுவாக இருந்தது. இதனால், ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் லுகாகு வெளியேற்றப்பட்டார்.
ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் நடந்த சம்பவம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கிலாந்து வீரர் டயர் பெல்ஜியம் கோல் கீப்பரையும் ஏமாற்றி கோல் அடிக்க, அதனை பெல்ஜியம் வீரர் அற்புதமாக பாய்ந்து தடுத்தார். கோல் போஸ்ட்டின் கோட்டிற்கு கொஞ்சம் வெளியே அதனை பாய்ந்து தடுத்தார். இங்கிலாந்தின் மிக மிக எளிதான கோல் வாய்ப்பு பறிபோனது.
ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் இங்கிலாந்தின் மேகுயருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் சிறப்பாக கவுன்ட்டர் அட்டாக்கிங் செய்த பெல்ஜியம் வீரர் தாமஸ் மியூனர், கோல் போஸ்ட்டை நோக்கி அற்புதமான ஷார்ட் அடித்தார். அதை மிகவும் சிரமப்பட்டு இங்கிலாந்து கோல் கீப்பர் தடுத்தார்.
பரபரப்பான சூழ்நிலையில், இரண்டு முறை கோல் வாய்ப்பை தவறவிட்ட பெல்ஜியம் கேப்டன் ஹசார்ட், ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் கோல் அடிக்க, பெல்ஜியம் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணியின் 17வது கோலாகும்.
இதன்பின் இறுதிவரை, இங்கிலாந்து அணியால் கோல் அடிக்கவே முடியவில்லை. இதனால், 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வென்று, இந்த உலகக் கோப்பையில் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே உலகக் கோப்பையில் இரு முறை இங்கிலாந்தை வீழ்த்திய அணி என்ற பெருமையையும் பெல்ஜியம் பெற்றுள்ளது. லீக் போட்டியில் 1-0 என வெல்ல, நேற்றைய போட்டியில் 2-0 என வென்றுள்ளது.
1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே பெல்ஜியம் அணியின் சிறந்த நிலையாக இருந்தது. தற்போது, அதனை முறியடித்து, பெல்ஜியம் அணி மூன்றாவது இடத்தோடு உலகக் கோப்பையை நிறைவு செய்துள்ளது.
2010ல் ஸ்பெயின் அணியை எல்லோரும் விரும்பியது போல, இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணியை அனைவரும் நேசித்தனர். திறமைகள் பல கொட்டிக் கிடந்தும், இறுதிப் போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது பலதரப்பட்ட ரசிகர்களையும் வேதனைக்கு உள்ளாக்கியது.
இங்கிலாந்தை பொறுத்தவரை, கடைசியாக 1966ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதைத் தவிர, 1990ல் நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. இப்போது மீண்டும் நான்காம் இடத்தையே இங்கிலாந்து பிடித்துள்ளது. ஆறுதலான விஷயம் என்னவெனில், 28 வருடங்களுக்கு பிறகு, உலகக் கோப்பையில் அரையிறுதி வரை இங்கிலாந்து முன்னேறியது தான்.
பெல்ஜியம் வீரர்கள் வெற்றிப் பெற்றாலும், அவர்கள் முகத்தில் துளி கூட சந்தோஷமில்லை என்பதே வருத்தமான உண்மை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.