ஃபிபா உலகக் கோப்பைக் கோப்பையில் இன்றும் நடக்கும் மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
ரஷ்யாவில் நடந்து வரும் 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நாளை (ஜூலை 15) நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, குரோஷியாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில், பெல்ஜியம்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இப்போட்டி நடைபெறுகிறது.
உலகக் கோப்பை தொடர் தொடங்கியதில் இருந்தே யாரும் எதிர்பார்க்காத வகையில் அபாரமாக ஆடிய பெல்ஜியம் அணி, கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் பிரேசிலையே வீழ்த்தி மிரட்டியது. ஆனால், அரைஇறுதியில் பிரான்சிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.
பிரான்ஸ் வெற்றிப் பெற்றாலும், பெல்ஜியம் அணி மீதான ரசிகர்கள் ஆதரவு குறையவேயில்லை. 1986-ம் ஆண்டு உலகக் கோப்பையில் 4-வது இடத்தை பிடித்ததே பெல்ஜியம் அணியின் சிறந்த நிலையாக இருக்கிறது. அந்த உலகக் கோப்பையில் அரை இறுதியில் அர்ஜென்டினாவிடம் 0-2 என்ற கணக்கில் தோற்று இருந்தது. உலகக் கோப்பையை பொறுத்தவரை இதுவரை சாம்பியன் ஆனதில்லை. கடந்த 2014ம் உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முன்னேறி, 6வது அணியாக தொடரை நிறைவு செய்தது பெல்ஜியம்.
ஹசார்ட், டி ப்ருய்ன், லுகாகு, வெர்டோங்கன், கோர்டுவா ஆகிய வீரர்கள் பெல்ஜியம் அணியில் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். இது தவிர மரோனே ஃபெலைனி, ஆக்சல் விட்ஸல், வின்சென்ட் கொம்பேணி, நேசர் சட்லி போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, அரைஇறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவிடம் தோற்று இறுதிசுற்று வாய்ப்பை நழுவ விட்டது. எனினும், உலகக் கோப்பைத் தொடரில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இங்கிலாந்து, இவ்வளவு தூரம் முன்னேறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கடந்த 64 வருட கால்பந்து வரலாற்றில், இங்கிலாந்து அணி 17 முறை உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 1966ல் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் மட்டும் இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த இறுதிப் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதைத் தவிர, 1990ல் நடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடம் பிடித்தது. ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மிகச் சிறந்த செயல்பாடுகள் இந்த தொடர்களில் மட்டும் தான் அரங்கேறியது.
இந்தநிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்கான போட்டியில் வெல்லும் முனைப்புடன் உள்ளது இங்கிலாந்து. இங்கிலாந்து கேப்டன் ஹேரிகேன் இதுவரை 6 கோல்கள் அடித்து தங்க ஷூ வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருக்கிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் இரு கோல்கள் அடிக்கும் பட்சத்தில் 2002-ம் ஆண்டு 8 கோல்கள் அடித்து சாதனை படைத்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவின் சாதனையை சமன் செய்யக்கூடும். இங்கிலாந்து வீரர்களில் இதற்கு முன்னர் கடந்த 1986-ம் ஆண்டு கேரி லினேகர் (6 கோல்கள்) தங்க காலணி விருது வென்றிருந்தார். தற்போது ஹேரி கேன் இந்த விருதை வென்றால் 2-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெறுவார்.
இவரைத் தவிர, ஹாரி மேக்குயர், டெலி அலி, ஜோர்டான் ஹென்டர்சன், லிங்கார்ட் உள்ளிட்டோர் இங்கிலாந்து அணிக்கு பலம் சேர்க்கின்றனர். ஏற்கனவே லீக் சுற்றில் இங்கிலாந்து அணி 0-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோற்று இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.
இங்கிலாந்து பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் கூறுகையில், ‘அரைஇறுதியில் ஏற்பட்ட தோல்வியால் எங்களது வீரர்களுக்கு கடந்த சில நாட்கள் மனரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. ஒரு வழியாக வீரர்கள் நேற்று மீண்டும் பயிற்சியை தொடங்கினர். இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியத்தின் பயணம் பிரமாதமாக இருந்தது. வெற்றியுடன் இந்த தொடரை முடிக்க அவர்கள் விரும்புவார்கள். நாங்களும் அப்படித் தான். இந்த உலகக் கோப்பையில் நாங்கள் முன்னணி அணிகளை வீழ்த்தவில்லை. அதனால் இந்த வாய்ப்பை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.
முன்னதாக, இங்கிலாந்து ஊடகங்கள் அரையிறுதிப் போட்டியில் குரோஷிய அணியை 'களைப்படைந்த அணி' என்று கிண்டல் செய்தன, ஆனால், இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெல்ல, அந்த அணியின் லூக்கா மோட்ரிச் அளித்த பேட்டியில், "இங்கிலாந்து மீடியாக்கள் எங்களைப் பற்றியே பேசிக்கொண்டேயிருந்தனர். குரோஷியாவை குறைத்து மதிப்பிட்டனர். இது மிகப்பெரிய தவறு என்று இப்போது புரிந்திருக்கும்.
அவர்கள் பேசிய அத்தனைப் பேச்சையும் எங்களுக்கான ஊக்கமருந்தாக எடுத்துக் கொண்டோம். நாங்கள் அவர்கள் எழுதுவதையும் பேசியதையும் கவனித்துக் கொண்டிருந்தோம், அதன் பிறகு, யார் களைப்படைந்த அணி என்று காட்டுவோம் என்று உறுதிபூண்டோம். அவர்கள் எதிராளியை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், இங்கிலாந்து ஊடகம் இன்றைய மூன்றாம் இடத்திற்கான ஆட்டம் குறித்து பெல்ஜியம் அணியை விமர்சனம் ஏதும் செய்யாமல் அடக்கி வாசிக்கிறது.
இதுவரை, பெல்ஜியம் அணி 22 முறை இங்கிலாந்துடன் மோதியுள்ளது. இதில், இரண்டு போட்டியில் மட்டும் பெல்ஜியம் வென்றுள்ளது. அந்த ஒரு வெற்றியும், இந்த உலகக் கோப்பையில் பெற்றதாகும். இதனால், மீண்டும் இன்று வெற்றிப் பெற்று 3வது இடம் என்ற கவுரவத்தோடு நாடு திரும்பும் முனைப்பில் பெல்ஜியம் உள்ளது.
இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. தமிழில் சோனி இ.எஸ்.பி.என். சேனலில் ரசிகர்கள் போட்டியை காணலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.