scorecardresearch

ஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்?

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.255 கோடி பரிசு

ஃபிபா உலகக் கோப்பை 2018: சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றப் போவது யார்?
FIFA World cup Final: France vs Croatia

ஆசைத் தம்பி

ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி ரஷ்யாவில் தொடங்கியது. சுமார் ஒருமாத காலம் நடந்த இந்த தொடர் இன்றுடன் (ஜூலை 15) முடிவுக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மாஸ்கோ நகரில் அமைந்துள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில்,  இன்று நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவூதி அரேபியா, தென் கொரியா, எகிப்து, மொரோக்கோ, நைஜீரியா, செனெகல், துனிசியா, கோஸ்டா ரிக்கா, மெக்சிகோ, பனாமா, அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா, பெரு, உருகுவே, பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, போலந்து, போர்ச்சுகல், ரஷிய, செர்பியா, ஸ்பெயின், சுவீடன், ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட 32 அணிகள் இந்த தொடரில் களம் இறங்கின. போட்டியை நடத்தும் நாடு என்பதால் ரஷ்யா நேரடியாக உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.

பலக் கட்ட சோதனைகளுக்குப் பிறகு பிரான்ஸ் மற்றும் யாருமே எதிர்பார்க்காத குரோஷியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.

பிரான்ஸை பொறுத்தவரை, இதுவரை ஒரேயொரு முறை மட்டுமே ஃபிபா உலகக் கோப்பையை வென்றுள்ளது. அதேசமயம், UEFA ஐரோப்பிய சாம்பியன்ஷிப்ஸ் பட்டத்தை இரு முறையும், ஒரு முறை ஒலிம்பிக் பட்டதையும், இருமுறை ஃபிபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையையும் வென்றுள்ளது. ஃபிபா அங்கீகரிக்கும் மூன்று முக்கிய தொடர்களிலும் கோப்பை வென்ற நான்கு அணிகளுள் பிரான்ஸும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 1930ம் ஆண்டு முதன்முறை உலகக் கோப்பை தொடர் தொடங்கப்பட்ட போது, அதில் பங்கேற்ற நான்கு ஐரோப்பிய அணிகளில் பிரான்ஸும் ஒன்று. ஆறு முறை தகுதிச் சுற்றோடு வெளியேறி இருக்கிறது. குறிப்பாக, இதுவரை நடந்த அனைத்து உலகக் கோப்பைத் தொடரிலும் தவறாமல் பங்கேற்ற மூன்று அணிகளில் ஒன்றாக பிரான்ஸும் திகழ்கிறது.

1998ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் டைடியர் டெஸ்சேம்ப்ஸ் தலைமையில் களமிறங்கிய பிரான்ஸ், ஜிடேனின் உதவியோடு முதன் முதலாக தனது உலகக் கோப்பையை ருசித்தது. 2006ல் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதில் 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் தோல்வி அடைந்தது பிரான்ஸ்.

இந்நிலையில், பிரான்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

உலகத் தர வரிசையில் 7-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் அணி ஃபார்வேர்ட்ஸ், மிட் ஃபீல்ட், டிஃபென்ட் என அனைத்திலும் சமபலத்துடன் உள்ளது. எம்பாப்வே, கிரீஸ்மேன், போக்பா, ஆலிவர் கிரவுட் போன்ற முன்னணி வீரர்கள் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளனர்.

பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், பெரும்பாலும் டிபன்ஸ் செய்தே பிரான்ஸ் வென்றது. லுகாகு, ஹசார்ட் போன்ற பெல்ஜியம் வீரர்களை சிறப்பாக செயல்படவிடாமல் டிபன்ஸ் செய்து முடக்கியே போட்டது பிரான்ஸ். இதனால், சில விமர்சனங்களையும் பிரான்ஸ் சந்திக்க நேர்ந்தது.

குரோஷியா அணியைப் பொறுத்தவரை, லீக் சுற்றில் நைஜீரியா, அர்ஜென்டினா, ஐஸ்லாந்து ஆகிய அணிகளை அபாரமாக வீழ்த்தியது. 2-வது சுற்றில் டென்மார்க்கையும், கால்இறுதியில் ரஷ்யாவையும் பெனால்டி ஷூட்- அவுட் முறையிலும், அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கிலும் வென்றுள்ளது.

1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில், அரை இறுதி வரை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

மிட் ஃபீல்டில் குரோஷியா சிறந்து விளங்குகிறது. கேப்டன் லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச் ஆகியோர் சிறந்த நடுகள வீரர்களாக உள்ளனர். அதேபோல், மரியோ மான்ட்ஜூகிச், டேஜன் லோவ்ரென் ஆகியோரும் சிறந்த ஃபார்மில் உள்ளனர். நடப்பு தொடரில் அந்த அணியில் இதுவரை 8 வீரர்கள் கோல் அடித்துள்ளனர்.

இவ்விரு அணிகளும் உலகக் கோப்பையில் இதற்கு முன்பு 1998ம் ஆண்டு அரைஇறுதியில் சந்தித்து இருந்தது. இதில் பிரான்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இதற்கு பழித் தீர்க்கும் வகையில் ஆடும் முனைப்பில் குரோஷியா உள்ளது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் உள்ளதால், வெற்றி யாருக்கு? என்று கணிப்பது வல்லுனர்களுக்கே சிரமமாக உள்ளது.

சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.257 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.191 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்திய நேரப்படி இன்று இரவு 08.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியின் லைவ் ஸ்கோர் அப்டேட்டுகளை ஐஇதமிழ்-ல் நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Fifa news download Indian Express Tamil App.

Web Title: Fifa 2018 france to meet croatia in final today