ஃபிபா உலகக் கோப்பை 2018: அரையிறுதியில் பிரான்ஸிடம் எதனால் தோற்றது பெல்ஜியம்?

பெல்ஜியம் நேற்று தோற்றதற்கு, லோரிஸ் தான் மிக முக்கிய காரணம்

ஆசைத் தம்பி:

21-வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதிப் பெற்று இருந்தன. இதில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான முதல் அரை இறுதி ஆட்டம் நேற்று இரவு (ஜூலை 10) நடைபெற்றது. இதில், நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே சந்திக்காத பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி, காலிறுதிப் போட்டியில் உலக சாம்பியன் பிரேசிலையே விரட்டியது. ஆனால், அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் வீழ்ந்தது. பெல்ஜியம் பிரான்ஸிடம் தோற்றதற்கான காரணம் என்னவென்று இங்கு பார்ப்போம்.

ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, முதல் 20 நிமிடங்களுக்கு பெல்ஜியம் அணியே பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் அதிகம் வைத்திருந்தது. தங்கள் அணியின் டிபென்ஸ் சற்று பலவீனமானது என்பதை பெல்ஜியம் வீரர்கள் நன்கு அறிந்திருந்தனர். இதனால், தனது பலமான பார்வேர்ட்ஸ்-ஐ பயன்படுத்தி எப்படியாவது தொடக்கத்திலேயே கோல் அடித்துவிட வேண்டும் என்று பெல்ஜியம் வீரர்கள் முனைப்புடன் ஆடினர்.

ஃபெலைனி, டி ப்ரூய்ன், கேப்டன் ஹசார்ட் என்று வீரர்கள் கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக பெல்ஜியம் ஃபார்வேர்ட் வீரரும் இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணிக்காக அதிக கோல்(4 கோல்) அடித்தவருமான லுகாகுவின் ஆட்டம், சுத்தமாக எடுபடவேயில்லை. அவர் அணியில் இருக்கிறாரா என்ற ரீதியிலேயே இருந்தது அவரது ஆட்டம். குறிப்பாக, முதல் பாதியில் ஒரு கோல் அடிக்க கிடைத்த மிக எளிதான வாய்ப்பை தவறவிட்டார் லுகாகு.

முதல் பாதியில் 23வது நிமிடத்திற்கும் பிறகு பிரான்ஸ் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கியது. பிரான்ஸ் வீரர்கள் பவார்ட், ஜிரவுட், கிரீஸ்மேன், எம்பாம்பே ஆகிய வீரர்கள் அதிகளவில் கோல் போஸ்ட்டை நெருங்கினர். குறிப்பாக, ஜிரவுட்டிற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தும் அதனை வீணடித்தார். இருப்பினும், முதல் பாத்தில் 0-0 என சமநிலையில் இருந்தது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில், தொடர்ந்து பிரான்ஸ் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் விளைவாக, ஆட்டத்தின் 51வது நிமிடத்தில், கிரீஸ் மேன் அடித்த கார்னர் ஷார்ட்டை சாம்யூல் உம்டிடி தலையால் முட்டி கோல் அடிக்க பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. அரங்கம் அதிர பிரான்ஸ் ரசிகர்கள் இதனை கொண்டாடினர்.

இதற்கு பிறகு, பெல்ஜியம் வீரர்கள் தங்களது ஆட்டத்தை மேலும் வேகப்படுத்தினர். எவ்வளவோ முறை கோல் அடிக்க முயற்சித்தும், அதனை பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அபாரமாக தடுத்து நிறுத்தினார். உண்மையில், பெல்ஜியம் நேற்று தோற்றதற்கு, லோரிஸ் தான் மிக முக்கிய காரணம். அவர் பறந்து பறந்து டைவ் அடித்து தடுத்த பந்துகள் சில கோல்களாக மாறியிருக்க வேண்டியவை. அப்படி தடுத்திருக்கவில்லை எனில், நேற்று கதையே வேறு மாதிரியாக இருந்திருக்கும்.

பெல்ஜியம் அணியின் அசுர வேக ஆட்டத்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் அணி தனது டிபென்ட்சை இறுக்கியது. மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், கோல் வாங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால், பெல்ஜியம் அணியால் இறுதி வரை கோல் அடிக்கவே முடியவில்லை. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வெற்றிப் பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

1998ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரில் டைடியர் டெஸ்சேம்ப்ஸ் தலைமையில் களமிறங்கிய பிரான்ஸ், ஜிடேனின் உதவியோடு முதன் முதலாக தனது உலகக் கோப்பையை ருசித்தது. 2006ல் நடந்த உலகக் கோப்பையில் இறுதிப் போட்டி வரை முன்னேறியது. அதில் 5-3 என்ற கோல் கணக்கில் பெனால்டியில் தோல்வி அடைந்தது பிரான்ஸ். இந்நிலையில், தற்போது மூன்றாவது முறையாக பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த உலகக் கோப்பையில் பெல்ஜியம் தான் ஆடிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருந்தது. பெல்ஜியம் அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என்பது பெரும்பாலான வல்லுனர்களின் கணிப்பாக இருந்தது. ஆனால், முக்கியமான அரையிறுதிப் போட்டியில் தோற்றதால் சோகத்துடன் வெளியேறியது பெல்ஜியம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Fifa news in Tamil.

×Close
×Close